Thursday, December 06, 2007

ரசிகப்ரியா...ரசிக்கும்படியா...

னகர்நாடக இசையில் "மேளகர்த்தா" சொன்னா, என்னதுன்னு சில பேர் முழிக்கலாம். நெறையப் பேருக்குத் தெரிஞ்சுருக்கும். அது ஒண்ணுமில்லை. "ஜனக" அல்லது "தாய்" இராகங்கள்ன்னு சொல்ற 72 ராகங்களைத்தான் மேளகர்த்தாங்றோம். மத்த ஆயிரக்கணக்கான ராகங்களும் இந்த மேளகர்த்தாவிலிருந்துதான் தோணித்துன்னும் சொல்றோம். மேளகர்த்தா ராகங்களோட வரிசையில் கடோசி ராகம்தான் நாம் இன்னிக்கிப் பேசப் போற, இல்ல, இல்ல, கேட்கப்போற "ரசிகப்ரியா" ராகமாகும். ரசிகப்ரியா ராகம் ஒரு "விவாதி" ராகம். அதாவது ஒவ்வொரு ராகத்துக்கும் ஆரோகணம், அவரோகணம்ன்னு ஏழு ஸ்வரங்கள் ஏறு வரிசையிலும், எறங்கு வரிசையிலும் இருக்கும். இப்படி அடுத்தடுத்தாப்ப்ல வர்ற ஸ்வரங்களுக்கிட்ட ஒரு நட்பு இருந்தால், அவை பாடுவதற்கு சுலபமா இருக்கும். அந்த மாதிரி இல்லாம, அடுத்தடுத்ததா வர்ற ஸ்வரங்களுக்கிட்ட ஒரு ஒறவோ, நட்போ இல்லாமலிருந்தா அந்த ராகங்கள் ரொம்ப நேரம் பாடறதுக்குக் கஷ்டமா இருக்கும். இந்த ராகங்களைத் தான் விவாதி ராகம்ன்னு சொல்றோம். 72 மேளகர்த்தா ராகங்கள்ல 40 ராகங்களை விவாதி ராகங்கள்ன்னும் மத்ததையெல்லா "சம்வாதி" ராகங்கள்ன்னும் சொல்றோம்.

சரி, சரி விவாதியப் பத்தி நெறைய விவாதம் பண்ணியாச்சு. இப்ப நம்ம ரசிகப்ரியாவுக்கு வருவோம். இந்த இராகத்தின் ஆரோகணம், அவரோகணம் இதோ;

ஸ ரி3 க3 ம2 ப த3 நி3 ஸா
ஸா நி3 த3 ப ம2 க3 ரி3 ஸ

ரொம்ப நேரம் பாடறத்துக்கு கொஞ்சம் கஷ்டமான ராகம் அப்படீன்னு சொன்னாலும், ரசிகப்ரியா ஒரு அழகான, ரசிக்கும்படியான ராகமாகும் (தலைப்பு வந்தாச்சு. ஓகேவா?). ஆனா, இதுலே நெறயப் பாட்டு இல்ல. இருக்கற ஒண்ணு, ரெண்டு பாட்டைத்தான் இங்கே போடலாம்னுதான் ஒரு ஐடியா.

மொதல்ல சினிமாப் பாட்லேர்ந்து ஆரம்பிக்கலாமா? "கோவில் புறா" அப்படீங்கற படத்ல வர்ற "சங்கீதமே"ங்ற இந்தப் பாட்டு, ரசிகப்ரியா ராகம்தான். ஆனா வழக்கமான சினிமாப் பாட்டு மாதிரியே, இதிலும் ஒரே ராகம்தான் முழுசும் இருக்கும்னு கேரண்டியெல்லாம் கொடுக்க முடியலை. சரி, பாட்டை இப்பக் கேட்கலாமா?



கர்நாடக சங்கீதத்லே மொதல்லே நாம் கேக்க இருக்கறது, ரவிகிரண் பாடின "ரசிகப்ரியே, ராக ரசிகப்ரியே" என்ற பாடல். அதனன இங்கே கேக்கலாம்.

ரசிகப்ரியாவின் ஆரோகணம், அவரோகணம் என்னென்னு ஏற்கெனவே பார்த்தோம். அதனை டெவலெப் செய்வது எப்படின்னும், ஜெயதேவரின் அஷ்டப்தி ஒண்ணும் இங்கே கேப்போம் இப்ப.

இப்ப அடுத்ததா கேக்கப் போறது ஒரு அழகான தில்லானா. இதைப் பாடினது யாருன்னா, மறைந்த பண்டிட்.விஸ்வேஸ்வரன்அவர்கள். நாட்டிய மேதை சித்ரா விஸ்வேஸ்வரன் அவர்களின் கணவர். இந்தத் தில்லானாவை, ஒரு முறை ஒரு ஊர்லேர்ந்து, இன்னோரு ஊருக்குக் கார்ல போகும்போது இயற்றினாராம். கர்நாடிக், ஹிந்துஸ்தானி சந்தூர், கிடார்னு எது எடுத்தாலும், ஒரு ஆர்வத்துடன் செய்த ஒரு மேதை அவர்.






சிதம்பரம் அகாடெமி ஆஃப் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ்லேர்ந்து இந்தத் தில்லானா அடங்கின "அந்தர்த்வனி" ங்கற "சிடி"ய வெளிட்ருக்காங்க.

அடுத்ததா இப்ப நாம் பாக்கப்போறது "காவலம் ஸ்ரீகுமார்" என்ங்றவரோட பாட்டு. மனுஷன் ஜேஸுதாஸையும், பாலமுரளி கிருஷ்ணாவையும் கலந்த மாதிரி என்னமாப் பாடறார் பாருங்க. எளிமையான இருந்து கொண்டு எப்படி அலட்டாமல் பாடறார்ன்னும் பாருங்க. இவர் "கைரளி"ங்ர மலையாள டி.வி சானல் ஒண்லே அருமையான ப்ரொக்ராம் ஒண்ணு கொடுப்பார்ங்றது மட்டும்தான் இத்தன நாள் தெரிஞ்ச விஷயம். இப்பதான் புரியுது, ஸ்ரீகுமார் ஒரு பெரிய வித்வான்னு.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஸம்ஸ்க்ருதம், இந்த மொழிகள்லதான் கர்நாடிக் கச்சேரிலே பொதுவாக் கேட்போம். ஆனா, மலையாள மொழிலே பாடறதே இல்லியேன்னு நெனைக்கறது உண்டு. இப்போ நீங்க கேக்கப் போறது ஒரு மலையாளக் க்ருதி. "குட்டிகுஞ்சு தங்காச்சி" அப்படீங்றவர் எழுதினது.