Sunday, March 26, 2006

உபவாசக் குரங்குகளும் உன்னதத் திட்டமிடலும்



ஒரு நாள் குரங்குக் கூட்டம் ஒன்று உண்ணாவிரதம் இருக்கத் தீர்மானித்தன. கூட்டத்திலுள்ள எல்லாக் குரங்குகளும் அதற்கு ஒத்துக் கொண்டன.

"உண்ணாவிரதம் முடிக்கும்போது ஏதேனும் சாப்பிட்டுத்தான் விரதத்தை முடிக்க வேண்டும். எனெவே, அதற்குத் தேவையான உணவை இப்போதே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்." என்றது தலைக் குரங்கு.

எல்லாக் குரங்குகளும் "ஆமாம்; ஆமாம்" என்றன.

குட்டிக் குரங்குக் கூட்டமொன்று உடனே தேடிச் சென்று, பழுத்த, சுவையான வாழைப் பழத்தார் ஒன்றினைக் கொண்டு வந்து சேர்த்தன.

"நான் நினைகின்றேன். அவரவர் பங்கை இப்போதே உண்ணாவிரதம் தொடங்கும் முன்னரே பிரித்துக் கொடுப்பது நல்லது. உண்ணாவிரதம் முடிந்த பின்பு எவ்வளவு களைப்பாக இருப்போம் தெரியுமா? அப்போது பிரித்துக் கொடுப்பது என்பது மிகவும் அலுப்பான வேலையாகும்" என்றது, தலையின் மனைவி.

எல்லாக் குரங்களும், இதுவல்லவா, யோசனை! என்று தங்கள் பங்கு வாழைப் பழத்தை எடுத்துக் கொண்டன.

"நாம் ஏன், வாழப் பழத்தை உரித்துத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளக் கூடாது" என்றது ஒரு இளம் குரங்கு.

"ஆமாம்; ஆமாம். இதுவும் சரியான யோசனைதான் என்றது மற்றோர் குரங்கு.

"சரி; தோலை உரித்து வைத்துக் கொள்வோம். ஆனால் யாரும் விரதம் முடிவதற்குள் சாப்பிட்டு விடக்கூடாது" என்றது தலை.

சரி. மாலை விரதம் முடிந்ததவுடன் சாப்பிட வேண்டுமென்ற முடிவுடன், தோலை உரித்த பழத்துடன், தயார் நிலயில் இருந்தன குரங்குகள்.

ஒரே ஒரு குட்டிக் குரங்கு மட்டும், தனது அப்பாவிடம், "நான் வாழைப் பழத்தை சும்மா, வாயில் வைத்துக் கொள்கின்றேன். சத்தியமாகச் சாப்பிட மாட்டேன். சரியா ப்ளீஸ்?" என்று கேட்டது.

"நல்ல யோசனை. எல்லோரும் இதே மாதிரியே செய்யலாம். உண்ணாவிரதம் முடிந்தவுடன், பழத்தை கடித்துச் சாப்பிட எளிதான வழி இதுதான்" என்றது தலை.

பின்னர் எல்லாக் குரங்குகளும் வாழைப் பழத்தின் தோலை உரித்து, பழத்தை வாயில் வைத்துக் கொண்டன. இப்போது திரு, திருவென்று ஒவ்வொரு குரங்கும் மற்ற குரங்கை பார்த்து அசடு வழிந்தன.

அடுத்த சில நிமிடங்களிலேயே உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது என்று சொல்லவும் வேண்டுமோ!!!

- 'தி ஹிண்டு'வின் 'யங் வேர்ல்ட்'டில் வந்த ஒரு கர்நாடக நாட்டுக் கதை

- சிமுலேஷன்