Thursday, August 31, 2006

சார் கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - தேன்கூடு போட்டி

"குட் மார்னிங் சார்"

"குட் மார்னிங்"

"எது வரைக்கும் சார் போறீங்க?"

"கிண்டி ஸ்டேஷன் வரைக்கும். என்ன விஷயம்?"

"சார் எனக்கு அலெக்சாண்டர் ஸ்கொயர் வரைக்கும் போகணும்"

"ஓ"

"அங்கே, இன்னிக்கி ஒரு இன்டெர்வியூ"

"ஒகே. ஆல் த பெஸ்ட்"

"சார்..."

"என்ன?.."

"கொஞ்சம் லிப்ட் கொடுக்க முடியுமா?. நானே நடந்து போகலாமுன்னுதான் பார்த்தேன். நேத்திக்கி கால்ல ஒரு சுளுக்கு ஆகி விட்டது. டாக்டர் ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துக்கச் சொல்றாரு. ஆனா, இன்னிக்கின்னு பாத்து இந்த இன்டெர்வியூ. இது எனக்கு முக்கியமான இன்டெர்வியூ சார். ப்ளீஸ் லிப்ட் கொடுங்க சார்.

"!!! ??? @@@ ####"

"அட்லீஸ்ட், இந்த ரோடு எண்ட் வரைக்கும் லிப்ட் கொடுத்தால் போதும் சார்"

"@@@ (((((( !!!! @@@"

"சார் பாஸ்ட்டா நடக்காதீங்க சார். உப்பு மூட்டை தூக்கிறது ரொம்பக் கஷ்டம் ஒண்ணுமில்லே சார். ப்ளீஸ். என்னை முதுகிலே உப்பு மூட்டையாத் தூக்கிட்டுப் போய் இந்த ரோடு எண்ட்லே விட்டுடுங்க சார்"

"ஏன் சார் ஒடறீங்க. சார்... சார்'

(முன்னொரு நாள் ராஜ் டி.வியில் பார்த்த gag type நிகழ்ச்சியிலிருந்து)

- சிமுலேஷன்

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 03 - கீரவாணி

தமிழ்த் திரையிசையிலே அதிகம் பயன்படுத்தப்பட்ட இராகங்களில் கீரவாணியும் ஒன்று. கீரவாணி, திரைப்படத் இசையமைப்பாளர்கள் மட்டுமின்றி, எந்த ஒரு இசைக் கலைஞருக்கும் பிடித்த இராகமாகும். இதனை மேல் நாட்டு இசையிலே, "ஹார்மோனிக் மைனர் ஸ்கேல்" (Hamonic Minor Scale) என்று கூறுவார்கள். சிம்மேந்திர மத்தியம் என்ற இராகத்திற்கும், கீரவாணிக்கும், மத்தியமம் மட்டுமே வித்தியாசமாகும். கீரவாணியில் சுத்த மத்தியமும் (ம1), சிம்மேந்திர மத்திய இராகத்திற்கு பிரதி மத்யமும் (ம2) வரும். தமிழ்த் தியாகைய்யர் எனப்படும், பாபநாசம் சிவன் அவர்களின், "தேவி நீயே துணை" என்ற பிரபலமான கீர்த்தனை, கீரவாணியில் அமைந்ததாகும்.

ஜனரஞ்சகமான கீரவாணி இராகத்தினை, எந்த ஒரு சூழ்நிலைக்கும் அழகாகப் பயன்படுத்த முடியும். உதாரணமாக, சின்னத் தம்பியின், 'போவோமா ஊர்கோலம்', ஒரு மகிழ்ச்சியான பாடலாகும். ஆனால், இதே இராகத்தினை, அபூர்வ சகோதரர்கள் படத்தில், 'ஒன்னை நெனெச்சேன், பாட்டுப் படிச்சேன்' என்ற பாடலில் சோகம் ததும்பும் விதத்தில் வடித்திருப்பார்கள். கேளடி கண்மணியில், எஸ்.பி.பி மூச்சு விடாமல் பாடி அசத்திய. 'மண்ணில் இந்தக் காதல் அன்றியும்' கீரவாணிதான். எத்தனையோ பாடல்கள் இருந்தாலும், கீரவாணியை உடனே இனம் கண்டு கொள்ள ஒரு பாடல் வேண்டுமென்று யாராவது கேட்டால் இருக்கவே இருக்கிறது, பொன்னு மணியின், 'நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு'. பாடல் படமாக்கப்பட்ட விதமும், பாடலின் மெலடியும், கீரவாணியைத் தூக்கி நிறுத்துகின்றன.

இராகம்: கீரவாணி
21ஆவது மேளகர்த்தா இராகம் (72 தாய் இராகங்களில் ஒன்று)
ஆரோகணம்: ஸ ரி2 க2 ம1 ப த1 நி3 ஸ
அவரோகணம்: ஸ நி3 த1ப ம1 க2 ரி2 ஸ

இப்போது பட்டியலைப் பார்ப்போம்

பாடல் - திரைப்படம்

01. ஆடாத மனமும் - மகாதேவி
02. ஆகாயத் தாமரை - நாடோடிப் பாட்டுக்காரன்
03. ஆலமரம் வேலமரம் - செந்தூரம்
04. ஆலாபனை செய்யும் மாலைப் பொழுது - பொன் மேகலை
05. அந்த வானத்தப் போல - சின்னக் கவுண்டர்
06. அரிதாரத்தப் பூசிக்கொள்ள - அவதாரம்
07. ஆயிரம் கோடி சூரியன் போலே - கரிசக்காட்டுப் பூவே
08. பூபாளம் இசைக்கும் - தூரல் நின்னு போச்சு
09. சந்தா ஓ சந்தா - கண்ணெதிரே தோன்றினாள்
10. சின்ன மணிக் குயிலே - அம்மன் கோயில் கிழக்காலே
11. தெய்வம் தந்த வீடு - அவள் ஓரு தொடர்கதை
12. எங்கே செல்லும் இந்தப் பாதை - சேது
13. எங்கே சென்று தேடுவேன் - ஞான சௌந்தரி
14. எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன - க்ஷத்ரியன்
15. என்னைக் காணவில்லையே - காதல் தேசம்
16. என்னைத் தாலாட்ட வருவாளோ - காதலுக்கு மரியாதை
17. என்னுள்ளே என்னுள்ளே - வள்ளி
18. எவனோ ஒருவன் வாசிக்கிறான் - அலை பாயுதே
19. கூட்ஸ் வண்டியிலே - குங்குமச் சிமிழ்
20. ஹைவேஸ்ஸிலே ஸ்பீட் பிரேக்கில்லே - மனசெல்லாம்
21. இதயம் போகுதே - புதிய வார்ப்புகள்
22. இதயமே இதயமே என்னை மறந்தது - ஜூலி கணபதி
23. இளவேனில் இது வைகாசி மாசம் - காதல் ரோஜாவே
24. இன்னிசை - துள்ளாத மனமும் துள்ளும்
25. கத போலத் தோணும் இது கதையும் அல்ல - வீரத் தாலாட்டு
26. கண்ணே இன்று கல்யாண - ஆணழகன்
27. காற்றில் எந்தன் கீதம் - ஜானி
28. கீரவாணி கீரவாணி - பாடும் பறவைகள்
29. குங்குமக் கோலம் - அண்ணன் ஒரு கோயில்
30. குயிலே குயிலே உந்தன் கீதங்கள் - காதல் ஓவியம்
31. குயிலுக்கு கூ கூ கூவிட - ·ப்ரண்ட்ஸ்
32. மால கருக்கலிலே - எங்க ஊரு காவக்காரன்
33. மலரே தென்றல் பாடும் ஞானம் - வீட்டுல் விசேஷங்க
34. மலர்களிலே ஆராதனை - கரும்பு வில்
35. மலையோரம் வீசும் காத்து - பாடு நிலாவே
36. மாமனோட மனசு - உத்தம ராசா
37. மன்றம் வந்த தென்றலுக்கு - மௌன ராகம்
38. மனிதா மனிதா இனி உன் விழிகள் - கண் சிவந்தால் மண் சிவக்கும்
39. மஞ்சப் பொடி தேய்க்கையிலே - செண்பகமே செண்பகமே
40. மஞ்சள் பூசும் - ப்ரண்ட்ஸ்
41. மண்ணில் இந்தக் காதல் - கேளடி கண்மணி
42. முன் பனியா - நந்தா
43. முன்னம் செய்த தவம் - வனஜா கிரிஜா
44. நடந்தால் இரண்டடி - செம்பருத்தி
45. நான் புடிச்ச கிளியே - ராசுக்குட்டி
46. நான் தேடிய - எங்கே எனது கவிதை
47. நீ எங்கே என் அன்பே - சின்னத் தம்பி
48. நீதானே நீதானே - தாலாட்டுப் பாடவா
49. நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - பொன்னுமணி
50. நேரமிதே நேசன் குணவிலாசன் - ராஜகுமாரி
51. நிலா அது வானத்து மேலே - நாயகன்
52. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் - நெஞ்சில் ஒரு ஆலயம்
53. நினைவுகள் நெஞ்சினில் - ஆட்டோக்ரா·ப்
54. ஓ ஊர்வலம் - மாநகரக் காவல்
55. ஒ பாப்பா லாலி - இதயத்தைத் திருடாதே
56. ஒம்காரமாய் விளங்கும் நாதம் - வணங்கா முடி
57. ஒன்னை நெனைச்சேன் பாட்டுப் படிச்சேன் - அபூர்வ சகோதரர்கள்
58. ஊரத் தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் - படிக்காதவன்
59. ஒரிடந்தனிலே நிலை இலா உலகினிலே - வேலைக்காரி
60. ஒரு காதல் தேவதை - சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
61. ஒரு கிளி உருகுது - ஆனந்தக் கும்மி
62. ஒரு முத்துக்கிளி - தாயம்மா
63. ஒரு துளிர் ஒண்ணு அரும்புது - தொடரும்
64. பாடிப் பறந்த கிளி - கிழக்கு வாசல்
65. பாடும் வானம்பாடி - நான் பாடும் பாடல்
66. பாட்டுப் பாட வா பார்த்துப் பேச வா - தேன் நிலவு
67. பெண்ணொருத்தி - ஜெமினி
68. பூ முடியும் - வெள்ளிக் கிழமை விரதம்
69. பூங்காற்றே இனி போதும் - படிச்ச புள்ள
70. பூங்காற்றிலே உன் சுவாசத்தை - உயிரே
71. பூங்கொடிதான் பூத்தாடாதாம்மா - இதயம்
72. பூப்பூக்கும் மாசம் தை மாசம் - வருஷம் பதினாறு
73. போவோமா ஊர்கோலம் - சின்னத் தம்பி
74. ராஜராஜ சோழன் நான் - ரெட்டை வால் குருவி
75. ராசாத்தி மனசிலே - ராசாவே உன்னை நம்பி
76. ரோட்டோரம் பாட்டுச் சத்தம் - என் மன வானில்
77. சலாம் குலாமு - ஹலோ
78. சிறு சிறு சிறகுகளில் - கொஞ்சிப் பேசலாம்
79. சிட்டுப் பறக்குது குத்தாலத்தில் - நிலவே முகம் காட்டு
80. சொல்லத்தான் நினைக்கிறேன் - சொல்லத்தான் நினைக்கிறேன்
81. சுத்தாதே பூமித்தாயே நில் - நிலவே முகம் காட்டு
82. தளுக்கி தளுக்கி - கிழக்கு வாசல்
83. தங்கச் சங்கிலி - தூரல் நின்னு போச்சு
84. துளியோ துளி முத்துத் துளி - காதலிக்க நேரமில்லை
85. உன் குத்தமா என் குத்தமா - அழகி
86. உன் நெஞ்சத் தொட்டு சொல்லு - ராஜாதி ராஜா
87. உன்னை நான் அறிவேன் - குணா
88. உன்னை நினைக்கவே - ஜே ஜே89. உரு மாறி வந்து - விஜயகுமாரி
90. வானம் அதிரவே - ரமணா
91. வானத்திலிருந்த்து குதிச்சி வந்தேனா - பூந்தோட்டம்
92. வெண்ணிலவுக்கு வானத்த - தாலாட்டு பாடவா
93. வெற்றிக் கொடி கட்டு - படையப்பா
94. எவனோ ஒருவன் - அலை பாயுதே

கீரவாணி இராகம் ரொம்பப் பிடித்துப் போயிற்றோ என்னமோ தெரியவில்லை. மரகதமணி என்ற இசையமப்பாளர், கீரவாணி என்ற பெயரிலும் வலம் வந்தார். அழகன் படத்தின் அழகான பாடல்களைக் கொடுத்தவர் இவரே. அம்சலேகா என்பவரும் இவரா என்று தெரியவில்லை.

ஜீவா வெங்கட்ராமன் என்பவரும் இந்த இராகத்தைப் பற்றி வலையில் பதிந்துள்ளார். http://jeevagv.blogspot.com/2005/05/blog-post.html

கிரணாவளி என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த இராகத்தைச் சிலர் ஸ்டலாக, கிர்வானி என்றும் அழைப்பதுண்டு.

By the way, Dumb Sharad எனப்படும் ஊமை விளையாட்டில், கீரவாணி என்ற பெயர் வந்தால் என்ன அபிநயம் செய்வார்கள் என்று நினைக்கிறீர்கள்?

- சிமுலேஷன்.

Wednesday, August 30, 2006

சென்னை குவிஸ்

27.08.2006 ஞாயிறன்று மதியம், மயிலையில், "சென்னை தின விழா" கொண்டாட்டங்களின் நிறைவுப் பகுதியாக, "சென்னை குவிஸ்" ஒன்று பி.எஸ். மேல்நிலைப் பள்ளையில் நடைபெற்றது. இரண்டு பேர் கொண்ட குழு மட்டுமே கலந்து கொள்ள முடியும். தனியாகச் சென்ற நான், சுரேஷ் என்பரிடம், 'ஆன் த ஸ்பாட்' அறிமுகம் செய்து கொண்டு, குழுவாக கலந்து கொண்டேன். நடுநிலைப் பள்ளி மாணவர்களில் ஆரம்பித்து, சீனியர் சிட்டிசன்கள் வரை கலந்துகொண்ட இந்தக் குவிஸ்ஸில், ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி, திரு.இராமமூர்த்தி (முன்னாள் தமிழ் கிரிக்கெட் வர்ணணையாளர்) அவர்களும் குடும்பத்துடன், கலந்து கொண்டார். குவிஸ்ஸை நடத்தியவர் சென்ற வருடம் முதல் பரிசு பெற்ற அவினாஷ் என்பவர்.

ப்ரிலிம்ஸ் எனப்படும் தகுதிச் சுற்றில் 35 கேள்விகள். அதில் 20க்கும் மேற்பட்ட மதிபெண்கள் பெற்று அதிக மதிபெண்கள் பெற்ற ஆறு குழுக்கள் மட்டுமே இறுதி சுற்றுக்குச் சென்றன. நாங்கள் பெற்ற மதிபெண்கள் 14. தகுதிச் சுற்றில் கேட்கப்பட்ட கேள்விகள் சிலவற்றைக் கொடுத்திருக்கின்றேன் (சொந்த வாக்கியங்களில்). பதில் தெரிந்தால் சொல்லுங்கள். கேட்கப்பட்ட கேள்விகள பலவற்றையும் நினவுபடுத்தித் தர இயலாததால், சொந்தச் சரக்கு சிலவற்றையும் இங்கு இணைத்து உங்களைப் படுத்திவிட இருக்கின்றேன். (இறுதி சுற்றின்போது நான் அங்கு இல்லாததால் இந்தக் கேள்விகள்கூடக் கேட்கப்பட்டிருக்கலாம் என்று எண்ணுகின்றேன்.) முடிவுகளை, வார இறுதியில் தெரிவிக்கின்றேன்.

1. சிந்தாதறிப் பேட்டை - பெயர்வரக் காரணம் என்ன?
2. மறைந்த பிரபல இசைக் கலைஞர், எம். எல். வசந்தகுமாரி அவர்களின் முழுப் பெயர் (expansion of initials) என்ன?
3. சென்னையின் பழம்பெரும் சங்கீத சபா எது?
4. சென்னையிலுள்ள ஒச்சர் ஸ்டுடியோஸின் (Ocher Studios) நிர்வாக இயக்குநர் யார்?
5. சென்னை-மைசூர் எக்ஸ்பிரஸ்ஸின் பெயரை, வேறொரு பெயருக்கு மாற்ற வேண்டுமென்று, கர்னாடக ஆளுநர் சதுர்வேதி, இரயில்வேத் துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அது என்ன புதுப் பெயர்? காரணம் என்ன?
6. மவுண்ட் ரோடிலுள்ள, இன்றும் இயங்கும் பழம்பெரும் நிறிவனம் எது?
7. வை மேக்ஸ் (wi-max) என்ற நிறுவனம், எந்தெந்த நிறுவனங்களின் கூட்டு முயற்சி?
8. சென்னையில் காணப்படும் புள்ளி மாஙளின் மற்றொரு பெயர் என்ன?
9. மாயா, கௌதம், நிகில், அனிதா - இவர்களுக்குள்ள ஒற்றுமை என்ன?
10. பெரிய ஆள், வல்லுனர் என்பதற்குக் கூறப்படும், புரதம் நிறைந்த இந்த உணவுப் பொருடகளின் பெயர் என்ன?


சொந்தச் சரக்கு

1. 'மாம்பலம்' என்ற இடத்திற்கு இந்தப் பெயர்வரக் காரணம் என்ன?
2. இந்தியாவில் முதன்முதலாக முறையான தொழிற்சங்கம் (Trade Union) எங்கு தொடங்கப்பட்டது?
3. மணலி இராமகிருஷ்ண முதலியார், தான் தினமும் காலையில் ஆற்றில் நீராடிய பின்னர், ஆலயம் செல்லும் வழக்கம் கொண்டிருந்ததாக எழுதியுள்ளார். அவர் குறிப்பிட்ட ஆறு எது?
4. சென்னையில் 'ப்ரோடீஸ் காசல் சாலை' (Broadies Castle Road) எங்குள்ளது?
5. 'கெல்லீஸ்' என்ற இடத்தின் பழைய பெயர் என்ன?
6. மயிலாப்பூர் கபாலி கோவில், முதன் முதலில் எங்கிருந்தது?
7. உலகப் புகழ் பெற்ற "யேல்" பல்கலைக் கழகத்திற்கும், சென்னைக்கும் என்ன தொடர்பு?
8. சென்னையிலுள்ள "பாடல் பெற்ற ஸ்தலங்கள்" என்னென்ன? பாடியவர்கள் யார்?
9. செனடோஃப் சாலைக்கு (Cenotaph Road) அப்பெயர் வரக் காரணம் என்ன?
10. ஆர்மீனியன் சாலையிலுள்ள, ஆர்மீனியன் சர்ச் தவிர, சென்னையில் ஆர்மீனியர்கள் கட்டிய ஒரு முக்கிய படைப்பு எது?

- சிமுலேஷன்

Thursday, August 24, 2006

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி



கல்யாணி, திரைப்படத் இசையமைப்பாளர்களுக்கு ஒரு விருப்பமான (Favourite) இராகமாகும். குறிப்பாக இளையராஜா, கல்ய¡ணி என்றால், ஒரு கலக்கு கலக்கி விடுவார். இந்த ஒரே இராகத்தில், பல வித்தியாசமான பாடல்களைத் தந்துள்ளவர் அவர். 'வெள்ளைபுறா ஒன்று', 'ஜனனீ, ஜனனீ', 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே', 'நிற்பதுவே நடப்பதுவே', 'காற்றில் வரும் கீதமே', என்று தொடரும் இந்த வித்தியாசமான பாடற் பட்டியலைப் பார்த்தால், கண்டிப்பாக நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள். பாடற் பட்டியலுக்குப் பே¡கு முன்பு சின்ன விளக்கங்கள்.

இராகம்: கல்யாணி65ஆவது மேளகர்த்தா இராகம் (72 தாய் இராகங்களில் ஒன்று)

ஆரோகணம் (ஸ்வரங்களின் ஏறு வரிசை): ஸ ரி2 க3 ம2 ப த2 நி3 ஸ

அவரோகணம் (ஸ்வரங்களின் இறங்கு வரிசை): ஸ நி3 த2 ப ம2 க3 ரி2 ஸ

கர்னாடக இசையிலே ஸப்தஸ்வரங்கள் எனப்படும் ஏழு ஸ்வரங்களின் permutation and combinationகளில் கிடைப்பது 72 தாய் இராகங்களாகும். இவற்றிற்கு மேளகர்த்தா இராகங்கள் என்ற பெயருமுண்டு. இந்த 72 இராகங்களையும் மேலும், மேலும் கலக்கக் கிடைப்பது, ஆயிரக்கணக்கான ஜன்ய(சேய்) இராகங்களாகும். 72 மேளகர்த்தா இராகங்களும் ஒரு வரிசைப்படி அ¨மந்துள்ளன. இந்த அமைப்பு ஒரு சக்கரம் போல அமைந்திருப்பது, அறிந்து கொள்ள சுவாரசியமாக இருக்கும். இந்தத் தொடரிலே, அப்படி இப்படி இந்த சமாச்சாரங்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து விடலாம் என்றுதான் இருக்கின்றேன்.

இந்த மேளகர்த்தா இராகங்களின் துவக்கப் பெயரைக் கொண்டு, அவற்றின் வரிசை எண் என்னவென்று கூற முடியும். வெங்கடமகி என்பவர், இந்த வரிசை எண்ணை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதற்காக 'கடபயாதி என்ற சூத்திரம் ஒன்றினை வடித்துள்ளார். இந்த சூத்திரத்தினைப் பயன்படுத்துவதற்காக, சில இராகங்களுக்கு மட்டும் சிற்சில பெயர் மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளார். அதன்படி கல்யாணியை, 'மேச' என்ற prefix சேர்த்து, மேசகல்யாணி என்றழைத்தார். மற்றபடி நேமாலஜி/நியூமராலஜி சமாச்சாரம் ஏதும் இதில் கிடையாது. இப்போது மேளகர்த்தா சக்கரத்தைப் பற்றியும், "கடபயாதி" சூத்திரத்தினைப் பற்றியும் §மலும் அறுக்காமல், பின்னாளில் அவற்றை விரிவாகப் பார்ப்போம்.

வட இந்தியாவில் இதே கல்யாணி இராகம், 'யமன்' என்றழைக்கப்படுகின்றது. இதற்கு, 'சாந்த கல்யாணி' என்ற மற்றொரு பெயருமுண்டு. இந்த இராகம், ஹங்கேரி நாட்டிலும் பிரபலம் என்பது பெரும்பாலோர் அறியாததொன்று. மேளகர்த்தா இராகமான கல்யாணியிலிருந்து 150க்கும் மேலான ஜன்ய இராகங்கள் பிறந்த்திருப்பதாகத் தெரிகின்றது. இப்போது பட்டியலைப் பார்ப்போம்

பாடல் - திரைப்படம்
01. ஆதாரம் உன்றன் திவ்ய பாதமே - பக்த கௌரி
02. அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ - சிறையில் பூத்த சின்ன மலர்
03. ஆடும் அருள் ஜோதி - மீண்ட சொர்க்கம்
04. ஆழ் கடலில் முத்தெடுத்து - ராகம் தேடும் பல்லவி
05. அம்மா என்றழைக்காத உயிரில்லையே - மன்னன் *
06. ஆராரோ ஆராரோ - ஆனந்த்
07. அத்திக்காய் காய் காய் - பலே பாண்டியா
08. சரணம் பவ கருணாமயி - சேது
09. தேவன் தந்த வீணை - உன்னை நான் சந்தித்தேன் *
10. என்னை ஒருவன் பாடச் சொன்னான் - கும்பக்கரை தங்கையா
11. இகலோகமே - தங்கமலை ரகசியம்
12. இளவட்டம் கேட்கட்டும் - மை டியர் மார்த்தாண்டன்
13. இசை கேட்டால் புவி அசைந்தாடும் - தவப் புதல்வன் *
14. இசையமுதம் - கோடீஸ்வரன்
15. ஜனனீ ஜனனீ - தாய் மூகாம்பிகை *
16. கலை வாணியே - சிந்து பைரவி *
17. கனவிலும் உனை மறவேன் நான் - மச்சரேகை
18. கண்ணாலே காதல் கவிதை சொன்னானே - ஆத்மா
19. கண்ணன் வந்தான் - ராமு *
20. காவிரிப் பெண்ணே வாழ்க - பூம்புகார் *
21. காற்றில் வரும் கீதமே - ஒரு நாள் ஒரு கனவு *
22. கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா - தெய்வ மகன் *
23. கொக்கு சைவக் கொக்கு - முத்து
24. மலையோரம் மயிலே - ஒருவர் வாழும் ஆலயம்
25. மனதில் ஒரு பாட்டு - தாயம் ஒண்ணு
26. மாநில வாழ்வு பெரும் ஆனந்தம் - அஷோக் குமார்
27. மஞ்சள் வெயில் - நண்டு *
28. மஞ்சள் வெயில் மாலையிலே - காவேரி
29. மன்னவன் வந்தானடி தோழி - திருவருட்செல்வர் *
30. முகத்தில் முகம் பார்க்கலாம் - தங்கப் பதுமை *
31. நதியில் ஆடும் பூவனம் - காதல் ஓவியம் *
32. நமக்கினி பயமேது - ஜகதலப்ரதாபன்
33. நான் என்பது நீ அல்லவோ தேவா - சூரசம்ஹாரம்
34. நான் பாட வருவாய் - உதிரிப் பூக்கள்
35. நானே உன் அடிமையே - மண மகள்
36. நீது சரணமுலே - சேவாசதனம்
37. நினைக்கின்ற பாதையில் அணைக்கின்ற - ஆத்மா
38. நிற்பதுவே நடப்பதுவே - பாரதி *
39. ஒரு வானவில் போலே - காற்றினிலே வரும் கீதம் *
40. பொல்லாத்தனத்தை என்ன சொல்வேன் - பெண்
41. புத்தம் புது ஓலை வரும் - வேதம் புதிது
42. ராதா அழைக்கிறாள் - தெற்கத்திக் கள்ளன்
43. சங்கீதம் பாட ஞானம் உள்ளவர்கள் - இது நம்ம ஆளு *
44. செண்பகவல்லி உன்னைச் சேவித்தேன் - காசினி வேண்டினி
45. சிந்தனை செய் மனமே - அம்பிகாபதி *
46. சிங்கநடை போட்டு - படையப்பா
47. சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு - பாண்டி நாட்டுத் தங்கம்
48. சுந்தரேஸ்வரனே சுபகராக்ருபா - கன்னிகா
49. சுந்தரி கண்ணால் ஒரு சேதி - தளபதி *
50. சுத்திச் சுத்தி - படையப்பா
51. தாலாட்டும் காற்றே - தேவன்
52. தானே தனக்குள் - பேரும் புகழும் *
53. தாயைப் பணிவேன் - ஜகதலப்ரதாபன்
54. தாழையாம்பூ முடிச்சு - பாகப் பிரிவினை
55. தேன் சிந்துதே வானம் - சொல்லத்தான் நினைக்கிறேன் *
56. திருவளர் உருவே போற்றி - பக்த துளசிதாஸ்
57. துணிந்த பின் மனமே - தேவதாஸ் *
58. உள்ளம் ரெண்டும் - தூரத்து இடி முழக்கம்
59. உன்னை நான் பார்க்கையில் - கண்ணுக்கொரு வண்ணக்கிளி
60. உப்புக் கருவாடு - முதல்வன்
61. வா காத்திருக்க நேரமில்லை - காதலிக்க நேரமில்லை
62. வைதேகி ராமன் - பகல் நிலவு
63. வான் பொய்த்தாலும் தான் பொய்யா - ஆடிப் பெருக்கு
64. வந்தாள் மகாலக்ஷ்மியே - உயர்ந்த உள்ளம் *
65. வாசமல்லிப் பூவு - செவ்வந்தி
66. வீணையடி நீ எனக்கு - ஏழாவது மனிதன்
67. வெள்ளை புறா ஒன்று - புதுக் கவிதை *
68. விழிகள் மீனோ மொழிகள் தேனோ - ராகங்கள் மாறுவதில்லை
69. யாரறிவான் இறைவன் திருவருள் - ஞான சௌந்தரி

இவ்வளவு பெரிய பட்டியலில், ஒரு சில பாடல்களில்* மட்டும், கல்யாணி இராகத்தினை, 'டபக்'கென்று கண்டுபிடிக்க முடிகின்றது. மற்ற சில பாடல்களில் முடிவதில்லையே! காரணம் என்னவென்றால், இந்த இசையமப்பாளர்கள், பாரம்பரிய இசைவாணர்கள் போலல்லாமல், தமது பாடல்களில் சில அன்னிய ஸ்வரங்களையும், 'சாப்பிடு', என்று சேர்த்து விடுவதுதான். எனவேதான் அவை 100% ஒரே இராகத்தில் இல்லாமல் இருந்து, இராகம் கண்டுபிடிக்கச் சில சமயம் படுத்துகின்றன.

பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்கு இலக்கணம் மிக முக்கியம். ஆனால் திரையிசை இயக்குநர்களுக்கோ, மனமகிழ்வு ஏற்படுத்துதல் மட்டுமே முக்கியம். வலைப்பதிவர்கள் போல, அவர்களுக்கு யார் கட்டுப்பாடும் கிடையாது. அதனால், அவர்கள் தங்களுக்குப் பிடித்தபடி, விருப்பப்பட்ட இராகங்களுக்கு, வேண்டுமென்றபோது, 'வித்தவுட்டில்' போய்விட்டு, பல்லவியில் சமர்த்தாக ஆரம்பித்த இராகத்திலேயே வந்து ஒட்டிக் கொள்வார்கள்.

முன்னமே கூறியது போல, இந்தப் பட்டியலில், கல்யாணி இராகம் எந்தெந்தப் பாடல்களிலெல்லாம், பிரதானமாக இருக்கிறது என்று கருதுகிறீர்களோ, அந்தப் பாடல்களை மட்டும் ஒருங்கே பதிவு செய்து, பத்து முறை கேட்டுப் பாருங்கள். அதன் பின், தப்பித் தவறி விபரீத ஆசை ஏற்பட்டு, ஏதெனும் ஒரு கச்சேரிக்குப் போய், பாடகர் 'நிதிசால சுகமா' அல்லது, 'பங்கஜ லோசனா' என்று பாட ஆரம்பித்தவுடன், "ஆபோகிதானே இது?" என்று அப்பாவியாய்க் கேட்கும் என்று பக்கத்து சீட் பார்ட்டியிடம், "நோ, நோ. கல்யாணியாக்கம் இது", என்று அசத்தத் தோன்றும்.

- சிமுலேஷன்.

Saturday, August 19, 2006

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா

நம்மில் பலருக்கும், நினைவில் இருக்கும் பல திரைப்படப் பாடல்களையும் கூர்ந்து கவனித்தால், அவை பெரும்பாலும், மனதிற்கு இனிமையான ஒரு கர்னாடக இராகங்களில் அமைந்திருப்பதனைக் கவனிக்கலாம். இப்படி இராகங்களின் அடிப்படையில் அமைந்த பாடல்களை ஒப்பு நோக்கும் முயற்சியாக, "தமிழ்த் திரையிசையில் இராகங்கள்" என்ற தலைப்பிலே, ஒரு தொடர் எழுத எண்ணியுள்ளேன். இராகங்களைப் பற்றிய புரிதல், எந்தவொரு இசையினையும் மேலும் இரசிக்கத் தூண்டுமென்பதே, இதன் நோக்கம்.

இராகம்: கானடா
இது கரஹரப்ரியா என்ற மேளகர்த்தா (72 தாய் இராகங்களில் ஒன்று) இராகத்தின் ஜன்ய (சேய்) இராகமகும்

ஆரோகணம் (ஸ்வரங்களின் ஏறு வரிசை):
ஸ ரி2 க2 ம1 த2 நி2 ஸ

அவரோகணம் (ஸ்வரங்களின் இறங்கு வரிசை):
ஸ நி2 ஸ த1 ப ம1 ப க2 ம1 ரி2 ஸ

கானடா இராகம், எந்த ஒரு நேரத்திற்கும் பாட இசைந்தது. பக்தி இரசனையினைத் தூண்டக்கூடியது. ஆலாபனைக்கு உகந்த இந்த இராகம், இராகமாலிகைகளில் பெரிதும் கையாளப்படுகின்றது. 'தர்பாரி கானடா' எனப்படும் வட இந்திய இராகத்திற்கும்,கானடா இராகத்திற்கும் தொடர்பு உண்டு. தொடரின் நோக்கம் கருதி இந்த இசை இலக்கணங்களுக்குள்,
தற்போது மேலும் இறங்கப் போவதில்லை,

பாடல் - திரைப்படம்
01. அலை பாயுதே கண்ணா - அலை பாயுதே
02. அந்தோ புவி மேல் அடிமையாக - மச்ச ரேகை
03. அழகு தெய்வம் மெல்ல மெல்ல - பேசும் தெய்வம்
04. கனவுகளே ஆயிரம் கனவுகளே - நீதிக்குத் தலை வணங்கு
05. கேள்வியின் நாயகனே - அபூர்வ ராகங்கள்
06. கொஞ்சும் சலங்கை ஒலி கேட்டு - கொஞ்சும் சலங்கை
07. மனக்கோவில் தன்னில் வாழும் - காவேரி
08. மன்னவா மன்னவா, மன்னாதி மன்னன் - வால்டேர் வெற்றிவேல்
09. மோகனாங்க வதனி உன்னைக் காணும் - மனோன்மணி
10. முல்லை மலர் மேலே, மொய்க்கும் வண்டு போலே - உத்தம புத்திரன்
11. நாணிச் சிவந்தன கண்கள் - கர்ணன் (இந்தப் பகுதி மட்டும்)
12. நடராஜனா இல்லை சிவகாமியா - பாட்டும் பரதமும்
13. பெண்ணின் பெருமையே பெருமை - மிஸ்ஸியம்மா
14. பொன்னென்பேன் - போலீஸ்காரன் மகள்
15. பூமாலை வாங்கி வந்தான் - சிந்து பைரவி
16. புது வெள்ளை மழை பொழிகின்றது - ரோஜா
17. தென்னமரத் தோப்புக்குள்ளே - தெற்குத் தெரு மச்சான்
18. வானம்பாடிகள் போலே - கள்வனின் காதலி

சிந்துபைரவியின் "பூமாலை வாங்கி வந்தான்" பாடலை இங்கே கேட்கலாம்.



இந்தப் பாடல்களையெல்லாம் ஒருங்கே பதிவு செய்து கேட்டுக் கொண்டேயிருந்தால், கானடா இராகம் உங்களுக்கு எளிதில் பிடிபட்டுவிடும்.

விரைவில் அடுத்த இராகத்துடன்...

- சிமுலேஷன்

தமிழ்த் திரைப்படங்களின் தலைப்பிலே உறவுகள்

எதற்கெடுத்தாலும், திரைப்படங்களை உதாரணம் காட்டுவதே நம் மக்களுக்கு வேலையாகி விட்டது. சரி. சரி. தமிழ்த் திரைப் படங்களின் தலைப்புகளில் வந்துள்ள உறவுகளைப் பார்ப்போம்.

01. அன்னை
02. அன்னை ஒர் ஆலயம்
03. அன்னையின் ஆணை
04. தாய்
05. தெய்வத் தாய்
06. தாயா தாரமா?
07. தாயின் மடியில்
08. தாய்க்குத் தலைமகன்
09. தாய்க்குப் பின் தாரம்
10. தாயைக் காத்த தனயன்
11. தாய் மகளுக்குக் கட்டிய தாலி
12. ஒரு தாய் மக்கள்
13. சின்னத் தாயி
14. மக்களைப் பெற்ற மகராசி
15. என்னைப் பெத்த ராசா
16. அன்புள்ள அப்பா
17. உத்தம புத்திரன்
18. அன்புச் சகோதரர்கள்
19. அபூர்வ சகோதரர்கள்
20. இரு சகோதரர்கள்
21. கோவை பிரதர்ஸ்
22. அண்ணன் ஒரு கோயில்
23. என் அண்ணன்
24. அண்ணா நீ என் தெய்வம்
25. சபாஷ் தம்பி
26. என் தம்பி
27. சின்னத் தம்பி
28. பெரிய தம்பி
29. சின்னத் தம்பி பெரிய தம்பி
30. உன்னால் முடியும் தம்பி
31. தம்பிக்கு எந்த ஊரு?
32. தம்பி பொண்டாட்டி
33. பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்
34. மனைவி ரெடி
35. தங்கை
36. தங்கைக்காக
37. என் தங்கை
38. என் தங்கை கல்யாணி
39. தங்கைக்கோர் கீதம்
40. கண்ணே பாப்பா
41. உள்ளத்தில் குழந்தையடி
42. பெற்றால்தான் பிள்ளையா?
43. வாத்தியார் வீட்டுப் பிள்ளை
44. குழந்தையும் தெய்வமும்
45. குழந்தைக்காக
46. தேவர் மகன்
47. தெய்வ மகன்
48. பிதாமகன்
49. பாட்டி சொல்லைத் தட்டாதே
50. மந்திரி குமாரி
51. மாப்பிள்ளை
52. சபாஷ் மாப்பிள்ளே
53. சின்ன மாப்பிள்ளை
54. தேடி வந்த மாப்பிள்ளை
55. பேர் சொல்லும் பிள்ளை
56. கணவன்
57. என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்
58. எங்க வீட்டுப் பிள்ளை
59. எங்க மாமா
60. மாமன் மகள்
61. மணிப்பூர் மாமியார்
62. மாமியார் வீடு
63. மாமியார் மெச்சிய மருமகள்
64. மேல் நாட்டு மருமகள்
65. சித்தி
66. சக்களத்தி
67. சொந்தம்
68. குடும்பத் தலைவன்
69. பணக்காரக் குடும்பம்

Thursday, August 17, 2006

உறவுகள் நூறு - தேன்கூடு - உறவுகள் - போட்டி

உறவுகள் நூறு
-------------------

"உறவுகள் ஃபார் டம்மீஸ்" என்ற தலைப்புதான் முதலில் கொடுக்கலாம் என்று நினைத்தேன். நமது இந்தியக் குடும்பங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட உறவு முறைகள் இருக்கலாம் என்று எண்ணி, இதனை எழுத ஆரம்பித்த பின், அது நூறையும் தாண்டியது என்பது வியப்பிலாழ்த்தியது. எனக்குத் தெரிந்தபடி, நம்மிடையே காணப்படும் உறவு முறைகள் வருமாறு:-

1. அம்மா, 2. அன்னை, 3. தாய், 4. ஆத்தா - நம்மை இவ்வுலகிற்கு ஈன்றவள்
5. அப்பா, 6. தந்தை, 7. தகப்பன், 8.வாப்பா - நம்மை இவ்வுலகிற்கு ஈன்றவன்

9. சகோதரி - தாயின் உதரத்தில் கூடப் பிறந்தவள்
10. அக்கா, 11. தமக்கை - மூத்த சகோதரி
12. தங்கை - இளைய சகோதரி

13. சகோதரன் - தாயின் உதரத்தில் கூடப் பிறந்தவன்
14. அண்ணா, 15. தமையன் - மூத்த சகோதரன்
16. தம்பி, - இளைய சகோதரன்

17. மகள், 18. புதல்வி, 19. புத்திரி - பெண் குழந்தை/வாரிசு
20. மகன், 21. தனயன், 22. புதல்வன் - ஆண் குழந்தை/வாரிசு

23. சீமந்த புத்திரி, 24. ஜேஷ்ட புத்திரி - மூத்த மகன்
25. கனிஷ்ட புத்திரி - இளைய மகள்

26. புத்திரன் - 'புத்' என்னும் நரகத்தில் விழாமல் காப்பாற்றும் மகன்
27. தலைச்சன், 28. சீமந்த புத்திரன், 29. ஜேஷ்ட புத்திரன் - மூத்த மகன்
30. கனிஷ்ட புத்திரன் - இளைய மகன்

31. பாட்டி, 32. அவ்வா, 33. ஆயா - பெற்றோரின் தாய்
34. அம்மத்தா, 35. அம்மாயி, 36. அம்மம்மா 37. அம்மச்சி, 38. நானி - அம்மாவின் அம்மா / அம்மா வழிப் பாட்டி
39. அப்பத்தா, 40. அப்பாயி, 41. அப்பம்மா, 42. அப்பச்சி, 43. தாதி - அப்பாவின் அம்மா/ அப்பா வழிப் பாட்டி

44. தாத்தா - பெற்றோரின் தகப்பன்
45. அப்பப்பா - அப்பாவின் அப்பா
46. அம்மப்பா - அம்மாவின் அப்பா

47. அத்தை - அப்பாவின் சகோதரி
48. அத்திம்பேர், - அத்தையின் / அக்காவின் கணவர் (அத்தையின் அன்பர் = அத்திம்பேர்)
49. பாவா - அக்காவின் கணவர்

50. மாமி - மாமாவின் மனைவி
51. மாமா - அம்மாவின் சகோதரன், அக்காவின் கணவர்

52. சித்தி, 53. சின்னம்மா, 54. சிறு தாயார் - சித்தப்பவின் மனைவி / அம்மாவின் இளைய சகோதரி
55. சித்தப்பா - அப்பாவின் இளைய சகோதரர் / அம்மாவின் இளைய சகோதரியின் கணவர்

56. பெரியம்மா - பெரியப்பவின் மனைவி / அம்மாவின் மூத்த சகோதரி
57. பெரியப்பா - அப்பாவின் மூத்த சகோதரர் / அம்மாவின் மூத்த சகோதரியின் கணவர்

58. நாத்தனார், 59. நங்கையார் - கணவனது சகோதரி
60. மச்சான் - கணவன், சகோதரியின் கணவன்

61. மைத்துனி, 62. மச்சினி, 63, கொழுந்தியாள் - மனைவியின் சகோதரி
64. மைத்துனன், 65. மச்சினன், 66. கொழுந்தன் - மனைவியின் சகோதரன்

67. சகலை, 68. ஷட்டகர் - மனவியின் சகோதரியின் கணவர்
69. ஓரகத்தி, 70. ஓர்ப்படி - கணவனது சகோதரனின் மனைவி (ஒரகத்தி = ஒர் அகத்தில் இருக்கும் பெண்?)

71. மருமகள் - மகனின் மனைவி / ஆடவனுக்கு சகோதரியின் புதல்வி / பெண்மணிக்கு நாத்தனாரின் புதல்வி
72. மருமகன் - மகளின் கணவன் / ஆடவனுக்கு சகோதரியின் புதல்வன் / பெண்மணிக்கு நாத்தனாரின் புதல்வன்

73. மாட்டுப் பெண், 74. நாட்டுப் பெண் - மகனின் மனைவி
75. மாப்பிள்ளை - மகளின் கணவன் / தங்கையின் கணவன்

76. மாமியார் - கணவன் / மனவியின் தாய்
77. மாமனார் - கணவன் / மனவியின் தந்தை

78. சின்ன மாமியார் - மாமியாரின் தங்கை / சின்ன மாமனாரின் மனைவி
79. சின்ன மாமனார் - மாமனாரின் தம்பி / சின்ன மாமியாரின் கணவர்
80. பெரிய மாமியார் - மாமியாரின் அக்கா / பெரிய மாமனாரின் மனைவி
81. பெரிய மாமனார் - மாமனாரின் அண்ணா / பெரிய மாமியாரின் கணவர்

82. அத்தங்கா - அத்தையின் மகள்
83. அத்தான் - அத்தையின் மகன்
84. அம்மங்கா - மாமன் மகள்
85. அம்மாஞ்சி - மாமன் மகன்

86. அண்ணி, 87. மன்னி, 88. மதனி, 89. பாபி - அண்ணனின் மனைவி
90. தாயாதி, 91. பங்காளி - சித்தப்பா / பெரியப்பா வழித்தோன்றல்கள்

92. பேத்தி - மகனது / மகளின் புதல்வி (பேத்தி - தனது பெயரை உடையவள்)
93. கொள்ளுப் பேத்தி - பேரன் / பேத்தியின் புதல்வி
94. எள்ளுப் பேத்தி - பேரன் / பேத்தியின் பேத்தி

95. பேரன் - மகனது அல்லது மகளின் புதல்வன் (பேரன் - தனது பெயரை உடையவன்)
96. கொள்ளுப் பேரன் - பேரன் / பேத்தியின் புதல்வன்
97. எள்ளுப் பேரன் - பேரன் / பேத்தியின் பேரன்

98. கொள்ளுப் பாட்டி - தாத்தா/ பாட்டியின் அம்மா
99. எள்ளுப் பாட்டி - தாத்தா/ பாட்டியின் பாட்டி
100. கொள்ளுத் தாத்தா - தாத்தா/ பாட்டியின் அப்பா
101. எள்ளுத் தாத்தா - தாத்தா/ பாட்டியின் தாத்தா

102. அத்தை பாட்டி - அம்மா / அப்பாவின் அத்தை
103. மாமிப் பாட்டி - அம்மா / அப்பாவின் மாமி
104. மாமாத் தாத்தா - அம்மா / அப்பாவின் மாமா
105. சித்திப் பாட்டி - அம்மா / அப்பாவின் சித்தி

106. சம்பந்தி - மருமகள்/ மருமகனது பெற்றோர்

Friday, August 11, 2006

கிளைகளற்ற மரங்கள் - தேன் கூடு - உறவுகள் - கவிதைப் போட்டி



"அடுத்த வீட்டு ஆத்ரேயா,

அத்தை, மாமாவுடன் அலைந்தானாம்;

சின்னக் குட்டி ஷில்பாவோ,

சித்தி, சித்தப்பாவுடன் சென்றாளாம்.

எனக்கென்று அப்படி

யாருண்டு இன்றிங்கு?" என்று கேட்ட

பேரப் பிள்ளையிடம்,

பேச்சை மாற்றும் வழி மறந்து,

பேதலித்து நின்றாள்,

முப்பது வருட முன்பாக

முதல் குழந்தையுடன் போதுமென

முடிவெடுத்த

முத்துப் பாட்டி.


- சிமுலேஷன்

Sunday, August 06, 2006

பூனைக்குட்டிகள் - தேன்கூடு - உறவுகள் - சிறுகதை போட்டி



பூனைக்குட்டிகள் - தேன்கூடு - உறவுகள் - சிறுகதைப் போட்டி ---------------------------------------------------------------------------------------------
அப்பா மத்தியானம் சாப்பிட்ட பின், ஈஸிசேரில் சிறிது நேரம் தலையைச் சாய்ப்பது வழக்கம். கால் மீது கால் போட்டுக் கொண்டு தூங்கும் அப்பாவின் கால் கட்டைவிரல் நகத்தில் வந்து உடம்பை வைத்து தேய்த்துக் கொண்டிருக்கும் அந்தப் பூனை. இது ஒரு நாள், இரண்டு நாளாக நடப்பதில்லை. கிட்டத்தட்ட இரண்டு வாரமாக நடந்தது கொண்டிருக்கிறது. அதனை பொதுவாகப் பூனை என்று சொல்லுவதைவிட, புஸ்ஸி என்று சொல்லுவதையே எல்லோரும் விரும்பினர். அனுதினமும் வந்து போகும் புஸ்ஸியின் போக்கில், சிறிது மாற்றங்கள் தென்படலாயின. அது 'மாதமா'யிருக்கிறதோ என்னமோ என்று அம்மா சொன்னாள்.

அம்மா சொன்னது சரியாய்த்தான் போயிற்று. அன்று அதிகாலை வாசலிலுள்ள நெல் ரூமிலிருந்து, புஸ்ஸியிடமிருந்து பலமான சப்தம் கேட்டது. சிறிது நேரத்தில், 'ம்மியாவ், ம்மியாவ்', என்று காதைக் கிழிக்கும் ஒரே சப்தம். புஸ்ஸி குட்டி போட்டு விட்டாள் போல உள்ளது என்று அம்மா போய்ப் பார்த்தாள். ஜாக்கிரதை என்று எச்சரித்து விட்டு, அப்பா நெல் மூட்டைகளுக்கிடையே எட்டிப் பார்த்து, புஸ்ஸி குட்டி போட்டிருப்பதை ஊர்ஜிதம் செய்தார். அம்மா ஒரு கொட்டங்கச்சியில் பால் எடுத்து வந்து நெல் ரூமில் வைத்தாள். நாங்கள் அத்தனை பேரும் ஒடி வந்து, குட்டிகளைப் பார்க்க வந்தோம். மூட்டைகளின் பின்னால், எதோ கொசகொசவென்று தெரிந்தது. மொத்தம் ஆறு குட்டிகள், இல்லை, இல்லை ஏழு என்றான் அண்ணா. இத்தனை நாட்கள் சாதுவாக இருந்த புஸ்ஸி, ஆக்ரோஷமாக, பல்லைக் காட்டியபடி "பர்ர். பர்ர்ர்" என்று சப்தம் இட்டபோது, ஏதோ புலியைப் பார்ப்பது போல, நாங்களெல்லோரும் பயந்தே போய்விட்டோம். அப்பா எல்லோரையும் கவனமாக இருக்கும்படி மீண்டும் எச்சரித்தார். பூனைக்குட்டிகளைப் பார்த்துக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. காலை டிபன் சாப்பிடாமலேயே, எல்லோரும் பள்ளிக்கு ஓடினோம்.

மாலை வேகவேகமாக வந்து, டிபன் முடித்து, பூனைக்குட்டிகளைப் பார்க்க ஓடினோம். இப்போது புஸ்ஸி அங்கு இல்லை. குட்டிகளைச் சற்றுக் கூர்மையாகப் பார்க்க முடிந்தது. இப்போது ஏண்ணிப் பார்த்தால், மொத்தம் ஐந்து தான்.

"அம்மா, அம்மா, இங்கே வாங்கோளேன், பூனைக்குட்டி ரெண்டைக் காணோம்".

"அம்மாப்பூனைதான் சாப்பிட்டிட்டுருக்கும்", என்றாள் கீரைக்காரப் பட்டம்மா.

"என்னது அம்மாப்பூனை சாப்பிட்டுருக்குமா? என்று ஒரே நேரத்தில் கேட்டொம்.

"ஆமாங்கண்ணு. குட்டி போட்ட பூனைக்கு சத்தி வேணுமில்லே. அதனாலே ஒண்ணு, ரெண்டு குட்டிகளை சாப்பிட்ரும்"

எங்களுக்கு மயக்கமே வந்து விட்டது. புஸ்ஸி வந்தாலே அதனைத் துரத்தி அடிக்க வேண்டுமென முடிவு செய்தோம்.

இப்போது குட்டிகள், மூட்டையின் மேல் தமது கூரான நகங்களைக்கொண்டு ஏற முயற்சி செய்ய ஆரம்பித்திருந்தன. ஏற முயற்சி செய்வதும், சறுக்கி விழுவதும் பார்க்க முகவும் வேடிக்கையாக இருந்தது. இந்த விளையாட்டில், ஐந்தில், இரண்டு மட்டும் கலந்து கொள்ளாமல் தூங்கிக் கொண்டிருந்தன.

"பங்கஜம் சித்தி மாதிரியே தூங்கிண்டுருக்கு பாரு" என்றான் அண்ணா.

"நீ மொதல்ல பங்கஜம் சித்தியப் பாத்திருக்கியாடா?" என்றாள் பத்மினி.

"தெரியாது. அம்மாதான் சொல்லுவா; பங்கஜம் சித்தி மாதிரி தூங்காதேன்னு."

கரெக்ட். அம்மா அடிக்கடி சொல்லுவதுண்டு. மைசூரிலுள்ள பங்கஜம் சித்தி, ஒரு தூங்குமூஞ்சியென்று. எப்போது பார்த்தாலும் தூங்கிண்டே இருப்பாளாம்.

இந்த இரண்டு தூங்குமூஞ்சிப் பூனைகளுக்கும், பங்கஜம் சித்தி போலெவே மூஞ்சியும் இருந்தன. என்ன, ஒண்ணு சின்னது; இண்ணோண்ணு கொஞ்சம் பெரிசு. எனவே, சின்னதுக்கு, 'சின்னப் பங்கஜம்' என்றும், பெரியதுக்குப் 'பெரிய பங்கஜம்' என்றும் பெயர் வைத்தோம்.

ஒரு பூனைக்குட்டி மட்டும், மூட்டை மீது பாதிவரை ஏறிவிட்டான். அங்கிருந்து மற்ற குட்டிகள் மீது ஒரே பாய்ச்சல். அப்பப்ப, நகங்களை வேறூ விரித்துக் காட்டுதல், பற்களை வைத்துக் கொண்டு எல்லோரையும் பயமுறுத்துதல் என்று தூள் கிளப்பிக் கொண்டிருந்தான். வீரதீர பராக்கிரமசாலியானஇந்தப் பூனைக்குட்டிக்கு, 'சூரப்புலி' என்று பேர் வைத்தோம்.

அடுத்தவனும் கிட்டத்தட்ட சூரப்புலியாவே இருந்தான். ஆனால், உருவம் மட்டும் சற்றே வித்தியாசம். கொஞ்சம் கட்டி முட்டியாக இருந்தான். மிருதுவான உடம்பில், வயிற்றுப் பாகத்தில் எலும்புகள் கட்டியாகத் தெரியும். அதற்கு என்னமோ, அண்ணா 'ஆழ்வார்ப் பேட்டை' என்று பெயர் வைத்தான், அவனுக்கு இரண்டு நாட்கள் முன்புதான் தமிழ்ப் பாடத்தில் வந்த, "குடை" என்று வந்த பாடலில், வந்த ஆழ்வார்ப் பேட்டை என்ற வந்த பெயர் பிடித்திருந்தது. அதனையே இரண்டு நாட்கள் சொல்லிக் கொண்டிருந்தவன், இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்தவுடன் பூனைக்குட்டிக்குப் பேராக வத்து விட்டான். அவன் எப்போது அப்படித்தான். பாடத்தில் ஏதேனும், புதுமையாகப் பேர் ஒன்று கிடைத்து விட்டால் போதும், அதனையே அலப்பிக்கொண்டிருப்பான். 'அல்லசாணி பெத்தண்ணா அப்பாஜி', 'அல்லசாணி பெத்தண்ணா அப்பாஜி', என்று அக்காவின் நண்பர் வீட்டுக்குச் சென்று உளறிக் கொண்டிருந்து வாங்கிக் கட்டிக் கொண்டது ஒரு தனிக் கதை.

நாங்கள் எல்லோருமே கடைசியாகப் பார்த்தது ஒரு கலக்கலான கரும்பூனைக்குட்டி. இந்தக் கரும்பூனக்குட்டி ரொம்ப ரொம்பவே அழகாக இருந்தது. ஸாஃப்டாக, அப்போதுதான் குளித்துவிட்டு வத்த கைக்குழந்தையைப் போல இருந்தது. அதனைத் தொட்டுப் பார்க்க எல்லொருக்கும் ஆசை. அண்ணா, தான் ஒரு தைரியசாலி என்று காட்டிக் கொள்ள வேண்டுமென்று, அந்தக் கரும்பூனைக்குட்டியைக் கையால் தூக்கினான், "ம்மியாவ். மீயாவ்" எண்று கத்தத் தொடங்கின அடுத்த நிமிடம், எங்கிருந்தோ நாலுகால் பாய்ச்சலில் வந்தது புஸ்ஸி. அண்ணா கையில் இருந்த குட்டியைப் பாய்த்து வந்து தனது வாயால் கவ்வி எடுத்து சென்றது.

"போதும் பூனையோட விளையாடினது. போய்த் தூங்குங்கோ" என்று அப்பா சப்தம் போட்டார்.

மறுநாள் நெல் ரூமில் போய்ப் பார்த்தால், புஸ்ஸியையும் காணவில்லை. குட்டிகளையும் காணவில்லை. எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்புறும்தான் ஆஃபீஸ் ரூமுலிருந்து, குட்டிகளின் சப்தம் வருவதைப் பார்த்தோம். 'தாய்ப் பூனை, குட்டிகளை, இப்படி அடிக்கடி இடம் மாற்றி கொண்டேயிருக்கும்', என்று பட்டம்மாவிடம் சொல்லத் தெரிந்து கொண்டோம். புஸ்ஸி வந்து அந்தக் கரும்பூனைக்குட்டியை நாக்கால் நக்கிக் கொண்டேயிருந்தது. இந்தப் பூனைக் குட்டியிடம், ஒரு வெள்ளை முடி கூடக் கிடையாது. அத்தனையும் கருப்பு முடி. புஸு, புஸுவெனெ பார்க்கவே ரொம்ப அழகாக இருந்த, இந்தக் குட்டியை மட்டும் புஸ்ஸி, தனியாகக் கவனிப்பது போலத் தோன்றியது. 'அழகான குட்டி என்று அதிகப் பெருமையா? இல்லை, கறுப்பாக இருக்கும் குட்டிக்கு தனிக் கவனிப்பா', என்று புரியவில்லை. ஆனால், புஸ்ஸிக்கு, இந்தக் கறுப்பன் மட்டும் செல்லம் என்று புரிந்தது. எங்களுக்கும் செல்லமாகி விட்ட, இந்த கரும்பூனக்குட்டிக்கு 'செல்லம்' என்றே பெயர் வைத்தோம். எப்படியோ, ஐந்து குட்டிகளுக்கும் பெயர் வைக்கும் படலம் அன்று முடிந்தது.

வீட்டுப் பாடங்களைப் பள்ளியிலேயே முடித்துவிட்டு, ஓடோடி வருவோம். அம்மாவிடம் கேட்டு, கொட்டாங்கச்சியில் பால் வைப்போம். சின்னப் பங்கஜமும், பெரிய பங்கஜமும் பல நாட்கள் பால் குடிக்கக்கூட எழுந்து வராமல், தூங்கிக் கொண்டேயிருக்கும். சூரப்புலிக்கும், ஆழ்வார்ப் பேட்டைக்கும் பால் குடிப்பதிலே, பலத்த சண்டை நடக்கும். செல்லம் மட்டும் தனியாக ஒய்யாரமாக வந்து பால் குடிக்கும் அழகே தனிதான். குட்டிகள் பெரிதாகப் பெரிதாகப் புஸ்ஸியின் வருகை குறைந்து கொண்டே வரத் தொடங்கியது.

ஐந்து பூனைக்குட்டிகளுக்கும் விளையாட்டுகள் பல காண்பிப்போம். சோடா மூடிகளை, ஹாலின் இந்தப் பக்கதிலிருந்து அந்தப் பக்கத்திற்கு, முன்னங்கால்களால், ட்ரிபிள் பண்ணிக் கொண்டு செல்வது பார்க்க, மிகவும் நன்றாக இருக்கும்.அப்புறம் சணல் உருண்டைகளைப் போட்டு அவற்றைக் குதறிக், குதறி விளயாடும் அழகு இருக்கிறதே. அதனைப் பார்த்தால்தான் புரியும். சொன்னால் புரியாது. உறவினர்கள், நண்பர்கள் என்று யார் வந்தாலும் செல்லத்தைக் காட்டி, அதன் புகழ் பாடாமல் இருக்கவே மாட்டோம்.

அன்றைக்குச் சாப்பிடும்போது, சித்தப்பா கல்யாணம் குறித்து அப்பா சொன்னார், மெட்ராஸில் நடக்கவிருக்கும் வேணுச் சித்தப்பா கல்யாணம் என்றதுமே எல்லோரும் துள்ளிக் குதித்தோம். வெள்ளியன்று மாலை கிளம்ப ஏற்பாடு செய்யப்பட்டது. ஏகப்பட்ட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

திடீரென்று, அக்கா பூனைக்குட்டிகளை என்ன செய்வது என்று கேட்டாள். அவள் எங்களுடைய எந்த விளையாட்டிலும் கலந்து கொள்ளமாட்டாள். ஆனால், இன்று அவள் எங்கள் பூனைக்குட்டிகளைப் பற்றி ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி, ஒரு முக்கியமான சமயத்தில் விவாதப் பொருளாக எடுத்துக் கொடுத்திருக்கிறாள்.

"அப்பா, அப்பா, பூனையெல்லாம் ஒரு கூடையில் போட்டு, மெட்ராஸுக்கு எடுத்துக் கொண்டு போலாம் அப்பா" என்றான் அண்ணா.

"பக்கத்து வீட்டில் விட்டுவிட்டுப் போலாமே", என்றாள் அக்கா.

"ஆமா, அவாதான் ரொம்பப் பாத்துக் கிழிச்சுடப் போறா. பால்காரியிடம் கொடுத்துட்டுப் போலாம்", என்றாள் அம்மா.

"கோவாப்ரேடிவ் சூப்பர் மார்க்கெட்டில் விட்டாலென்ன? ராஜேந்திரன் அன்னிக்கே கேட்டார். கடையில் எலித் தொந்தரவு ரொம்ப இருக்குன்னு" என்றார் அப்பா.

"அது கூட நல்ல ஐடியாதான்; நாமளும் நாலு நாள் கழிச்சி வந்து அவன்கிட்டேயிருந்து வாங்கிக் கொள்ளலாம்" என்று அம்மா, முடிவாகச் சொன்னாள்.

சாயந்தரம் சூப்பர் மார்க்கெட் போய் அப்பா ராஜேந்திரனிடம் பேசிவிட்டு வந்த்தார். அவர் இரண்டு பூனைகளை மட்டும் எடுத்துக்கொள்வதாகச் சொன்னாராம். பியூன் பழனியப்பன் துணை கொண்டு, சின்னப் பங்கஜத்தையும், பெரிய பங்கஜத்தையும் கொண்டு போய் சூப்பர் மார்க்கட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வந்தோம். எங்களுக்கு என்னாவோ போல இருந்தது. ஆனாலும், செல்லம், ஆழ்வார்ப்பேட்டை, சூரப்புலி இன்னமும் எங்களிடமே இருந்ததால் ரொம்பப் பெரியதாக ஃபீல் செய்யவில்லை.

மறுநாள் காலை பூனைகளின் சப்தம் கேட்டு எழுந்தோம். கீரைக்காரப் பட்டம்மாவிடம் அம்மா பேசிக் கொண்டிருந்தாள்.

"பார்த்துப் பத்திரமா எடுத்துட்டுப் போ பட்டம்மா"

தனது காலிக் கூடையில், சும்மாட்டுத் துணியை வாகாக வைத்து, ஆழ்வார்ப்பேட்டையையும், சூரப் புலியையும் வைத்துத் தூக்கிச் சென்றாள். இப்போது செல்லம் மட்டும் தனியாக, மியாவ் மியாவ் என்று கத்திக் கொண்டுருந்தது. சுமார் எட்டு மணியிருக்கும். பால்காரி தனம் வந்து செல்லத்தையும் தூக்கிச் சென்றாள். எப்படித்தான் நாலு நாட்கள் இவர்களைப் பிரிந்து இருக்கப் போகிறோமோ என்று எண்ணி வருத்தப்பட்டுக்கொண்டிருந்தபோதே, வெள்ளோட்டிலிருந்து, பாட்டியுடன் ராஜன் சித்தப்பாவின் பையன்கள் கண்ணனும் கோபியும் வந்தார்கள். மாலையில் நீலகிரி எக்ஸ்பிரசில், எல்லொரும் மெட்ராஸ் கிளம்பினோம். சித்தப்பா கல்யாணம் படு ஜோராக நடை பெற்றாலும் என்னவோ போல, சுரத்தில்லாமல் இருந்தோம்.

பாட்டி கூடக் கேட்டாள், ஏண்டி, ராஜம், கொழந்தைங்க ரொம்ப டல்லா இருக்காளே. உடம்புக்கு ஒண்ணுமில்லேயே"

"நேத்திக்குத்தான் சொன்னேனே அம்மா. பூனைக்குட்டிகளப்பத்தி. அதுகள விட்டுட்டு வந்தது, இதுகளுக்குத் தாங்கலே. வேற ஒண்ணுமில்லே"

"வேற வேலை இல்லாயாக்கும்? நாலுக்கும் பாட்டு படிப்புண்ணு ஒண்ணுமில்லாம, பூனையோடயே வெளயாடிண்டுருக்கணுமாமா?". கேட்ட பாட்டியை நாங்கள் முறைத்துப் பார்த்தோம்.

சித்தப்பா கல்யாணம் முடிந்து, திங்கட்கிழமை காலை ஏழு மணிக்கு ப்ளூவில் ஊருக்கு வந்து சேர்ந்தோம். காலையில் கோயமுத்தூரிலேயே டிபன் சாப்பிட்டுவிட்டதால், வந்தவுடன் குளித்துவிட்டு ஸ்கூலுக்குக் கிளம்பினோம். மாலை ஸ்கூலிலிருந்து வந்தவுடன், சூப்பர் மார்க்கெட்டுக்குப் படையெடுத்தோம். ராஜேந்திரன் இல்லை அங்கே. சூபர்வைசர்தான் இருந்தார். பூனை எங்கே என்றோம். 'அங்கேதான் எங்கியாவது இருக்கும்', என்றும் 'எனக்கு தெரியாது' என்றும் மாற்றி மாற்றிக் குழப்பிச் சொன்னார். அந்த மார்க்கெட்டுக்குள் எங்களால் ஒன்றும் தேட முடியவில்ல்லை. காய்கறி மார்க்கெட்டுக்குப் போய், பட்டம்மா இருக்கிறாளா என்று பார்த்தால், அவளும் ஊருக்குப் போய் விட்டாளாம்.

பால் கொடுக்க, தனம் ராத்திரி எட்டு மணி சுமாருக்கு வந்தாள். செல்லத்தைத்தான் கொடுக்க வந்திருக்கிறாளோ என்று ஆவலாக ஓடினோம். அவள்பாட்டுக்கு பழைய பாக்கி பால் ஊத்திவிட்டுக் கிளம்ப ஆரம்பித்தாள். "பூனை எங்கே" பூனை எங்கே", என்று மூணு பேரும் கத்தினோம். அதுவா, முந்தா நேத்திக்கு செட்டியாரோட லாரிக்கு அடிலே மாட்டிகிச்சி. அங்கேயே ஒடனே செத்து போச்சு" என்றபடி நடையைக் கட்டினாள்.

"என்னது அம்மா; இப்படி சொல்றா. எல்லோரும் பாத்துண்டேயிருக்கோம்"

"சரிடா; நம்ம கையிலே என்ன இருக்கு? நாம இப்ப என்ன பண்ண முடியும்? எல்லாரும் சாப்பிட வாங்கோ"

தனக்கு சாப்பாடு வேண்டாமென்று கூறி அண்ணா போய்ப் படுத்துக் கொண்டான். பத்மினியோ, தனக்கு வயித்தை வலிக்கிறது; மோர் மட்டும் போதுமென்று கூறிவிட்டாள் எனக்கும்கூட சாப்பிடப் பிடிக்கவில்லை. ஆனால், சாப்பிட மாட்டேனென்றால் அம்மா அடிப்பாள். அடியைவிட திட்டுதான் பயங்கரமாக இருக்கும்.

ராத்திரி இரண்டு மணியிருக்கும் அண்ணா என்னவோ அனத்திக் கொண்டேயிருந்தான். "செல்லம்,...செல்லம்" அப்டீன்னு சொன்னது போலத் தோன்றியது. அம்மா தொட்டுப் பார்த்தாள்.

"நரேஷுக்கு ஜொரம் அடிக்கறது பாருங்கோ. அந்தக் குரோசின் பாட்டில எடுத்துக் கொடுக்கிறேளா?", என்று அம்மா,அப்பாவிடம் கேட்டுக் கொண்டிருந்தது சன்னமாகக் காதில் விழுந்தது.

-------0-------