Saturday, March 15, 2008

டாக்டர்.நரேந்திரனின் வினோத வழக்கு - நூல் விமர்சனம்


சுஜாதா எழுதி பூர்ணம் விசுவநாதன் இயக்கத்தில் வெளிவந்த "அடிமைகள்" போன்ற நாடகங்கள் சிலவற்றை எண்பதுகளில் பார்த்திருக்கின்றேன். நேற்றைய தினம் அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு மீண்டும் கிடைத்தது நாரத கான சபாவில், குருகுலம் ஒரிஜினல் பாய்ஸ் குழுவினரின் "டாக்டர்.நரேந்திரனின் வினோத வழக்கு" நாடகம் மூலம்.

நாடகத்தின் ஆரம்பக் காட்சியே கோர்ட் சீனாகும். அடுத்த இரண்டு மணி நேரமும் இந்தக் கோர்ட்டிலேயே இருக்கப் போகின்றோம் என்பதினை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அமெரிக்காவில் கை நிறைய சம்பாதித்து விட்டு, சென்னையிலுள்ள ஒரு பொது மருத்துவமனையில், டெபுடி டைரக்டராக இருக்கும் டாக்டர் நரேந்த்திரன், தற்போது குற்றம் சாட்டப்பட்டுக் கூண்டில் நிற்கிறார்.

அவர் மீது, மூன்று முக்கியக் குற்றச்சாட்டுக்களை வைக்கின்றார் பப்ளிக் ப்ராஸ்க்யூட்டர் நாகராஜன். பெரியவர் சரவணனுக்குச் சென்று கொண்டிருந்த குளூக்கோஸ், ஆக்ஸிஜன் போன்ற ஜீவாதாரக் குழாய்களைப் பிடுங்கிவிட்டு, அவரைச் சாகடித்தது முதல் குற்றச்சாட்டு. இரண்டாவது குற்றச்சாட்டு, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, தான் வேலை செய்யும் பொது மருத்துவமனையிலேயே, தனது காரியதரிசி மஞ்சுளாவிற்குக் கருக்கலைப்பிற்கு ஏற்பாடு செய்தார் என்பது. லூக்கேமியா என்ற இரத்தப்புற்று நோயினால் போராடிக் கொண்டிருக்கும், ரவி என்ற சிறுவனுக்குத் தவறான மருந்தைக் கொடுத்து, அவன் சாவதற்கும் காரணமாயிருந்தார் என்பது மூன்றாம் குற்றச்சாட்டு.

"எனக்கு வக்கீல் யாரும் தேவையில்லை, நானே எனக்காக வாதாடிக் கொள்கிறேன்," என்று சொல்லி, குற்றத்தையும் ஒப்புக்கொண்டு, தண்டனை வேண்டும் என்று கூறிக் கோர்ட்டாரைக் குழப்புகிறார் வினோதமான டாக்டர் நரேந்திரன். இதனை ஒப்புக் கொள்ளாத ஜட்ஜின் பரிந்துரையின் பேரில், கணேஷும், வசந்தும் டாக்டரின் கேசை எடுத்து நடத்துகிறார்கள். வழக்கமான டிடெக்டிவ்களாக வரும் இருவருக்கும், துப்பறியும் வேலை என்று ஒன்றும் பெரியதாக இல்லை. இவர்கள் நடத்தும் இந்தக் கேஸில் நியாயம் வென்றதா? அரசியல் வென்றதா? யதார்த்தம் என்ன? என்பதே கதை.

குருகுலம் குழுவினர் திறம்பட நடித்துள்ளனர். "பப்ளிக் ப்ராஸ்க்யூட்டர் தனது வாதங்களைச் சொல்லலாம்," என்ற வழமையான கோர்ட் வசனங்களையே கேட்டுப் புளித்துப் போன காதுகளுக்கு, ஜட்ஜ் வழக்கறிஞர்களைப் பெயர் சொல்லி அழைப்பது (நாகராஜன், உங்க க்ராஸ் எக்ஸாமினேஷனை ஆரம்பியுங்க...) புதுமையாகவும், உண்மையிலேயே கோர்ட் விவாதங்கள் இப்படித்தான் யதார்த்தமாகவும் இருக்குமோ என்றும் யூகிக்கத் தோன்றுகின்றது. ஜட்ஜ் பாத்திரம் ஏற்ற குருகுலம் M.B.மூர்த்தி முதல், "எளவு" எனப்படும் இளவழகன் வரை அனைவரும் அளவாகவே நடித்திருக்கிறார்கள் எனலாம். ஓவ்வொரு வசனங்களிலும் தோன்றும், அங்கதத்திலும் சுஜாதா எட்டிப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றார். பாத்திரங்களின் வேடப் பொருத்தங்கள் அருமை. டாக்டர் நரேந்திரனின் உயரமான ஆளுமை, அவருக்குக் கச்சிதமாகப் பொருந்துகின்றது. ஒரு நேரத்தில், கோர்ட்டிலேயே, "போடா" என்று சொல்லுவது அவரது கேரக்டரைப் புரிந்து கொள்ள வைக்கின்றது. முதிர்வான கணேஷும், நடிகர் சூர்யா போன்ற இளமையான வசந்த்தும் பாத்திரப் பொருத்தத்தில் நிச்சியமாக ஏமாற்றவில்லை. ஆனால் குறுந்தாடியுடன் கூடிய கணேஷையும், ஜொள்ளுவிட வாய்ப்பில்லா வசந்த்தையும் யாரும அவ்வளவாக எதிர்பார்த்திருக்க முடியாது. சிறுவன் ரவி, பார்வையாளர்கள் பெரும்பான்மையோரை அழ வைத்திருப்பான். பத்தாம் வகுப்புப் பாடங்களைப் படித்துவிட்டு, வகுப்பாசிரியரிடம் பாடம்(!) வாங்கிப் பின்னர், அப்பாவிடமும் பெல்ட்டால் அடி வாங்கும்போது, ஏனோ "தாரே ஜமீன் பர்" ஞாபகத்திற்கு வந்தது.

"அன்னியன்", "இந்தியன்" போன்ற கதைகளையெழுதி வந்த வாத்தியாருக்குப் பல ஆண்டுகளாகவே, இந்தியச் சமூகத்தின் மேல் இருந்து வந்த ஒரு சினிசிசத்தினை டாக்டர் நரேந்திரன் மூலம் புரிந்துகொள்ள முடிகின்றது. ஆனால் "அறிவாளியாகவும், மனிதாபிமானமும் மிக்க ஒரு மனிதன், மதியூகத்துடனும் செயல்பட முடியாதா?," என்ற கேள்வி மனதினில் எழாமலில்லை. மஞ்சுளாவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கலாமே! ரவியின் பெற்றோர்களிடமிருந்து கையெழுத்து வாங்கி வைத்திருக்கலாமே," என்றெல்லாம் யோசித்தால் கதையாவது, நாடகமாவது.

இடைவேளை ஏதுமில்லாமல், காட்சிக்குக் காட்சி விறுவிறுப்பு கூட்டிக்கொண்டே சென்று பார்வையாளர்களை இரண்டு மணிநேரம் பரவசப்படுத்தினாலும், தீவிர சுஜாதா ரசிகர்களுக்கு, அவர் எழுத்தினால் ஏற்பட்ட தாக்கத்தை, அவரது சினிமாவோ, நாடகங்களோ தரவில்லை; தரவும் இயலாது," என்பதே உண்மை.

- சிமுலேஷன்