Sunday, December 25, 2005

பாமரனுக்கும் இசை சேர வேண்டுமா?

புரிந்து கொள்வது என்பது வேறு. இரசிப்பது என்பது வேறு. புரிந்து கொண்டால் மேலும் இரசிக்க முடியும் என்பதும் உண்மை.

"கர்னாடக இசை எனக்குப் புரியவே மாட்டேன் என்கிறது. ஏன் பாமரனை அடையும் படியாக பாட யாரும் பாட முயற்சி செய்ய மாட்டேன் என்கிறார்கள்" என்று பலரும் அடிக்கடி கூறுகிறார்கள்.

எதற்காக இந்த உயர்ந்த கலை மட்டும் பாமரனைச் சென்றடைய வேண்டும், அந்தப் பாமரன் தனது அறிவையும், இரசனைத்தன்மையயும் உயர்த்திக் கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் பட்சத்தில்.

னேர் நேர் தேமா; நிரை நேர் புளிமா; நேர் நிரை கூவிளம்; நிரை நி¨ரி கரு விளம் என்றெல்லாம் அலகிட்டு வாய்பாடு கூறி, குறட்பாக்களையும், வெண்பாக்களயும் இரசித்துக் கொண்டிருக்கும் புலவர்கள் கூட்டத்திலும், அவர்தம் பாக்களை இரசிக்கும் மக்களிடமும் சென்று, யாராவது, "தலிவா; "செல் அடிச்சா ரிங்கு; சிவாஜி அடிச்சா சங்கு'ன்னு புரியராமாறி சொல்லு; நேர் நேர் தேமா அப்படீ இப்படீன்ன்னு சொல்லிக் கிட்டேயிருந்தா, இந்த எலக்கியமெல்லம் அழிஞ்சிடும்" என்று சொன்னால் அவர்கள் என்ன சொல்லுவார்கள்.

மௌனியிடமோ, சு.ராவிடமோ, ஆதவனிடமோ சென்று, நீங்கள் எழுதுவது எனக்கு ஒன்றும் புரியவில்லை. பாமரனைச் சென்று அடையுமாறு, ராஜேஷ் குமார் போலவோ, பட்டுக் கோட்டை பிரபாகர் (no offence meant; they are for a diffrent audience) போலவோ ஏன் எழுத மாட்டேன் என்கிறீர்கள் என்று சொன்னால் அவர்கள் என்ன சொல்லக்கூடும்.

பரதத்திலும் கூடப் புதுமையாக என்று செய்தாலும், ஒரு சில கருத்துக்கள்தானே செய்ய முடியும். என்னுடையது மிகவும் புதுமையானது மற்றும் இளஞர்களுக்கானது என்று கூறி, ISO 9000, CMM LEVEL-5, BIO-DIESEL என்ற தலைப்புகளில் ஆட ஆரம்பித்தால் எப்படி இருக்கும்?

மாற்றங்கள் தேவைதான்; ஆனால் ஒரு எல்லைக் கோட்டுக்குள்ளேயே ஆட்டத்தை மாற்றி விளையாட முடியும். இவ்வாறும் புதுமைகள் செய்தவர்கள் பலர் உண்டு. உதாரணாம் வருமாறு:-

டி.வி.கோபாலகிருஷ்ணன அவர்கள் ஒரே கச்சேரியில் முதல் பாதியில் கர்னாடிக் கச்சேரியும், இடை வேளைக்குப் பிறகு ஹிந்துஸ்தானியும் செய்வார். இதில் இன்னுமோர் விஷெசமென்றால், முதல் பாதியில் சட்டை, வேஷ்டியுடன் வரும் அவர் அடுத்த பாதியில், பைஜாமா குர்தாவுடன் வருவார்.

சமீபத்தில் ஒரு வீணைக்கலஞர் சொன்னார். "புதுமையாக ஏதாவது பண்ணுங்கள்; புதுமையாக ஏதாவது பண்ணுங்கள்" என்று நச்செரிக்கிறார்கள். "வீணையைத் தலை கீழாக வேண்டுமென்றால் பிடித்துக் கொண்டு வாசிக்கலாமோ என்னவோ" என்றார். அவர் ஏற்கெனவே வீணையில் திரைப் பாடல்கள் வாசித்து வருபவர்தான். அதற்காக, கர்னாடக இசையில் அதை எதிர்பார்க்க முடியுமா? உன்னி, பாம்பே ஜெயஸ்ரீ, ஜேஸ¤தாஸ் போன்றோர் சினிமாவில் பாடுபவர்கள்தான். அதற்காக, கர்னாடக இசையில் சினிமாப் பாடலை எதிர்பார்க்க முடியுமா?

எனக்கு ஒரு கலை புரிவதில்லை என்று சொல்லுவது கலையின் குற்றமா? கலஞனின் குற்றமா? இரசிகனின் குற்றமா? "எனக்குப் புரியவில்லை; ஆகவே விடுகின்றேன் சாபம் ; உங்கள் கலை அழிந்து விடும்" என்பது னியாமா?

-சிமுலேஷன்