Friday, December 30, 2005

இரட்டை வயலினில் இராகப் ப்ரவாகம்

இரட்டை வயலினில் இராகப் ப்ரவாகம்
-------------------------------------------------

எம்.ஜி.ஆர் அவர்கள் ஒர் சிறந்த இசை இரசிகர் என்பது அவர்தம் படப் பாடல்களினாலேயே விளங்கும். ஒரு முறை அவர் தூரதர்ஷனில் வயலின் இசைக் கச்சேரி ஒன்று கேட்டுவிட்டு, அந்த வயலின் கலைஞர்களுக்கு ஓர் பாராட்டுக் கடிதம் எழுதினார். சில நாட்களில் அவர்களை தமிழக அரசின் அரசவைக் கலைஞர்களாகவும் நியமனம் செய்தார். அப்புகழுக்குரியவர்கள் யாரென்றால், பிறவிக் கலஞர்களான (prodigy) கணேஷ், குமரேஷ் சகோதரர்ளாகும்.

னேற்றைய தினம், நாரத கான சபாவில், கணேஷ், குமரேஷ் இரட்டை வயலின் கச்சேரி சென்னை இரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. னாட்டை. கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீராகம் அடங்கிய பஞ்சராக மாலிகா வர்ணத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் துவங்கிய இந்த வர்ணத்தை இயற்றியவர் குமரேஷாம். இரண்டாவதாக சிந்துனாமக்ரியாவில் 'தே
வாதி தே சதாசிவா' என்ற பாடலும், அதனையடுத்து சுப்பராய ஸாஸ்திரியின் முகாரி இராகப் பாடலும் தொடர்ந்தது.

மூன்றாவது பாடலுக்குப் பிறகு, முப்பது பேர் கலையத் துவங்க, கணேஷ், Good night to all the friends who are leaving என்று சிரித்துக் கொண்டே சொன்னது இரசிக்கும்படி இருந்தது. அடுத்ததாக வந்தது 'இராஜராஜேஸ்வரி திரிபுர சுந்தரி' என்ற பூர்ணசந்த்திரிகா இராகப் பாடல்.

ஐந்தாவதாக இவர்கள் வாசித்தது ஒரு புதுமையான உருப்படியாகும். ஸாஹித்யம் ஏதுமின்றி, இராகம் மட்டுமே வாசித்தனர். எடுத்துக் கொண்ட இராகம் தர்மவதி. தாளம் கண்டசாபு. இதற்கு 'இராக ப்ரவாகம்' என்று பெயரிட்டிருந்தனர். தர்மவதியின் எல்லாப் பரிமாணங்களையும் எடுத்துக்காட்டும் வண்ணம் அமைந்திருந்திருந்தது இது. மிருதங்கமும், கடமும், கஞ்சிராவும் ஒ
வ்வொன்றாக, கை கோர்த்து வந்த அமைப்பு அமர்க்களமாக அமைந்திருந்தது. சபையில் நிலவிய பரிபூரண அமைதி, இரசிகர்கள் தர்மவதியில் ஒன்றிவிட்டார்கள் என்பதற்கு சாட்சியாய் இருந்தது.

பின்னர் வாகதீஸ்வரியில் பாடிய ஒர் பாடலுக்கு தனி ஆவர்த்தனம் கொடுக்கப்பட்டது. அடுத்தாக அகிலமும் அறிந்த, 'அகில¡ண்டேஸ்வரி ரட்சமாம்". ஜுஜாவந்தியில். ரேவதி, சிவரஞ்சனி, நாட்டை, வாஸந்தி, குந்தளவராளி அடங்கிய இராக மாலிகாவின் வித்தியாசமான பிடிப்புகள் கணேஷ், குமரேஷ் அவர்களுக்கே உரித்தானது.

கணேஷ் அவர்களிடம் ஒர் குணம். திடீரென்று வயலினை ஓரம் கட்டி விட்டு, பாட்டுப் பாட ஆரம்பித்து விடுவார். இரசிகர்களுக்கும் இது ஓர் எதிபாராத விருந்தாகவே அமைந்து விடுகின்றது. 'பள்ளி பள்ளி இராமா' என்ற பாடலை அவர் முழுமையாகப் பாடியதை சபை இரசிக்கவே செய்தது.

பெஹாக்கில் ஒரு அருமையான பாடல். அருமையான வாசிப்பு. நடனம் தெரிந்த எவரேனும் இருந்திருந்தால் அவர்கள் வாசித்த பெஹாக்கிற்கு நடனமாடத் துடித்திருப்பர்கள். சிந்து பைரவியில் ஒரு வித்தியாசமான வாசிப்புடன் வாசித்து, நிகழ்ச்சியை நிறைவு செய்தனர் கணேஷ்,குமரேஷ் சகோதரர்கள்.

இரவு ஒன்பது மணி முப்பது நிமிடங்களுக்கு முடிந்த இரட்டை வயலின் நிகழ்ச்சியில், இளைஞர்கள் பலர் இறுதி வரை இருந்து இரசித்தது ஓர் ஆரோக்கியமான விஷயம்.

நடு இரவில் இசை - புத்தாண்டை வரவேற்க

கர்னாடிகா.காம் மற்றும் ம்யூசிக் அகாடெயின் ஆதரவில் இன்று இசை நிகழ்ச்சிகளுடன், புத்தாண்டு வரவேற்கப்படவிருக்கின்றது.
குழு இசையும், ஒலி, ஒளிக் காட்சிகளும், வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகளும் இடல் பெறும் இந்த இசை நிகழ்ச்சியில், கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரபலங்கள் பங்கேற்பதாகக் தெரிகின்றது.

இடம்: சென்னை ம்யூசிக் அக்கடெமி
னேரம்: 11 pm. - 1 am
மேலதிக விபரங்களுக்கு: 42124130 / 98400 15013

இது ஒரு ALL AR WELCOME நிகழ்ச்சி