Saturday, February 13, 2010

அபூர்வ ராகங்கள்-03-மஹதி

மஹதி என்ற ராகம் அபூர்வ ராகங்களில் ஒன்று என்று சொன்னால் மிகையாகாது. இது ஹரிகாம்போதி என்ற மேளகர்த்தா ராகத்தின் ஜன்ய ராகமாகும். இதன் ஆரோகாணம், அவரோகணம் வருமாறு:-

ஆரோகணம்:    S G3 PA N2 S
அவரோகண்ம்: S N2 PA G3 S

இந்த ஆரோகணம், அவரோகணத்தினைப் பார்த்தால் வெறும் நான்கே நான்கு ஸ்வரங்கள் தான் உள்ளன. நாலு ஸ்வரங்களை வைத்துக் கொண்டு எப்படி ஒரு ராகம் இருக்க முடியும்? அதில் எப்படிப் பாட முடியும்? என்று கேட்டால், சங்கீத மேதை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவால் மட்டுமே இது முடியும் என்றுதான் சொல்லலாம். ஆம். இந்த மஹதி ராகத்தினை உருவாக்கியவர் பாலமரளி கிருஷ்ணா அவர்கள்தான். அதுவும் அவர் இதனை உருவாக்கியது இப்போதல்ல. கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கும் முன்பு.


சென்னையில் இண்டியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் ஆதரவில் 1961ல் நடைபெற்ற ஒரு கச்சேரியில் இவர் இந்த ராகத்தினை அறிமுகம் செய்ததாகத் தெரிகின்றது. இந்தக் கச்சேரியிலிருந்து பாடிய "மஹதி" ராகப் பாடலான "மஹனீய மதுர மூர்த்தே" என்ற பாடலைக் கேட்போமா?

'அபூர்வ ராகங்கள்' தமிழ்த் திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது இயக்குநர் பாலசந்தர், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் ஒரு வித்தியாசமான, ஒரு அபூர்வ ராகத்தில் பாடல் வேண்டுமென்று கேட்டிருக்கின்றார். விஸ்வநாதன் தற்செயலாக பாலமுரளி கிருஷ்ணாவைச் சந்தித்திருக்கின்றாராம். அப்போதுதான் பாலமுரளி தனது உருவாக்கமான மஹதியைப் பற்றிக் கூறியிருக்கிறார். அதில் உருவானதுதான், மஹதி ராகத்தில் அமைந்த ஒரே தமிழ்த் திரைப்பாடலான "அதிசய ராகம்; ஆனந்த ராகம்; அழகிய ராகம்" என்ற பாடல். இந்த பாடலின் பல்லவி மஹதியில் துவங்கினாலும், பின்னர் ராகமாலிகையாக மாறிவிடுகின்றது. அதிசய ராகத்தினைக் கேளுங்கள் இங்கே.

 

கொசுறுச் செய்தி: மஹதி என்பது நாரதர் கையிலிருக்கும் வீணையின் பெயராகும். ஆனால், 'எந்தப் படத்திலும் நாரதர் வீணையின வைத்துக் கொண்டு வருவதாகப் பார்த்ததேயில்லையே! தம்புராவைதானே வைத்துக் கொண்டு வருவார்', என்று நீங்கள் வியப்பது புரிகின்றது. முதன் முதலாகத் திரைப்படத்தில் நாரதர் வீணையை வைத்துக் கொண்டு வருவதாகத்தான் காட்சிகள் அமைக்கப் பெற்றிருந்தன. ஆனல் நாரத இரண்டு குடங்கள் கொண்ட வீணையினை வைத்துக் கொண்டுபடும் அவஸ்தையினப் பார்த்த ஆர்ட் டைரக்டர், வீணைக்குப் பதிலாக எளிமையான ஒரே குடம் கொண்ட தம்பூராவினை வைத்துக் கொண்டிருப்பது போலக் காட்சிகளை மாற்றிவிட்டாராம். அதற்குப் பிறகு வந்த எல்லாப் புராணப் படங்களிலும், நாரதர் ஏன் என்று கேள்வி கேட்காமல் மஹதி என்ற வீணையினைத் தூக்கி எறிந்துவிட்டுத் தம்பூராவை மீட்டிக்கொண்டு, "நாராயண; நாராயண" என்று வலம் வர ஆரம்பித்துவிட்டார்.

- சிமுலேஷன்