Friday, February 12, 2010

அபூர்வ ராகங்கள்-02-சாவித்ரி

சாவித்ரி என்ற ராகம் அபூர்வ ராகங்களில் ஒன்று. இது ஹரிகாம்போதி என்ற மேளகர்த்தா ராகத்தின் ஜன்யமாகும்.. இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:-

ஆரோகணம்: S G3 M1 P N2 S
அவரோகணம்: S N2 P M1 G3 S

இந்த ராகத்தில் கர்நாடக இசையில் பாடல்கள் ஏதும் அமைந்ததாகத் தெரியவில்லை. ஏன்? விருத்தம், RTP போன்ற வகையறாக்களைக் கூட யாரும் பாடுவதாகத் தெரியவில்லை. நினைவுக்குத் தெரிந்த வரையில் எல்.சங்கர் மட்டுமே வயலினில் இந்த ராகத்தைப் பயன்படுத்தியிருக்கின்றார். அதுகூட சாவித்ரியில் தொடங்கிப் பின்னர் ஒர் ராகமாலிகையாக மாறிவிடுகின்றது. இந்த சாவித்ரி ராகமாலிகையைக் கேட்க வேண்டுமென்றால் இங்கே சென்று கேட்கலாம்.

தமிழ்த் திரையிசையில் சாவித்ரி ராகத்தில் அமைந்த பாடல்கள் என்று எடுத்துக் கொண்டால் எண்ணி நாலே பாடல்கள்தான் உள்ளன. இவற்றில் முதன்மையானது எது என்றால் இசைஞானி இளையராஜா இசையமைத்து ஜெயச்சந்திரன் தனது குழுவினரோடு பாடிய "சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்" என்ற பாடலாகும். இது, 'காற்றினிலே வரும் கீதம்' என்ற திரைப்படத்தில் அமைந்துள்ளது. இடையிடையே 'தையரத் தையா; தையரத் தையா' என்று வரு கோரஸை கேட்கும்போது நாமும் அந்தப் படகில் சவாரி செய்வது போலவே இருக்கும். இன்டர்லூடாக வரும் புல்லாங்குழல் இசை அனைவரையும் மயக்கும் வண்ணம் அமைந்துள்ளது. என்னுடைய பேவரைட் பாடல்களில் இதுவும் ஒன்று. எனது மனைவிக்கும்கூட. இந்தப் பாடலைப் பாடித்தான் அவளைப் பதின்ம வயதில் மயக்கினேனாம். (பிப்ரவரி 14ஐ நெருங்கும்போது தானாக இதையெல்லாம் எழுதக் தோன்றுகின்றது). இப்போது இந்தப் பாடலைக் கேட்போமா?



அடுத்தாக 'புன்னகை மான்னன்' படத்தில் வரும் "கவிதை கேளுங்கள்" என்ற பாடல். இதுவும் சாவித்ரி ராகத்தில் அமைந்ததுதான்.



 மூன்றாவது பாடல், நம்ம டி.ஆர் இசையமைத்த "வசந்தக் காலங்கள்" என்ற பாடல். இடம் பெற்ற திரைப்படம் 'ரயில் பயணங்களில்". இதுவும் ஜெயச்சந்திரன் பாடிய பாடல் என்று தெரியும்போது, ஒரு வேளை சாவித்ரி ராகம் மளையாளத்தில் பரவலாகப் பாடப்படும் ராகமோ என்று எண்ணத் தோன்றுகின்றது.



நிறைவாக 'அழகன்' திரைப்படத்தில் இடம் பெற்ற "துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி" என்ற பாடல். சிறுவர், சிறுமியர் கோரஸாகப் பாடிய பாடல். பாடலின் அமைந்துள்ள தாளக்கட்டினைக் கவனித்தால் காட்சியமைப்புக்குப் பொருத்தமாக இசையமைத்திருப்பது தெரிய வரும்.



இன்னொமொரு சாவித்ரி தெலுங்குத் திரையுலகிலிருந்து. பாடியவர் மனோ.



மேலே கண்ட எல்லாப் பாடல்களுமே வெவ்வேறு மெட்டுக்களில் அமைந்திருப்பதனால் வெவ்வேறு ராகங்களில் அமைந்திருப்பது போலத் தோன்றும். ஆனால் கூர்ந்து கவனித்தால் அவற்றினிடையே இழையோடும் "சாவித்ரி" ராகத்தினை அறிந்து ரசிக்கலாம்.


- சிமுலேஷன்