Friday, July 01, 2011

கண்ணாடிக்கு குட்பை

என் முதல் பையன் ஆதித்யாவுக்கு கண்ணாடி அணிவது என்பது அறவே பிடிக்காது, என்றாலும் வேறு வழியில்லாது வெகு நாட்களாக கண்ணாடி அணிந்து வந்துள்ளான். கண் எக்சர்ஸைஸ் செய்து பவரை  குறைந்தாலும், கண்ணாடி அணிவதை ஒரு போதும் தவிர்க்க முடியவில்லை. ஆனால் சமீப காலமாகத் தனது நண்பர்கள் பலரும் லேசர் ஆபரேஷன் செய்து கொண்டு கண்ணாடி அணிவதனையே விட்டுவிட்டார்கள் என்று சொல்லித் தானும் அப்படிப்பட்ட ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டுமென்று சொல்லி வந்தான். எங்களது வழமையான கண் டாக்டரிடம் கேட்ட போது, இதற்குச் சுமார் எண்பதாயிரம் செலவு செய்ய வேண்டி வரும்  என்று சொன்னதால், அவ்வளவு எல்லாம் செலவு செய்து இதுதேவையில்லை என்று எண்ணி முடிவினைத் தள்ளி போட்டோம். சமீபத்தில் எனது தங்கை பெண், வாசன் கண் மருத்துவமனையில் இதே மாதிரியான ஆபரேஷன் செய்து கொண்டு எல்லாம் நல்லபடியாக முடிந்தது என்று feedback கொடுக்க நாங்களும் வாசன் கிளினிக்கை அணுகினோம். காலடி எடுத்து வைத்த முதல் நிமிடத்திலிருந்து நல்லதொரு ரிசப்ஷன். அத்தனை பணியாளர்ககுக்கும், வாடிக்கையாளர்களை எப்படி அணுக வேண்டுமென்ற நல்லதொரு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது என்பது கண்கூடாகத் தெரிகின்றது.
Zyoptix Laser Surgery என்றழைக்கப்படும் இந்த சிகிச்சை ஒரு Personalised treatment ஆகும். இரண்டு சிறப்பு மருத்துவர்கள் கண்களைச் சோதித்த பின், கண்ணை ஸ்கேன் பண்ணிக் கொண்டு வரச் சொல்லுகிறார்கள். இதற்குச் சுமார் 700 ரூபாய் ஆகின்றது. பின்னர் இந்த ஸ்கேன் ரிபோர்ட்டை ஆய்வு செய்து, நம் கண்கள் இந்த அறுவை சிகிச்சைக்கேற்றவைதானா என்று முடிவு செய்கிறார்கள். நமக்கு வசதியான நாளில், வசதியான நேரத்தில் ஆபரேஷன் தியேட்டர் காலியாக இருக்கும் பட்சத்தில் ஆபரேஷனை வைத்துக் கொள்ள சம்மதிகின்றார்கள்.  ஒவ்வொரு கண்ணுக்கும் பத்து நிமிடங்கள் என்று மொத்தம் இருபது நிமிடங்களில் ஆபரேஷன் முடிகின்றது. மற்றுமொரு இருபது-முப்பது நிமிடங்கள் அங்கே இருந்து அவர்களது அறிவுரைகளக் கேட்டுக் கொள்ள வேண்டும். இந்த சிகிச்சக்குச் சுமார் 36,000 ரூபாய் செலவாகின்றது. ஒரு வார காலம் டி.வி. கம்ப்யூட்டர், மொபைல் போன்ற போன்ற சாதனங்களைப் பார்க்காமல் வீட்டில் இருந்து கொண்டு ஒய்வு எடுக்க வேண்டும். பின்னர் வாசன் விளம்பரத்தில் வருவது போல “கண்ணாடிக்குக் குட்பை” என்று தைரியமாகச் சொல்லலாம். எனது மகன் பெற்ற வெற்றியினக் கண்டு, எனது மனைவியும் zyoptix laser surgery செய்து கொள்ள வேண்டுமென்று விருப்பப்பட்டு அவளது விருப்பமும் சென்ற வாரம் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. கண்ணாடி அணியாமல், எல்லோரையும் போலப் நாமும் பார்க்க முடியும் என்ற அவளது முப்பதாண்டு கால ஆசை நிறைவேறியுள்ள இந்த நேரத்தில், விஞ்ஞானத்தின் வளர்ச்சியையும், குறிப்பாக மருத்துவத்துறையின் ஜெட் வேக வளர்ச்சியையும் வியந்தோதுகின்றோம். நாங்கள் சென்றிருந்த நாளில் கிட்டத்தட்ட 10 பேருக்கு இதே ஆபரேஷன் நடைபெற்றது. வந்திருந்த ஒவ்வொருவரும், சமூகத்தின் வெவ்வேறு மட்டங்களிலிருந்து வந்தவர்கள என்று பார்க்கும் போது, மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதும் புலப்பட்டது.
-       - சிமுலேஷன்