Monday, September 12, 2011

கொலு வைப்பது எப்படி? - 03

முன்னேற்பாடுகள் – கொலு வைக்குமிடம்

முதன்முறையாகக் கொலு வைக்க இருப்பவர்கள், கொலு வைக்கும் இடத்தினைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். கொலு கிழக்குப் பார்த்து இருப்பது நல்லது என்றாலும், அபார்ட்மெண்ட்களில் எந்த இடம் வசதியோ அப்படித் தேர்வு செய்து கொள்ளலாம்.  முதலில் இந்த இடத்தையும், இந்த அறையியும், ஜன்னல்களையும்  ஒட்டடை அடித்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். விருந்தினர்கள் வரும் இந்த அறையிலுள்ள ஃபேன் முதலானவற்றை சோப் பவுடர் கொண்டு சுத்தம் செய்து பளிச்சென துடைக்கலாம்.  ட்யூப் லைட் மற்றும் அலங்கார விளக்குகளையும் அவற்றின் ஷேடுகளையும் கழற்றி சுத்தம் செய்ய வேண்டும். திரச்சீலைகள் இருந்தால், அவற்றையும் கழட்டித் துவைத்து அயர்ன் செய்து மாட்டலாம்.  கொலு வைக்கும் இடத்திற்கு மேல் தோரணங்கள் கட்டத் தோதாக, சீலிங்க்கிலிருந்து அரை அடி தூரத்தில் நான்கு புறங்களிலும் ஆணி அடித்து அவற்றின் குறுக்கு நெடுக்காக துருப் பிடிக்காத இருப்புக் கம்பிகளை கட்டி வைக்கலாம். இந்தக் கம்பிகள் தோரணங்கள் கட்டத் தோதாக இருக்கும்.

கொலுப்படிகள் வைக்கும் இடத்திற்கு மேலாக துணியால் ஒரு கூடாரம் அமைத்தால் எடுப்பாக இருக்கும். இதனை விதானம் அல்லது அஸ்மான்கிரி என்று சொல்லுவார்கள். இவை கிரி ட்ரேடர்ஸ் அல்லது காதி கிராமோத்யோக் பவன் போன்ற கடைகளில் கிடைக்கும். இவை விலை அதிகம் என்று எண்ணினீர்கள் என்றால் உங்கள் வீட்டிலுள்ள புதிதான, பயன்படுத்தாத பெட்-ஸ்பிரெட்டைக் கூடப் பயன்படுத்தலாம். இதனை கொலுப்படியின் மேலே கூடாரம் போலக் கட்ட வேண்டும். அங்கே மின் விசிறி இருந்தால் அதனக் கழட்டிவிட்டு, ஆஸ்மானகிரி துணியில் ஒரு சிறிய துளையிட்டு அதனைக் கம்பிகளில் கட்டி விட்டுப் பின்னர் மின் விசிறியினை மாட்டலாம். இந்தத் தோரணத்திற்கு அழகூட்ட ரசகுண்டுகள், சமிக்கி வேலைப்பாடுகள் அமைந்த தெர்மோகோல் பதக்கங்கள் ஆகியவற்றை ஆங்காங்கே மாடி வைக்கலாம்.  இதற்குப் பின்னர் சுவற்றில் ப்ரேம் செய்யப்பட்ட துணியில் வரையப்பட்ட ஓவியங்களையும் மாட்டி வைக்கலாம். கொலு வைக்குமிடத்தை நன்கு பெருக்கி, மெழுகி கோலமிடலாம்.

பொம்மைகளை பரணிலிருந்து பத்திரமாக இறக்கி ஒவ்வொரு பொம்மையாக எடுத்து துணி கொண்டு தூசி தட்ட வேண்டும். இதற்கு ஒரு பட்டை பெயிண்டிங் பிரஷ்ஷினையும் உபயோகப்படுத்தலாம். பீங்கான் பொம்மைகளை சோப் கொண்டு அலம்பலாம். பொம்மைகள் சிறிய அளவில் உடந்திருந்தால் பெவிகால், குவிக்-பிக்ஸ் அணை கொண்டு சரி செய்யலாம். பொம்மைகளின் வர்ணங்கள் மங்கி இருந்தால், பொம்மைகளின் தேவைக்கெற்ப 'எனாமல் பெயிண்டோ' அல்லது 'வாட்டர் கலரோ' கொண்டு வண்ணம் தீட்டலாம். முடியவில்லயென்றால், குறைந்த பட்சம், 'கோல்டன் கலர் பெயிண்ட்' வாங்கி வந்து பொம்மைகளின் கிரீடம், மற்றும் இதர ஆபரணங்களுக்கு மட்டும் தங்க நிறத்தில் வர்ணம் தீட்டி விட்டாலே போதுமானது. அவை புதிய பொம்மைகள் போல ஜொலிக்கும்.


நல்ல பொம்மை உடைந்து விட்டது, ஆனால் நம்மால் சரி செய்ய முடியாது என்று எண்ணும் பட்சத்தில் பொம்மை ரிப்பேர் செய்பவர்களிடம் கொடுத்துச் சரி செய்யலாம். மயிலாப்பூர் சித்திரக் குளம் அருகே பொம்மைகளை சரி செய்து வர்ணம் தீட்டி, புதிய பொம்மை போலவே செய்வதற்கென்று ஒரு பிரத்யேகக் கடை உள்ளது. பரமசிவம் என்பவர் இந்தத் தொழிலைப் பல வருடங்களாகாச் செய்து வருகின்றார். இந்த மாதிரிக் கடைகள் ஒரு சிலவே இருப்பதால், பொம்மைகளை ரிப்பேர் செய்ய நீங்கள் முந்திக் கொள்ள வேண்டியிருக்கும்.


தொடரும்…
- சிமுலேஷன்

2 comments:

குடந்தை அன்புமணி said...

தங்களது இந்த இடுகையிலிருந்து சில குறிப்புகளை பதிவர் தென்றல் இதழில் (தங்களின் பெயருடன்) வெளியிடுகிறேன், நன்றி,

குடந்தை அன்புமணி said...

குடந்தை அன்புமணி thagavalmalar.blogspot.com