Thursday, September 15, 2011

கொலு வைப்பது எப்படி? - 05

கொலுவிற்கு மதிப்புக் கூட்டுதல்
எவ்வளவு படிகள் கொலு வைத்தாலும், எத்தனை அழகான பொம்மைகளை வாங்கி வைத்தாலும், கொலுவுக்கு மதிப்புக் கூட்டுவது படிகளைச் சுற்றி வைக்கப்படும் பூங்கா, தெப்பக் குளம், மலை போன்ற சமாச்சாரங்கள்தான். ஏனென்றால் இங்குதான் நாம் குடும்பத்திலிருக்கும் அனவரது பங்களைப்பினையும் பெற்றுக் கிரியேட்டிவிட்டி எனப்படும் படைபாற்றலைக் காண்பிக்க இயலும்.  இப்போது இவையனைத்தையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

முதலில் பூங்கா அமைக்க இடம் இருகின்றதா என்று பார்த்துக் கொண்டு அதற்குத் தோதான இடத்தினைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். பூங்கா  போன்ற சமாச்சாரங்களில் சின்னஞ்சிறு பொம்மைகளைப் பயன்படுத்தப் போவதால் அவை விருந்தினர்களின் கண்பார்வையில் இடம் பெறும் வண்ணம் அமைக்க வேண்டும். பூங்கா செய்ய ஒரு பெரிய மரப் பெட்டியினைப் எடுத்து கொள்ளலாம். ஆனால் தண்ணீர் பட்டு ஈரமாகி, மரப்பெட்டி கெட்டு விடலாம். அதறுகுப் பதிலாக செங்கற்களை வரிசையாக அடுக்கி அதற்குள் மணலைப் பரப்பி, அதன் மேல் செம்மண்ணையும் பரப்பி, நீர் தெளிக்க வேண்டும். இதில் ராகி, கம்பு போன்ற தானியங்களைத் தூவி, மீண்டும் நீர் தெளித்து வர அவை ஓரிரு நாட்களில் முளைவிட்டு அழகாகக் காட்சி தரும். கடுகு போன்றவற்றைப் பயன்படுத்தினால் அவை ஓரிரு நாளில் கிடு,கிடுவென வளர்ந்து அடுத்த சில நாட்களில் தலை சாய்ந்து அசிங்கமாகக் காட்சியளிக்கும். எனவே கடுகினைத் தவிர்த்து  ராகி எனப்படும் கேழ்வரகினைப் பயன்படுதலே சிறந்தது. இவ்வாறு செய்வதற்குப் பதிலாக சிறிய செவ்வக வடிவப் ப்ளாஸ்டிக் பெட்டிகளில் தானியங்களை மாடுலராக வளர்த்து அந்தப் பெட்டிகளைக் கூடத் தேவையான இடங்களில் வைக்கலாம். இந்த தண்ணீர் தெளித்தல், செடி வளர்த்தல் போன்ற சமாச்சாரங்கள் எல்லாம் எங்களுக்கு ஒத்து வராது என்று எண்ணினீர்களென்றால், இருக்கவே இருக்கிறது, ப்ளாஸ்டிக் செடிகள், மரங்கள் மற்றும் புல்வெளிகள். இவற்றைத் தேவையான அளவு வாங்கிப் பரத்தலாம். சிறிய ப்ளாஸ்டிக் கப்புகளில் இருப்பமான பேப்ரிக் பெயிண்ட் அடித்து, அவை காய்ந்த பின்னர் அவற்றில் ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கரைசலை ஊற்றி செயற்கை செடிகளையும் மரங்களையும் ஆங்காங்கே நட்டு வைக்கலாம்.


புல்வெளியினைச் சுற்றி அட்டையால் காம்பவுண்டுச் சுவர்கள் எழுப்பி அவற்றிக்கு அழகாகப் பெயிண்ட் அடிக்கலாம். பூங்காவினுள் குட்டிக் குட்டியாகச் சிலைகளும் வைக்கலாம். உள்ளே கற்களாலோ அல்லது மணலாலோ ரோடுகள் அமைக்கலாம். வேலி, பூங்கா விளக்குகள், பூங்கா நுழை வாயில், கதவு ஆகியவற்றை உங்கள் கற்பனை வளத்திற்கேற்ப அமைக்கலாம். இந்த்ப் பூங்காவினுள் பொம்மைகளை வைக்கும் போது அவை அளவு விகிதம் (Proportion) சரியாக இருக்கின்றதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லயென்றால் ஒரு யானை பொம்மை பக்கத்தில் சம்பந்தம் இல்லாத அளவில் பெரிய கிளி பொம்மை வைக்க ரொம்பவுமே தமாஷாக இருக்கும்.

அடுத்தாக வைக்க வேண்டியது தெப்பக் குளம். வீட்டில் கான்க்ரீட்டால் ஆன ரெடிமேட் ஹோமகுண்டம் இருந்தால் அதனை தெப்பக் குளம் செய்யப் பயன்படுத்தலாம். அல்லது உலாகத்தால் ஆன தட்டுக்களில் தண்ணீர் விட்டும் இதனை செய்யலாம். குண்டத்தின் அல்லது தட்டின் அடியில் வெளிர் நீலம் அல்லது பச்சை நிறத்தில் வண்ணம் அடித்துக் கொள்ளலாம். மீண்டும் தண்ணீர் போன்ற சமாச்சாரங்கள் அலர்ஜி என்றால், ஒரு வெளிர் நீல நிறக் காகித்தத்தின் மேல் ஒரு செவ்வகக் கண்ணாடி பதித்து குளத்தினை சிமுலேட் செய்யலாம். தண்ணீர் இருப்பது போலவே தெரியும். குளத்தின் மையத்தில் நீராழி மண்டபம் அமைக்க வேண்டும். தண்ணீரில் சிறு, சிறு மீன்கள், ஆமை போன்ற நீந்தும் உயிரினங்களை விடலாம். குளத்தின் கரையில் ஆங்காங்கே மனிதர்கள் இருப்பது போல வைத்தால் இயற்கையாக இருக்கும்.


பூங்கா, தெப்பக் குளம் வைத்தது போக இன்னமும் இடம் இருக்கிறது என்று எண்ணும் பட்சத்தில் ஒரு மலை அல்லது குன்றம் அமைக்கலாம். ஓரளவு கொண்ட கற்களை அடுக்கி வத்தோ அல்லது பழைய செய்தித் தாட்களையோ கசக்கிப் போட்டோ அதன் மீது மண்ணைக் குழைத்துப் பூசி மலையினை உருவாக்கலாம். இந்துப் பாரம்பரியத்தின்படி எந்த ஒரு மலையின் மீதும் ஒரு கோயில் கண்டிப்பாக இருக்கும். எனவே மலை மீது ஒரு கோயில் அமையுங்கள. கோயில் அமைத்தால் கீழேயிருந்து அதனை அடைய படிக்கற்களும், வாகனங்கள் செல்ல மலைப்பாதையும் அமைக்க வேண்டும். ஏன்? விஞ்ச் அனப்படும் இழுவை ரயில் கூட அமைக்கலாம். கொஞ்சம் அட்டையும், கொஞ்சம் வண்ணமும், சிறிது கற்பனை மட்டுமே தேவை. மலையின் மீது ஆங்காங்கே விளக்குகள், மரங்கள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றை அழகுடன் வைக்க வேண்டும்.


இவை தவிர உங்களிடம் இருக்கும் இடம் மற்றும் பொருட்களின் வசதிக்கேற்ப கிரிக்கெட் செட், ரயில் நிலையம், மார்க்கெட் போன்ற எந்த விதமான கருத்தையும் பிரதிபலிக்கும்  வண்ணம் செட் போட்டு உங்கள் வீட்டு கொலுவின் மதிப்பக் கூட்டலாம்.
 தொடரும்…

- சிமுலேஷன்