Saturday, April 10, 2010

வாத்தியார் - ம.வே.சிவக்குமார் - நூல் விமர்சனம்


சுஜாதா, ஆதவன் ஆகியயோர் அளவுக்கு இல்லாவிட்டாலும், கிட்டத்தட்ட அதே நடையில், "மத்யமர்" கதைகள் கொடுத்துக் கொண்டிருந்த காரணத்தினால் ம.வே.சிவக்குமார் மீது ஒரு நல்ல மதிப்பீடு உண்டு. அவரது "அப்பாவும் இரண்டு ரிக்ஷாக்காரர்களும்", "பாப்கார்ன் கனவுகள்". "வேடந்தாங்கல்" ஆகிய புதினங்களும், தினமணிக்கதிரில் வந்த நல்ல பல சிறுகதைகளும் மனதைப் பெரிதும் கவர்ந்துள்ளன.

கிழக்குப் பதிப்பகத்தின் மூலம் வெளிவந்த "வாத்தியார்" சிறுகதைத் தொகுதியில் 19 சிறுகதைகள் உள்ளன. இந்தத் தொகுப்பின் இறுதியில் வரும் "வாத்தியார்", சற்றே பெரிய சிறுகதை. "வாத்தியார்", புனைவா, அல்லது அனுபவமா என்று கேட்டால், இது அசோகமித்திரனின் "ஒற்றன்" போன்ற ஒரு அனுபவம் கலந்த புனைவு என்று கூறலாம். கதையின் நாயகனான வாத்தியார் யார் என்றால், பள்ளி ஆசிரியரோ, பாட்டு வாத்தியாரோ அல்லது கார்யம் பண்ணி வைக்க வந்த வாத்தியாரோ அல்ல. அந்தக் கால சினிமா ரசிகர்களுக்கும், தமிழர்களுக்கும் "வாத்தியார்" என்ற பெயரில் பெரிதும் பரிச்சயம் ஆன எம்.ஜி.ஆர் தான்.

கதையின் களம், மாம்பலம் எனப்படும் தி.நகர் மட்டுமே. கிருஷ்ணவேணி தியேட்டர், கிரசண்ட் பார்க் தெரு, தணிக்காசலம் முதலித் தெரு, ஆர்க்காடு முதலி தெரு என்று எனக்கு மிகவும் பழக்கப்பட்ட இடங்களில் கதையைப் பயணிக்கச் செய்வதன் மூலம், பல இடங்களில் "ஸேம் பிஞ்ச்" அடிக்கவைக்கின்றார் ம.வே.சி. நான் 76ஆம் வருடம் கோடை விடுமுறைக்கு மாமா வீட்டுக்கு வந்த போது, அவர் இருந்த வீட்டுக்கு எதிர் வீடாக இருந்த எம்.ஜி.ஆர் வீடுதான் கதையின் முக்கியக் களம் என்ற போது (மீண்டும் ஸேம் பிஞ்ச்)சுவாரசியம் மேலும் கூடியது.

பள்ளி விடுமுறைக்கு திவாகரின் குடும்பம், நெய்வேலியிலிருந்து சென்னை வந்து, பணக்கார மாமா வீட்டில் வந்து கொட்டம் அடிக்குமிடத்தில் கதை துவங்குகின்றது. "விக்கிரம சிங்கா. தோல்வியை ஒப்புக் கொள். மலர்புரி நாட்டுக்கு இனி நானே அரசன்" என்று பஞ்ச் டயலாக் எல்லாம் பேசி குச்சிச் சண்டை போடுகிறார்கள் கஸின்ஸ். சீட்டுக் கட்டு ஆடுகிறார்கள். ஐஸ் க்ரீம் வாங்கிச் சாப்பிடுகிறார்கள். பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, அத்தை என எல்லோரும் கூடிக் குதூகலிகிறார்கள்.

இந்த விடுமுறை நாட்களிலேயே, பணக்கார மாமா கிரகப்ரவேசம் செய்து புது வீட்டிற்கு போகிறார். சேட்டிடமிருந்து வீடு வாங்கிய பிரபலங்களில் ஒருவர் மாமா. மற்றொருவர் மக்கள் திலகம். ஆர்க்காடு முதலித் தெருவில் வாத்தியார் வீட்டிற்கு அடுத்த வீடான மாமாவின் புதிய வீட்டுக்குச் செல்லும் போது எல்லோரும் எம்.ஜி.ஆர் என்று 'ஆ'வென்றிருக்க, நம்ம திவாகருக்கு மட்டும் அவர் மேல் ஒரு ஈர்ப்பும் வரவில்லை. மாறாக ஒரு வித குரோதமே வருகின்றது. அந்தக் காலத்தில் கீழ்த்தட்டு மக்களைப் பெரிது கவர்ந்தவர் எம்.ஜி.ஆரென்றால், நடுத்தர மக்களின் நாயகன் சிவாஜிதான். மேலும் இருவரும் திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நட்சத்திரங்களென்பதால் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு சிவாஜி விரோதி. சிவாஜி ரசிகர்களுக்கு எம்.ஜி.ஆர் விரோதி. சமயம் கிடைக்கும் போதெல்லாம் தாக்கிக் கொண்டேயிருப்பார்கள். வாத்தியார் கதை நாயகன் திவாகரும் சிவாஜி ரசிகன்தான். மேலும் வாத்தியார் வீட்டில் நடக்கும் ஷூட்டிங்கில், தனது கண்ணால் அந்தக் காட்சியையும் பார்த்து விடுகின்றான். ஆம். அவனது கனவுக் கன்னியான மஞ்சுளா (ஸேபி) வேறு வாத்தியாருடன் நடிப்பது ஆத்திரத்தைக் கிளப்புகிறது. "அழகிய தமிழ் மகள் இவள்; இரு விழிகளில் எழுதிய மடல்" என்று வாத்தியார் மஞ்சுளா இடுப்பை வளைத்துப் பிடித்து ஆட, திவாகரும் அவனது கஸின் வேம்புவும், தங்கள் வீட்டிலிருந்து "கம்-செப்டம்பர்" இசையை பலமாக ஒலிக்க வைக்கிறார்கள். சின்னவர் வீட்டிலிருந்து ஆட்கள் வந்து புகார் சொல்ல, மாமி குழந்தைகளை சப்போர்ட செய்து, அவர்களைத் திருப்பி அனுப்ப, ஷூட்டிங் கேன்சல் ஆகின்றது.

மறுநாள் காலை, எம்.ஜி.ஆர் தனது வீட்டில் நுழைய இருக்கும்போது, பக்கத்து வீட்டிலிருந்து, மஞ்சுளா பாதிப்பிலிருந்து இன்னமும் மீளாத திவாகர் செய்யும் காரியம், "டேய் கிழவா" என்று கத்திவிடுவது. எம்.ஜி.ஆர் "யார் கத்தியது?" என்று பார்த்துவிடுகின்றார். கண்ணாடி போட்ட பையனைத் தூக்கி வரச் சொல்கிறார் வாத்தியார். ஒரு த்ரில்லரைப் போல, அடுத்து என்ன நடக்குமோ என்று வாசகர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டிவிடுகின்றார் ம.வே.சி.

காலச்சக்கரம் ஓடி, திவாகர் வங்கி உத்யோகம் பெற்று, ஒரு நாள் வேலை மாற்றல் பெற்று வருவது 'ராமாவரம்' கிளைக்கு. அவனுக்கு மீண்டும் எம்.ஜி.ஆரைத் தரிசிக்க ஒரு வாய்ப்பு. இம்முறை அவர் முதல் அமைச்சர். பிறகு சில நாட்களில் அப்போலோ, ப்ரூக்ளின் என்று மருத்துவ சிகிச்சை. தமிழ்நாடே அவருக்காக பிரார்த்தனை செய்கின்றது. தொகுதியில் இல்லாமலே, வெளிநாட்டிலிருந்துகொண்டு படுத்துக் கொண்டே ஜெயிகின்றார் மக்கள் திலகம். எப்படி மக்கள் இந்த ஆளுமைக்காக உருகிறார்கள் என்று கொஞ்சம், கொஞ்சமாக சற்றே வியப்பு  ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது திவாகருக்கு.

ஒரு நாள் ராமாவரத்தில் ரோட்டில் சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் போது, அருகில் வந்து தன்னையும் மதித்து சைகை மொழியில் அறிவுரை சொன்ன எம்.ஜி.ஆரைப் பார்த்து முதன் முறையாக ஆடிப் போகின்றான் திவாகர். எப்பேர்ப்பட்ட மனிதர் இவர் என்று வியந்தோதுகின்றான். இவரையா நாம், "டேய், கிழவா" என்று அறியாமையில் சொன்னோம் என்று கலங்கி நிற்கின்றான்.

ம.வே.சியின் "வாத்தியார்" சற்றே புனைவு கலந்து, பெரிதும் நினைவலைகள் கொண்ட எளிமயான நடையில் அமைந்த, மெல்லிய நகைச்சுவையுடன் கூடிய கதை. எனக்கு மிகவும் பரிச்சயமான களம் என்பதால் என்னைப் பெரிதும் கவர்ந்தது. மத்யமர் கதை படிக்கும் மற்றைய வாசகர்களையும் கவரும் என்றே நினைக்கின்றேன். "வாத்தியாரிடமிருந்து நாயகன் திவாகர் மட்டுமல்ல. வாசகர்களும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கு" என்று கதைத் தலைப்பின் மூலம் ம.வே.சி சொல்லமல் சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம்.

- சிமுலேஷன்

3 comments:

Simulation said...

Hi Simulation,

Congrats!

Your story titled 'வாத்தியார் - ம.வே.சிவக்குமார் - நூல் விமர்சனம்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 11th April 2010 03:49:01 PM GMT

Here is the link to the story: http://www.tamilish.com/story/223025

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

cheena (சீனா) said...

அருமையான நூல் விமர்சனம் சிமுலேஷன் - 1973 - 2006 சென்னையில் இருந்தேன் - கொஞ்சம் கொசு வத்தி சுத்த வச்சீட்டிங்க

நன்று நன்று - புத்த்கம் ஆன் லைனில் ஆர்டர் செய்து விடுகிறேன் - சரியா

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

Simulation said...

சீனா,

புத்தகம் ஆர்டர் செய்துவிட்டீர்களா?

- சிமுலேஷன்