Friday, November 26, 2010

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 07 - தர்மவதி

ராகசிந்தாமணி கிளப்பில் முன்பு ஒரு முறை "ஹேமவதி-தர்மவதி-நீதிமதி" ராகங்களுக்கிடையேயான ஒற்றுமை, வேற்றுமைகளைப் பார்த்தோம். இப்போது தமிழ்த் திரையிசையில் 'தர்மவதி' ராகத்தில் அமைந்த சில பாடல்களைப் பார்க்கலாம். அதற்கு முன்னால், தர்மவதி ராகத்தின் ஆரோகணம், அவரோகணம் என்னெவென்று பார்ப்போம்.

இராகம்:               மாயாமாளவ கௌளை
59ஆவது மேளகர்த்தா இராகம்
ஆரோகணம்:     ஸ ரி2 க2 ம2 ப த2 நி3 ஸ்
அவரோகணம்: ஸ நி3 த2 ப ம2 க2 ரி2 ஸ

தர்மவதி ராகத்தினை தீக்ஷிதர் வழி வந்தவர்கள் 'தம்மவதி' என்றும் அழைப்பதுண்டு. ஆனால் "தர்மவதி வேறு; தம்மவதி வேறு", என்று விபரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.

முதலில் நாம் கேட்க வேண்டியது "உத்தரவின்றி உள்ளெ வா" படத்தில் எம்.எஸ்.வி இசையில் அமைந்த "காதல், காதல் என்று பேச கண்ணன் வந்தானோ" என்ற பாடல். ஆனால் இந்த அருமையான பாடலுக்கு இணையத்தில் சுட்டி கிடக்கவில்லை. (யாராவது தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்). எனவே மேலே செல்வோம்.

"அவன் ஒரு சரித்திரம்" என்ற படத்தில் வரும் "அம்மானை, அழகு மிகு அம்மானை" என்ற பாடல். இசை எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள். நல்ல பாவத்துடன் பாடியுள்ளவர்கள், டி.எம்.எஸ் மற்றும் வாணி ஜெயராம்.  வாணி ஜெயராம் அவர்கள் திரையுலகிற்கு வந்த புதிதில் பாடிய பிரபலமான பாடல்களில் இதுவும் ஒன்று. சிவாஜியும். மஞ்சுளாவும் மிகுந்த ரொமான்ஸுடன் நடித்திருப்பார்கள்.


எம்.எஸ்.வி அவர்களுக்கு தர்மவதி ரொம்பவும் பிடிக்கும் போல இருக்கிறது. மீண்டும் இதே ராகத்தில், 'மன்மத லீலை' படத்தில், 'ஹலோ, மை டியர் ராங் நம்பர்" என்ற பாடல்.



அடுத்தாக எஸ்.பி.பியின் தேன் சிந்தும் குரலில் "இளஞ்சோலை பூத்ததா" என்ற பாடல். இடல் பெற்ற படம் "உனக்காகவே வாழ்கிறேன்". முன்பே ஒரு முறை குறிப்பிட்டது போல 'கோரியோகிராபி' மிகவும் சுமாராக இருந்தாலும், தர்மவதி ராகம் சொட்டி வரும் இந்தப் பாடலில்,  இடையிடையே வரும் புல்லாங்குழல், வேணை, வயலின் இசை, மிருதங்க ஒலி மற்றும் சலங்கை ஒலிகளும் அமர்க்களமாக இருக்கும்.



"இளஞ்சோலையில்' சிவகுமாரும், நதியாவும் சொதப்பியிருக்கும்போது, மம்முட்டியும், மதுபாலாவும் "அழகன்' படத்தில் ஒரு பாடலுக்கு வெகு நளினமாக ஆடியிருப்பர்கள். அது தர்மவதி ராகத்தில் அமைந்த "தத்திதோம்" என்ற பாடல்தான். பார்க்கலாமா?



அடுத்து நாம் பார்க்க இருப்பது, 'ரமணா" படத்தில் இடம் பெற்ற "வானவில்லே, வானவில்லே" என்ற பாடல். ஹரிஹரனும், சாதனா சர்கமும் பாடியது. சந்தோஷமும், குஷியும் குதித்து நடை போடும் அதே வேளையில், ஒரு வித மெல்லிய சோகமும் இழையோடுவது தர்மவதி ராகத்திற்குரிய சிறப்பு என்று நினைக்கின்றேன். அந்த உணர்ச்சிகளை இந்தப் பாடலில் தெளிவாகப் பார்க்கலாம்.



நிறைவாகப் பார்க்க இருப்பது "ஜென்டில்மேன்" படத்தில் இடம் பெற்ற "ஒட்டகத்தைக் கட்டிக்கோ" என்ற பாடல். ஏ.ஆர்.ரகமான் இசையில் அமைந்த 'ரிதம்முடன்' கூடிய தர்மவதி ராகத்தில் அமைந்த ஒரு அழகான் பாடல். இயக்குநர் சங்கரின் பிரம்மாண்டம், ரசிக்கத்தக்க நடனம், ஒப்பனை, இசை என்று ஒவ்வொருவரின் திறமைகளையும் ஒருங்கே கொண்டு வந்த பாடல்.




தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 06 - சாருகேசி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 05 - மாயாமாளவ கௌளை

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 04 - மோகனம்

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 03 - கீரவாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா

 - சிமுலேஷன்