Monday, November 20, 2006

2007 இடைத்தேர்தலில் சென்னை வலைப்பதிவர்கள் சங்கம்

2007ஆம் வருடம் சென்னையில் இடைத்தேர்தல் ஒன்று வருகின்றது. வழக்கமாகவே, இடைத்தேர்தலுக்குண்டான பரபரப்பில் மத்திய, மாநிலக் கட்சிகளும், பல்வேறு சங்கங்களும், அமைப்புகளும் தேர்தலில் போட்டியிட முடிவு செய்கின்றன. வலைபதிவர்களின் அசுர வளர்ச்சியின் காரணமாக, இடைத் தேர்தலில் நிற்க சென்னை வலைப்பதிவர்கள் சங்கமும் தீர்மானம் செய்து, உறுப்பினர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மனுச் செய்வதற்கும் அன்றே கடைசி நாள்.

பாலபாரதி: இன்றைக்கு நாம ஒரு முக்கியமான வட்டத்தை அடைந்திருக்கின்றோம். அடுத்தபடியாக என்ன வட்டத்துக்குச் செல்வதுன்னு முடிவு பண்ணவேண்டிய நேரமிது. நான் சும்மா ஒரு மணி நேரம் மட்டும் பேசி, விவாதத்தை துவக்கி வைக்கிறேன். அதுக்கப்புறம், எல்லோரும் ஆளுக்கு ஒரு அம்பது முதல் அறுவது வினாடிகள் வரைக்கும் தாராளமாகப் பேசலாம்.

பொன்ஸ்: என்ன வட்டம்? என்ன சொல்றாரு தலைவர்?

வரவணையான்: அதுவா.. ஒண்ணுமில்லை. "முக்கியமான கட்டத்தை அடைஞ்சிருக்கோம்; அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?", அப்படின்னு சொல்லிச் சொல்லிப் போரடிச்சுருச்சாம். சரி. சரி சொந்தச் செலவில் சூனியம வச்சுக்க அடுத்த ஆளைக் கூப்பிடுங்கப்பா.

மா.சிவக்குமார்: நாங்க இந்தக் கூட்டத்துக்கு வந்தவங்களுக்கு ஒரு சோதனை வைச்சிருந்தோம். கூட்டம் நடக்கற இந்த ஹாலுக்கு வர்ற வழியிலே கொஞ்சம் 'சாணம்' எல்லாம் போட்டு வச்சிருந்தோம். அதை மிதிச்ச சில அப்பாவி கிராமத்து வலைபதிவர்கள், ஒண்ணுமே பண்ணாம ஒழுங்கு மரியாதையா வந்துட்டாங்க. ஆனா, ஒரு சில படிச்ச பட்டணத்து வலைபதிவர்கள் மட்டும், செருப்பை, தண்ணிய ஊத்திக் கழுவிட்டு வத்திருக்காங்க. இந்த மாதிரி ஆட்களாலதான், சுற்றுப் புறச் சூழலும் கெட்டு, நாடும் கெட்டுப் போகுது. அதனால அவங்க இந்தத் தேர்தல்ல நின்னா யாரும் ஆதரிக்கக் கூடாது.

டோண்டு இராகவன்: அது சரி. தேர்தல் விண்ணப்பப் படிவத்தை யாராவது பார்த்தீங்களா? ஒரு சினிமாபட விளம்பரத்தோட நோட்டீஸ் பின்னாலையா, இந்த மாதிரி விண்ணப்பம் அச்சடிப்பாங்க? சினிமா படத்தோடப் பேரைப் பாருங்க. "அண்ணா நீ என் தெய்வம்". வேகமாச் சொல்லிப் பாருங்க. அனானின்னு வரும். அதைக் கூடப் பொருத்துக்கலாம். ஆனா, வேட்பாளர்கள் விவரம் கேட்கற இடத்திலே, வேட்பாளரின் வேலை= Government, Private, Others அப்படீன்னு போட்டிருக்கு. இதில Othersனு ஒரு option இருக்கே; ரொம்ப ரொம்ப ஆபத்தானது. அத முதல்ல தூக்கச் சொல்லணும்.

பால பாரதி: முதல்ல தேர்தல் அறிக்கை தயார் செய்யணும். அந்த அறிக்கையிலே என்ன ஃபான்ட் உபயோகப்படுத்தணும், எவ்வளவு மார்ஜின் விடணும், என்ன கலர் அப்படீங்கறதையெல்லாம் இப்பவே முடிவு பண்ணிடனும். ஆனா, மொத்தத்திலே நம்ம அறிக்கை மட்டும் வித்தியாசமா இருக்கணும்.

விக்கி என்கிற விக்னேஷ் தலமையில், "சென்னை வலைப்பதிவர் தேர்தல் அறிக்கை அழகுபடுத்தும் ஆயத்தக் குழு", அந்த நிமிடமே பொறுப்பேற்று கொள்கின்றது.

இராமகி: என்னப்பா, அறிக்கைக்காக குழு எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டீங்க. ஆனா, அதுல சொல்ல வேண்டிய விஷயம் என்னென்னன்னு யோசிச்சீங்களா? ஆளுக்கு ஒரு நல்ல கருத்தாச் சொல்லுங்க.

ரோசா வசந்த்: நான் முதல்ல தேர்தலே வேணுமான்னு கேக்கறேன்.

லக்கிலுக்: வலைப்பதுவு சுனாமியார் பாசறை சார்பாக நாலு சீட்டு கொடுத்திடுங்க. இல்லாட்டி, கொலசாமிக் குத்தத்துக்கு ஆளாயிடுவீங்களோன்னு அச்சப்படறேன்.

டி.பி.ஆர்.ஜோசஃப்: டில்லி, மும்பை, கொல்கத்தா, இங்கெல்லாம், வலைப்பதிவர்கள் தேர்தல்லே மாநகராட்சியயே கைப்பற்றியிருக்காங்க. நாமளும் உடனடியாகப் பெரிய அளவில் சிந்திச்சு, சமுதாயத்துக்கு பயனளிக்கும்படியாக பாராளு மன்றத்துக்குக் குறி வைக்கணும்.

மா.சிவக்குமார்: தேர்தல்னாலே சத்துணவுத் திட்டம்தான் எல்லோரும் கை வைக்கிற இடம். நாம ஜெயிச்சா, சத்துணவுத் திட்டத்திலே ஓட்ஸ்/உளுத்தங் கஞ்சி அப்புறம் வேகவைத்த மணிலாக் கொட்டை, ஆட்டுப்பால் தருவோம் அப்படீன்னு சொன்னா எப்படி இருக்கும்? அப்புறம் இராணிப் பேட்டைதொகுதியிலிருந்து மொதல்ல பிரச்சாரத்தை ஆரம்பிக்கணும்.

மரபூர்: 'கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்பது பழமொழி. அதனால, கோவில் நிவாரணப் பணியிலே ஒரு நாள் கலந்துக்கிட்டாக் கூட, வாழ்நாள் பூரா, தினமும் பிரசாதம் அப்படீன்னு நம்ம அறிக்கையிலே சொல்லலாமா?

பால பாரதி: இல்லை. இல்லை. அதெல்லாம், தவறான கருத்துக்களை ஆவணப்படுத்துவதற்கு ஒரு முன்னுதாரணமாப் போய் விடும். இப்படித்தான், ஒருத்தர், கோயில்களில், கற்பூரம் ஏத்துவது, இந்துமத நம்பிக்கை அப்படின்னு எழுதி வச்சுட்டுப் போய்ட்டார். இதைப் படிக்கிற அடுத்த தலை முறை, அதை அப்படியே நம்பினா என்ன ஆகும்?

ஓகை: இந்த இடத்திலதான், நான் ஒரு மாற்றுக் கருத்துப் பதிய விரும்புறேன்.

சிமுலேஷன்: எதுக்கு நாம தேர்தல்ல எல்லாம் போட்டி போடணும்? அப்புறம் ஜெயிச்சுட்டா தேர்தல் அறிக்கையெல்லாம் நிறைவேத்தி வைக்கணும்.....சரி. இல்லாட்டி இன்னொரு ஐடியா. தேர்தல் அறிக்கை அப்படீன்னு சொல்லிட்டு, சும்மா ப்ளாங் பேப்பரை கொடுத்திடலாமே. யாராவது கேட்டாக் கூட, இது ப்ளாங்க் பேப்பர் இல்லை. ப்ளாக் பேப்பர் அப்படீன்னு டக்குனு சொல்லிடலாம். ஜெயிச்சாலும் நிறைவேத்தணும்னு ஒரு கட்டாயமுமில்லே.

சிவஞானம்ஜி: இவ்வளவு கஷ்டப்பட்டு, தேர்தல் அறிக்கை தயாரிக்கறதுக்கு, பேசாம, வேற எந்தக் கட்சி அறிக்கையிலாவது, நாம, 'பின்னூட்ட அறிக்கை' அப்படீன்னு சிம்பிளா கொடுத்துட்டுப் போயிடலாம்.

கூட்டத்தில் இடையே இடைவேளை விடப்படுகின்றது. புதியதாக ஒருவர் வந்து, 'நான் வலப்பதிவர் இல்லை; ஆனால் தீவிர வாசகர்.உங்களுக்கெல்லாம் சாப்பிட ஏதாவது ஸ்பான்ஸர் செய்ய விரும்பறேன்", என்று சொல்லி எல்லோருக்கும் சுடச் சுட இட்லி, வடை வழங்குகின்றார். வலைப்பதிவர் சந்த்திப்பில் போண்டா சாப்பிட்டிருக்கோம், மசால் வடை சாப்பிட்டிருகுக்கோம், பிஸ்கெட் சாப்பிட்டிருக்கோம். இப்படியெல்லாம், சுடச் சுட இட்லி, வடையெல்லாம் கொடுத்து அசத்தறாங்களே; ஸ்பான்ஸர்ஸ் வாழ்க", என்று சொல்லிக் கொண்டே எல்லோரும், இரசித்துச் சாப்பிடுகிறார்கள்.

அரைமணி நேரத்தில், தமிழ் மணத்தில் செய்திகளை முந்தித் தரும் இட்லி வடையின் ஒரு புதிய பதிவு வெளியாகின்றது.

"சென்னை வலைப்பதிவர்கள் இடைத்தேர்தலில் கலந்து கொள்ள முடியாத பரிதாபம். மயக்க மருந்து கலந்த இட்லி, வடை சாப்பிட்டதால், தேர்தலில் மனுச் செய்யும் நேரத்தைக் கோட்டை விட்டனர்."

டிஸ்கி: மக்களே, "தமிழ் வலைபதிவர்களுக்கு நகைச்சுவை உணர்ச்சி ரொம்பக் கம்மி" என்று, ஒரு சிலர் கூறித் திரிகின்றார்கள். அதனைப் பொய்யாக்குவதும், மெய்யாக்குவதும் உங்கள் கையில்தான் இருக்கின்றது.

- சிமுலேஷன்