Thursday, August 14, 2008

பிறந்தநாள் வேஷ்டியும் காலணிப் பரிசும்

பொதுவாகவே பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடாவிட்டாலும், 'பிராண்டட்' சட்டை பேண்ட் மற்றும் ஹோட்டல் வகையறாக்களுக்கு 1500-2000 ரூபாய் வரை செலவாவது வழக்கம். இந்த முறை சற்றே வித்தியாசமாகக் கொண்டாட எண்ணி, பட்ஜெட்டைக் குறைத்துக் கொண்டு வேஷ்டி சட்டையுடன் முடித்துவிடத் திட்டம் போட்டேன். காரணம்*** இறுதியில் சொல்கிறேன். ஒரிரு நாட்கள் முன்பு தி.நகரில் கண்ணில் பட்ட ராம்ராஜ் ஷோ ரூமுக்குச் செல்ல எண்ணினேன். நடிகர் ஜெயராமை கலக்கலாக மாடலிங் செய்ய வைத்து, வேஷ்டி மார்க்கெட்டில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்துள்ள ராம்ராஜ் நிறுவனம் தி.நகர் பாண்டி பஜாரில் சமீபத்தில் தமது வேஷ்டி வகையறாக்களுக்காகப் பிரத்யேக ஷோ ரூம் ஒன்றினைத் திறந்துள்ளார்கள். சாதாரண ஜரிகை வேஷ்டி, மயில்கண் வேஷ்டி தவிர எத்தனை வெரைட்டி? ஆச்சரியமாக உள்ளது. இது வரை நீங்கள் பார்க்காத வண்ணங்களில், விதவிதமான கரைகளில் வேஷ்டிகள் இருப்பதைப் பார்த்தால் வேஷ்டிப் பிரியர்களுக்குக் கொண்டாட்டம்தான். (ராம்ராஜ் எத்தனை நாடுகளில் மில் வைத்துள்ளாரகள் என்பது மற்றுமொரு வியப்பான விஷயம்? )
( மயில்கண் ஜரிகை வேஷ்டி)

(பருத்தி வேஷ்டி)

இந்த வேஷ்டி வகையறாக்கள் சாமான்யரும் வாங்கும் வண்ணம் சுமார் 200 ரூபாயிலிருந்து இருக்கின்றன. பாரம்பரிய உடை அணிய விருப்பம் இருப்பவர்களை ஒரு முறை இந்த ஷோ ரூமுக்கு விஜயம் செய்ய பரிந்துரைக்கின்றேன். வெளிநாடு வாழ் மக்களே, விரைவில் இவர்கள் ஆன்லைன் வர்த்தகமும் செய்யவுள்ளார்கள்.

***இன்று (14th) ஆங்கில வருடப்படி பிறந்தநாள்; நாளை நட்சத்திரம். நாளைய தினம் அருகிலுள்ள பள்ளிக்குக் குடும்பத்துடன் சென்று சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது 80 பள்ளி மாணவர்களுக்கு காலணிகள் வழங்கவுள்ளோம். சந்தோஷத்திலேயே அதிக சந்தோஷம் அடுத்தவரை சந்தோஷப்படுத்திப் பார்ப்பதுதான் என்பது அனுபவித்துப் பார்த்தால்தான் தெரிகின்றது.

- சிமுலேஷன்