Saturday, April 07, 2012

மாசில் வீணையும் மாலை மதியமும்....


மாசில் வீணையும் மாலை மதியமும் 
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே 
ஈசன் எந்தை இணையடி நீழலே.

இறைவனாகிய எந்தையின் திருவடி நீழல் குற்றமற்ற வீணையின் நாதமும் , மாலையிலே தோன்றிய நிலவின் தண்மையும் , வீசுகின்ற தென்றலின் சாயலும் , செறிந்த இளவேனிலின் மாட்சியும் , ஒலிக்கும் வண்டுகள் மொய்க்கும் பொய்கையின் குளிர்ச்சியும் போன்று இன்பம் பயப்பதாகும் .

மாசில் - சுர இலக்கணங்களில் சிறிதும் வழுவாது இலக்கணம் முழுதும் நிரம்பச் சொல்லைமிழற்றும் இயல்புடைய . மாலைமதியம் - மாலைநேரத்தில் தோன்றும் முழுமதி . பௌர்ணிமை மதியைக் குறித்தது . வீசுதென்றல் - மெல்லிதாய் வீசுகின்றதென்றல் ; வீங்கு - பெருகிய . இளவேனில் - சித்திரை , வைகாசி மாதங்கள் . மூசு வண்டு - ( மாலைநேரத்தே மலரும் நீர்ப்பூக்களிடத்தே மொய்க்கின்ற ) வண்டுகள் . அறை - ஒலிக்கின்ற . பொய்கை - அகழ்வாரின்றித் தானே தோன்றிய நீர்நிலை . ஈசன் எந்தை , இருபெயரொட்டு . தலைவனாகிய என் தந்தை . இணையடி - இரண்டு திருவடிகள் . திருவடிநீழல் ஐம்புலன்களுக்கும் விருந்துதரும் இயற்கையின்பத்தை ஒத்தது என்றார் ;

வீணை , செவி . மதியம் , கண்கள் . தென்றல் , மூக்கு . வண்டு அறை பொய்கை, வாய் . வேனில் மெய் . இவ்வாறு முறையே ஐந்து புலன்களுக்கும் இன்பந்தருவனவாய இயற்கைச் சூழலை ஒத்து நீற்றறையில் திருவடி நீழலை எண்ணிய அப்பர்சுவாமிகளுக்குத் தண்மையைத் தந்தது ஆதலின் திருவடிநீழல் அளிக்கும் இன்பத்தோடு ஒப்பிட்டார் .

 

திருநாவுக்கரசர் தேவாரம் - ஐந்தாம் திருமுறை - பாடல் எண் - 1

ராகம் - மலயமாருதம்

மெட்டமைத்தவர் - நெய்வேலி கணேஷ்

 - சிமுலேஷன்