Friday, July 31, 2015

உயிர் நிலம் - மேலாண்மை பொன்னுசாமி - நூல் விமர்சனம்



கடந்த 28ஆம் தேதி, தமிழ் புத்தக நண்பர்கள் சார்பில் நடத்தப்பட்ட 15ஆவது மாதாந்திரக் கூட்டத்தில், திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களின் "உயிர் நிலம்" நாவலை ஆய்வு செய்து விமர்சன உர கொடுத்தேன். நிகழ்ச்சி நடந்த இடம் "டேக் மையம்", நாரத கான சபா எதிரில், டி.டி.கே. சாலை. நிகழ்ச்சியின் முழு விடியோ வடிவம் இங்கே.



உரையின் எழுத்து வடிவம் இங்கே:-

1.       துவக்கம்
கடந்த 14 மாதங்களாக நூல் விமர்சனம் செய்ய புகழ் பெற்றவர்களே நூல் விமர்சகர்களாக அழைக்கப்பட்டிருந்த இந்த மேடையில், என்னையும் நூல் விமர்சனம் செய்ய அழைக்க முன் வந்த தமிழ்ப் புத்தக நண்பர்களின் அமைப்பளர்களுக்கு, குறிப்பாக திரு.சாருகேசி அவர்களுக்கு எனது நன்றி கலந்த வணக்கத்தினைக் கூறிக் கொண்டு, பெருமதிப்பிற்கு உரிய மேலாண்மை பொன்னுசாமி அவர்களின் "உயிர் நிலம்" நாவலை விமர்சனம் செய்வதில் இங்கே பெரும் மகிழ்ச்சி கொள்கின்றேன்.
2.       நூற்குறிப்பு
நூல் விமர்சனத்திற்குள் இறங்குவதற்கு முன்பாக நூல் பதிப்பு பற்றி ஒரு சில வார்த்தைகள் கூற விரும்புகின்றேன். இந்த நூலினைப் பதிப்பித்தவர்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்; முதற் பதிப்பு வெளி வந்தது ஜூலை, 2011; மொத்தப் பக்கங்கள் 540; அத்தியாயங்கள் 62; விலை – ரூ. 270/இந்தப் பதிப்பைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் அதன் அச்சு நேர்த்தியினைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வெண்டும். கண்ணை உறுத்தாத வகையில் இடைவெளிகள் விட்டு வயதானவர்களும் கூட எளிதில் படிக்கும்படி அச்சிட்டுள்ளார்கள்,  
3.       கருகளம்
இந்த நாவலின் முக்கியக் கருத்து என்னவென்றால் அது மரபு சார்ந்த விவசாயம் மற்றும் நவீன விவசாயம்இவை  இரண்டுக்குமிடையே உள்ள போராட்டம்.  நிலத்தில் உழைப்பைப் போட்டுப் பணம் எடுக்க நினைத்தால், கண்டிப்பாகப் பலன் கிடைக்கும். லாபம் வரும். ஆனால் நிலத்தில் பணத்தைப் போட்டுப் பணம் எடுக்க நினைத்தால் கஷ்டமும் ஏற்படும், நஷ்டமும் ஏற்படும். இதுதான் நாவலின் முக்கியக் கருத்து.. மேலும் உழைப்பு மற்றும் சோம்பேறித்தனம், சிக்கனம் மற்றும் ஊதாரித்தனம் ஆகியவறிற்கு  இடையேயான வேறுபாடுகள்,  விவசாயி மற்றும் வியாபாரி, ஆகியோருக்கு இடையேயான வேறுபாடுகள் ஆகியவற்றையும் மறை பொருளாகக் காண்பிக்கின்றார் ஆசிரியர்.

எனக்குத் தெரிந்த வரையில் பெரும்பாலும் விவசாயத்தைப் பற்றி  யாரவது பேசினால் அது நஞ்சை விவசாயத்தைப் பற்றித்தான் இருக்கும். புஞ்சை விவசாயம் என்றால் அது வெறும் மானம் பார்த்த பூமியில் பயிர்கள் தாமாகவே விளையும் என்றுதான் நான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் புஞ்சை விவசாயம் என்றால் அது மட்டும் சும்மா வந்து விடாது; அதற்கும் அரும்பாடுபட்டாக வேண்டும் என்பதனை வெகு ஆழமாக விளக்கியுள்ளார் இந்த நாவலில்.

உயிர் நிலத்தின் கதை நடக்குமிடம் சிவகாசி அருகே உள்ள திருவேங்கடம் என்ற ஒரு நகரம். அல்லது கிராமம் என்றும் சொல்லலாம் அருகே உள்ள ஊர்களான  சத்திரப்பட்டி, குலசேகரங்கோட்டை, சாத்தூர், இருக்கண்குடி ஆகிய ஊர்களும் கதையில் இடம் பெறுகின்றன.

4.       கதை மாந்தர்கள்
இப்போது கதை பிரதான மாந்தர்களைப் பற்றிப் பார்ப்போம். பரமசிவம் ஒரு விவசாயி. அவரது மனைவி காமாட்சி. அவளும் விவசாயிதான். பரமசிவத்தின் மச்சான் முறையான அருஞ்சுனை.  இவர் ஒரு மளிகைக் கடை வைத்திருக்கின்றார். பிறகு பரமசிவத்தின் மூத்த மகன் அழகேசன் மற்றும் இளைய மகன் முருகேசன்.  இது தவிர ஈஸ்வரி, ராசாத்தி,  செண்பகம் ஆகிய பெண் பாத்திரங்கள். திருமணத்திற்கு முன்பு ராசாத்தியுடன் தொடர்பு வைத்திருந்ததைத் தவிர, மூத்த மகன் அழகேசனைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை. அப்பா பேச்சை கேட்டுக் கொண்டு நடப்பவன். மரபிலே வந்தவன்.  முருகேசனும் அண்ணன் அழகேசனைப் போலவே, திருமணத்திற்கு முன்னரே ஒரு பெண்ணுடன், அதாவது செண்பகத்துடன் தொடர்பு உள்ளவன். இவர்களில் முக்கியமான மூன்று பாத்திரங்களைப் பற்றி மட்டும் சற்று விளக்கமாகக் கூற விரும்புகின்றேன்.   

4.1.    பரமசிவம்
இவர்தான் உயிர் நிலத்தின் கதாநாயகர் அல்லது முதன்மையாளர்.  நல்லவர். அசுர உழைப்பாளி. கை சுத்தம். வாய் சுத்தம். நாணயத்துலே சத்தியவந்தன். பாசம் உள்ளவர். மனைவியை நேசிக்கிறவர். மண்ணை நேசிக்கிறவர். மாட்டைக் கூட தோழனாக  நினைக்கிறவர்சம்பாதித்திருக்கிறார்.  உழைப்பின் முலமாக விவசாயத்தை  மதிப்புக்குரியதாக்கிறார். விவசாயம் செய்து, வீடும் காடுகரையும் வாங்கலாம் என்று நிருபிக்கிறவர். பாராட்டுக்கும், வணக்கத்துக்கும் உரியவர். ஒளிவு மறைவில்லாத பேச்சு; உலகத்தையே ஜெயித்து விடலாம் என்கிற நம்பிக்கை வீச்சு உடையவர்.
4.2.    காமாட்சி
இவள் பரமசிவத்தின் மனைவி. பாடுபடறதிலே ராட்சசி. உழைப்பாளி. பெரிய பணக்கார வீட்டுக்காரி என்ற மமதையில் வீட்டுச் நிழல் செடியாகாதவள். காட்டு வெயிலில் பச்சயம் உண்டு வளர்ந்தவள். உழைப்பால் பொருளையும் அழகையும் படைத்தவள். கணவன் மனம் குளிர்ந்த வேளையில், குடும்பத்துக்கு எது நல்லதோ, அதனைப் பக்குவமாகப் பேசி சாதிப்பதில் சாமர்த்தியசாலி. கணவனுக்கு மதி சொல்ற மந்திரி. இந்த "மதி சொல்ற மந்திரி" என்ற பதம் அடிக்கடி இடம் பெறுகின்றது. கடந்த ஒரு மாதமாக இந்த நாவலைப் படித்து வந்த விளைவோ என்னவோ தெரியவில்லை. நான் கூட, இப்போதெல்லாம், என மனைவி ஏதாவது ஒரு உருப்படியான நல்ல யோசனை சொன்னால், அவளை "மதி சொல்ற மந்திரி" என்று சொல்ல ஆரம்பித்துள்ளேன்.
4.3.    முருகேசன்
இவன்தான் பரமசிவத்தின் இளைய மகன். கதையில் எதிர்ச்செயலாற்றுகின்ற வில்லன் என்றும் சொல்லலாம். இவன் முகத்தில் மாறிமாறி சோப்புப் போட்டுக் கழுவித் துடைத்த பளபளப்பு. படிப்பின் வாசம், நடை உடை பாவனையில். நாசூக்குப்  பேர்வழி. படித்த ஆபீசர் போன்ற நுணுக்கமாகவும், மென்மையாகவும், நிதானமாகவும் உண்ணுகின்றவன். வீடெல்லாம் கம்பஞ் சோற்றை சாப்பிட, இவனுக்கு மட்டும் நெல்லுச் சோறு. அம்மா கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க திண்ணையில் படுத்துக் கொண்டு சாண்டில்யனின் "கடல்புறா" நாவலை வாசித்துக் கொண்டிருக்கிறவன். உழைப்பதை வீண்வேலை என்று இகழ்ச்சியாக எண்ணுபவன். சட்டை மடிப்பு கலையாமல், பொட்டு வியர்வை வழியாமல் விவசாயம் செய்ய நினைப்பவன். இவன் இவ்வாறு இருக்கவும் காரணங்கள் உள்ளன. சிறுவயதில் அப்பாவின் முடிவுகளால் ஏற்பட்டால் சில கசப்பான சம்பவங்களே அவனை அவருக்கு எதிராக செயல்பட வைக்கின்ற.
நிலத்திலே உழைக்காமல் பணம் போட்டு பணம் எடுக்க நினைக்கும் முகேசனுக்கும்,   அதே நிலத்தில் உழைப்பை மட்டுமே பிரதான முதலீடாகக் கொண்டு  பணம் பண்ணும் அவன் தந்தை பரமசிவனுக்கும் இடையே நடைபெறும் போராட்டம்தான் உயிர் நிலத்தின் கதை.
5.       கதையின் பரிமாணங்கள்
மேலாண்மை பொன்னுசாமி அவர்கள் ஒரு விவசாய பாரம்பரியத்தில் வந்தவர் என்பதால் அவர் இந்தக் கதையினை எப்படி உழுதுள்ளார் என்று காட்ட விரும்புகின்றேன். அவர் அகலமாகவும் உழுதுள்ளார். ஆழமாகவும் உழுதுள்ளார். நாவலுக்கு வளம் சேர்க்கும் வண்ணம் சிறந்த உவமை, உருவகங்கள், சொலவடைகள், வட்டார வழக்குகள், நனவோடைகள் ஆகியவற்றினை இயற்கை உரமாக இட்டு நாவலுக்கு வளம் சேர்த்துள்ளார்.  உவமைகள்தான் இங்கே ஆவாரங்கொழை; உருவகங்கள்தான் இங்கே கொளுஞ்ச்சிக் கொழை.
5.1.    அகலம்
முதலில் எத்தனை அகலமாக உழுதிருக்கின்றார் என்று பார்ப்போம். அதாவது எத்தனை விஷயங்களை விவரித்துள்ளர் என்று பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. ஆட்டு குட்டி வளர்ப்பது, ஆட்டுக் கிடை போடுவது, உன்னி பொறுக்குவதுஎரு உரம்  தயாரிப்பது, கலப்பை உழுவது, களை எடுப்பது, கமலை ஓட்டுவது, கம்பு குத்துவது, கடன் வாங்குவது, கொழை அறுப்பது, சண்டு பொறுக்குவது, செயற்கை உரம் இடுவது, டக்கர் ஓட்டுவது, தொழுவம் பராமரிப்பது, பருத்தி எடுப்பது, பருத்திப்பால் அரைப்பது, பாத்தி கட்டுவது,  புளிச்ச நார் கயிறு தயாரிப்பது, பூச்சிக்கொல்லி மருந்து அடிப்பது, மாடு வளர்ப்பது, வண்டல் மண் அடிப்பது, விளைபொருள் விற்பது. ஸ்ஸ். அப்பா! சுமார் 560 பக்கங்கள் கொண்ட "உயிர் நிலத்தினைப்" படித்துவிட்டு வந்தவுடன் நமக்கே விவசாயத் துறையில் ஒரு கிராஷ் கோர்ஸ் முடித்து விட்டு வந்த ஒரு முழுமையான உணர்வு ஏற்படுகின்றது.
இது தவிர ஜார்கன்ஸ் என்று சொல்லக்கூடிய துறை சார்ந்த கலைச் சொற்கள் பல தெரிந்து கொள்கின்றோம். யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி, என்.பி.கே காம்ப்ளக்ஸ் உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகளான மோநோகிராப்ட்ஸ், எண்டோ சல்பான், மோனாசில், டெஸிஸ், எக்காலக்ஸ் இவையெல்லாம் படிக்கின்ற நமக்கு அத்துபடியாகின்றது.
அதற்காக உயிர் நிலம் நாவல் வெறும் விஷய தானம் செய்யும் ஒரு அகராதி அல்ல. மனித மனங்கள், உறவுகள், பாசம், நேசம், கோபம், தாபம், வெறுப்பு, கண்டிப்பு, கேலிகள், கிண்டல்கள்  ஆகிய உணர்ச்சிகள் பீரிட்டெழும் ஒரு செழுமையான நிலம். காமமும் இங்கே விதிவிலக்கல்ல.                
5.2.    ஆழம்
அடுத்து அவர் எப்படி ஆழமாக உழுதிருக்கின்றார் என்று பார்ப்போம். அதாவது அவர் ஒரு விஷயத்தினை எடுத்துக் கொண்டால் எவ்வளவு ஆழமாகச் செல்கிறார் என்று பார்த்தால் அதுவும் பிரமிப்பாகவே இருக்கின்றது. உதாரணமாக காமாட்சி கம்பு தானியத்தினை உரலில்  இட்டு அதனை சோறாக்கும் ஒரு காட்சி. ஒரு நூல் ஆசிரியரால் இதனைப் பற்றி எத்தனை வரிகள்தான் எழுத முடியும்? ஆனால் இவர் எழுதியுள்ள விவரணங்களைக் கவனியுங்கள்.
நாட்டுக் கம்பு தூசி, துப்பட்டி, கொம்மை இல்லாமல் புடைத்து, குத்துரலில் போட்டு காமாட்சி பருவட்டாகக் குத்தினாள். நாட்டுக் கம்பில் இருக்கிற சொச்சமிச்ச கொம்மை இணுக்குகள் வெளியேறிவிடும். மறுபடியும் சுளகில் அள்ளிப் போட்டு, புடைத்து எடுப்பாள். சுத்தமாகப் புடைத்த பிறகு கம்பின் நிறமே மாறி விடும். பரிசுத்தமான கம்பு. மறுபடியும் குத்துரலில் போட்டு, லேசாக தண்ணீர் விட்டு உலக்கை போடுவாள். கை மாற்றி உலக்கை போடுவதில் காமாட்சி கெட்டிக்காரி. இடக்கையால் உயர்த்திக் கீழே விட்ட வேகத்தில் வலது கைபற்றும். உலக்கையைப் பற்றிய வேகத்தில் உயர்த்திக் கீழே "ணக்" கென்று இறக்குவாள். கம்புகள் குலுங்கும். குலுங்குகிற கம்புகள் உரலை விட்டு வெளியே துள்ளாமலிருக்க... வட்டமான உறைப்பெட்டியை வைத்திருப்பாள். அது குத்துரலுக்கு தொப்பி வைத்த மாதிரி இருக்கும்.
உலக்கை மேலும் கீழுமாக இறங்க, இறங்க நொறுங்க ஆரம்பிக்கும். சலங்கை சலங்கையாக மணிமணியாக உடைசலாகிற கம்பு, மெல்ல மாவு நொறுங்கலாக மாறும்.
ஓங்கி ஓங்கி உலக்கை போட வேண்டும். தோள்பட்டை இரண்டும் கடுகடுக்கும். ஒரு காலைப் பின்வைத்து, மறு காலை முன்வைத்து சற் றே குனிந்த நிலையில் கனத்த உலக்கையை உயர்த்தி... உயர்த்தி,,, அழுத்தமாகத் தாழ்த்த வேண்டும்.
உயர்த்திய உலக்கையை தாழ்த்தி உரலில் போடுகிற போதெல்லாம். "ஸ்ஸோய்...ஸ்ஸோய்..." என்று குனிந்து நிமிர்கிற அசைவுக்குறிய ரிதத்துடன் சத்தம் கொடுப்பாள்"
அது வெறும் சத்தமல்ல. மூச்சிரைப்பும், நெஞ்சு மூச்சுத் திணறலும்  நேராமலிருபதற்காக... வாய் வழியே விடுகிற பெ மூச்சுகள்.
குத்தக் குத்த... மாவு நொறுங்க நொறுங்க... ஒரு சிரங்கை தண்ணீர் விட... மாவு அடை, அடை யாகக் குமுறும்.       
நெறுநெறுப்பில்லாமல் மை மாதிரி மாவு மாறி விடும். ஓங்கி ஓங்கி உலக்கையைக் கை மாற்றிக் கை மாற்றிப் போடப் போட...வியர்வை ஊற்றும். செவியோர மயிர்க்கற்றையெல்லாம் "தொப், தொப்"பென்று நனையும். ஜாக்கெட்டெல்லாம்  நீர்க்காடு. முழங்கை மடிப்புக்களில் வியர்வைக் காடு.
அப்படிக் குத்திஎடுத்த கம்பு மாவை ஏற்கெனவே கொதித்துக் கிடக்கிற உலைப்பானையில் அள்ளிபோட்டு உப்பையும் அளவுப்படி போட்டு... உலையை மூடினால்....
தளதளவென்று கொதிக்கிற சத்தம். நீரும் மாவும் சேர்ந்து பிசின் போல மாறும். சோறு வெந்து தணிகிற போது,..."டுப்"...டுப்..டுப்"பென்று குமிழிகள் தெரிந்து, வெடிக்கும்.
கம்பஞ்சோறு  வாசம் மணக்கும். பானையிலிருந்து வருகிற ஆவியும், பசியை உருவாக்கும். அடி வயிறும், உள் மனசும் "கொண்டா, கொண்டா"வென்று கூப்பாடு போடும்.
வேஷ்டியை இடுப்பில் கட்டிக் கொண்டு, அர்ணாக் கயிறை தூக்கி மேலே விட்டான். துவட்டிய ஈரத்தலையில்  நீர்ச்சிதறல்.
"கம்பஞ் சோறா?...சோளச்சோறா?"
என்று கேட்கிற பரமசிவம்.சோளச்சோறு என்றால், சுமார் ரகம்.  கம்பை இடிப்பதை விட சோளம் இடிப்பது சுலபம். கம்பஞ்சோறு   என்றால் உசத்தி. உடம்புக்குக் குளிர்ச்சி. உடல் சூட்டை த்   தணிக்கும்.
அதிலும் குள்ளங் கம்பை விட, நாட்டுக் கம்பு உசத்தி. சோறும் வெள்ளை வெளேரென்று பாலாடைக் கட்டி மாதிரி இருக்கும்.
"கேட்டேன்லே..?"
"கம்பஞ் சோறுதான். அதிலும் நாட்டுக்கம்பு"
கம்பஞ் சோறு நாலு அகப்பையைப் போட்டு, வெங்கல வட்டிலை அவன் முன் வைத்தாள். கொதி சோறு ஆவி தகதகவென்று வந்தது.
அந்தக் கொதி சோற்றில் விரல்களை பதித்து ஒரு குழியை உருவாக்குகிற காமாட்சி, சுரீரென்று சுடுபட்ட விரலை உதறி, உதறியாற்றிக் கொண்டே, உரியில் தொங்கிய சிறிய மண்சட்டியிலிருந்து ஏற்கெனவே காய்ச்சி உறைய வைத்திருந்த கிடாய் கொழுப்பில் ஓர் உருண்டை திரட்டி, அந்தக் குழிக்குள் வைத்தாள். கொழுப்பு, சோற்றுக் கொதிநிலையில் உருகியது. குழிக்குள் நெய்யாகத் ததும்பியது.
ஓரம்சாரம் ஆறியிருந்த சாற்றை வழித்து, அதன் நெய்யில் தொட்டு வாயில் வைத்தான். கொழுப்பு வாசமும், வெண்குழைவான கம்பஞ் சோற்றின் மணமும் ஒரு ருசியாக இறங்கியது.
பரமசிவம், உள்நாக்கையும், மேல் அண்ணத்தையும், இணைத்து ருசி தாளாத உச்சபட்ச களி வெறியில் ஒரு "லொட்டை" போடுகிறான். கண்கள் சொருக ருசியை ரசிக்கிறான். உள்ளிருந்து காமாட்சி குரல்.
"என்ன...லொட்டை போடுகிற சத்தம் கேக்குது?"
"காமாட்சி கைமணம் ஆளைத் தூக்குது. கொழுப்பு வாசமும், கம்பஞ் சோறும் கொண்டா, கொண்டாங்குற அளவுக்கு ருசியாயிருக்கு."
ஒரு சாதாரண நிகழ்வு. எவ்வவளவு விவரிப்பு? எவ்வளவு விவரணங்கள்?
அடுத்து அருஞ்சுனை என்ற ஒரு பாத்திரம். மளிகைக் கடை வைத்திருக்கின்றார். அவர் கடையில் ஒரு காட்சி. ஒண்டி ஆளாக இருந்து கொண்டு எத்தனை வேலை செய்கின்றார். அவருக்குத்தான் எத்தனை மன ஓட்டங்கள்? அதை விவரிப்பதில்தான் பொன்னுசாமி எவ்வளவு விவரணங்கள் தருகின்றார்?     

                 
6.       மொழியாளுமை
நான் முன்னமே சொன்னபடி மேலாண்மை பொன்னுசாமி அவர்களுக்கு அவரது மொழியாளுமையே அவர்தம் நாவலுக்கு வளம் சேர்க்கும் இயற்கை உரங்கள். எத்தனை உவமைகள்? எத்தனை உருவகங்கள்? எத்தனை சொலவடைகள்? எத்தனை வட்டார வழக்குகள்? கொஞ்சம் மாதிரி பார்ப்போமா?
6.1.    உவமைகள்
நாவல் முழுவதும்  உவமைகள் பல கொட்டிக் கிடக்கின்றன. உதாரணத்திற்குச் சிலவற்றைப் பார்ப்போம்.
       மாட்டு வண்டிச் சக்கரங்கள் சென்று சென்று, அந்தச் சாலையிலுள்ள மணல் அரைபட்டு அரைபட்டு நெகுநெகுவென இருக்கிறது. அதற்கு அவர் வண்டிப் பாதைப் புழுதி, குமித்து வைத்த கேப்பை மாவு போல "மெதுக், மெதுக்கென்று" மிருதுவாக இருக்கிறது என்று சொல்கின்றார்.
       மாடுகளின் நிறத்தினைப் பற்றி வருணிக்கும் போது மயிலைக் காளைகள் ரெண்டும் வெள்ளை நிறத்தில் அடர் சிமெண்டுத் தூசியைத் தூவின மாதிரி ஒரு நிறம் என்கின்றார்.
       அழகேசன் ராசாத்தி வீ ட்டிற்குள் யாரும் அறியாதபடி நுழைய முற்படும்போது, அவரது உவமை இப்படி செல்கின்றது கருவாட்டு வாசம் பிடித்து நுழைகிற கள்ளப் பூனை மாதிரி சத்தமில்லாமல் உள்ளே நுழைந்தான்”.
       இவை தவிர அவமானத்தில் நிறை சபையில் இடைத்துணி உருவப்பட்ட பாஞ்சாலி போல குமுறுகிற முருகேசன் என்று ஒருமுறை சொல்கின்றார்
       அடுத்து ஒரு உவமை அவனுக்குள் ஒரே யோசனை, சின்னஞ்சிறு அறையில் சுற்றிச் சுற்றி வருகிற ஊதுவத்திப் புகையென

6.2.    கவியுருவகங்கள்
உவமைகளுக்கு அடுத்து Metaphor எனப்படும் கவியுருவகங்கள்.
       வெட்டுப்பட்ட பல்லிகளாகத் துடிக்கிற உதடுகள்
       கிறுக்குப் பிடித்துப் போய் நஞ்சடித்த கெண்டையாக சுற்றிச் சுற்றி வந்தாள்
       கிறுகிறுக்கிற முருகேசன் சர்க்கரைப் பாகில் சிக்கின ஈயாக
       மேகமில்லாத ஆகாயம், கழுவிப் போட்ட தாம்பாளமாகக் கிடக்கிறது
       நெல்லுச் சோறு மல்லிகை மொட்டுகளாகப் பூத்திருக்கும்
       மிளகாய்ச் செடியின் இலைகள் சுருட்டையடித்துப் போய், சுண்டெலிக் காதுகளாக நெளிந்து கிடக்கின்றன
       கடன் நெருப்பு நாக்குகள்
இவையெல்லாமே கிரமத்துச் சூழலில் பின்னப்பட்ட உவமைகள், உருவகங்கள். எந்த விதப் பாசாங்கும் இல்லாமல், எப்படி இயற்கையாக வந்து விழுகின்றன பாருங்கள்!

6.3.    சொலவடைகள்
கிராமத்துப் பின்னணி கொண்ட கதை என்றால் சொலவடைகள் இல்லாமலா? சொலவடைகள் இங்கே கொட்டிக் கிடக்கின்றன.
       உப்புக் கல்லுக்கும் பெற மாட்டாய் - உப்பு தான் விலை குறைந்த பொருள். உன்னை விற்றால் ஒரு உப்புக் கல் கூட பெற முடியாது. அவ்வளவுதான் உன் மதிப்பு.உழைக்காத எவனையும் பார்த்தால் பரமசிவன் அட்டிக்கடி சொல்லும் சொலவடை இது.
       சோற்றுக்குள் இருக்கான் சொக்கப்பன்
       உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா
       கழுதைக்குப் வாழ்க்கைப்பட்டால் உதைக்குத் தப்ப முடியுமா?
       ஒரலுக்கு வாழ்க்கைப்பட்டச்சு; ஒலக்கைக்குப் பயந்து என்னாகும்?
       எம்புட்டு எரை போட்டாலும் கள்ள ஆட்டுக்கு களவுப்புத்தி போகாது
       ஏலமாட்டாத  நாய்க்கு இடுப்பைச் சுத்தி ஏழெட்டு அருவாளாம்
       தாயானாலும், புள்ளயானாலும் வாயும்  வயிறும்  வேற  வேற  தானே
       ஆடு மேய்த்த மாதிரியும் ஆயிற்று;  அண்ணனுக்குப் பொண்ணு பார்த்த மாதிரியும் ஆயிற்று

6.4.    வட்டார வழக்கு
       விலாவிலே வெடிச்ச பய
       ஏலமாட்டாத பயல். ரோஷங் கெட்ட மோளை மாடு
       தாகத்துக்குத் தண்ணி கேட்டா... நீ மேகத்துக்கு ஆளனுப்பியிருக்குனு சொல்லுதே
       பொழைப்பு ஞாயம் "பப்பலா....பலப்பலா"ன்னு வாயப் பொளந்து கெடக்குதே....

7.       உத்திகள்
ஒரு நாவலாசிரியராக மேலாண்மை பொன்னுசாமி அவர்கள் பல்வெறு உத்திகளைக் கையாண்டு வாசகர்களைக் கட்டிப் போடுகின்றார். அவற்றில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், முதலாவதாக வருவது  ஐம்புலன்களையும் தூண்டுதல். அடுத்து வருவது நனவோடை உத்தியாகும்.
7.1.    ஐம்புலன்களையும் தூண்டுதல்
ஒரு தேர்ந்த பேச்சாளர் ஒரு சம்பவத்தினைப் பற்றிப் பேசும்போது பார்வையாளர்களை அந்த இடத்திற்கே அழைத்துச் சென்று விட வேண்டும். அதே போல ஒரு நாவலாசிரியரும் தனது வாசகர்களை கதை நடக்கும் களத்திற்கே அல்லது காலத்திற்கே அழைத்துச் சென்று விட வேண்டும். இது மேலண்மை பொன்னுசாமி அவர்களுக்குக் கை வந்த கலையாக இருக்கின்றது. இது எப்படி அவருக்குச் சாத்தியமாகின்றது?
ஐம்புலன்களான பார்த்தல், கேட்டல், சுவைத்தல், மணத்தல், உணர்தல்ஆகியவற்றினை ஒவ்வொரு அத்தியாயத்திலும் தூண்டி விட்டுக் கொண்டேயிருக்கின்றார் ஆசரியர். காமாட்சி கம்பு குத்தி சோறாக்கும் காட்சியில் சுவத்தலையும் மணத்தலையும் பார்த்தோம். ஒரு இடத்தில் காமாட்சி புல் அறுக்கும் காட்சி. பொழியோரத்து அருகம்புல்லை வேருடன் "பர்ருச்",  "பர்ருச்", சென்று பறித்தெறிந்தாள். அந்தப் பர்ருச், பர்ருச் சப்தத்தினைப பற்றி வாசிப்பவனுக்கு தன்னருகிலேயே யாரோ அறுப்பது போன்ற தோற்றத்தினை ஏற்படுத்துகின்றார் ஆசிரியர். அதே போல மிளகாய்ச் செடிகளைப் பற்றி விவரிக்கும்போது, virtual tour எனப்படும் கனவு பயணத்தில் நம்மால் பயணிக்க முடிகின்றது. அதனால்தால்தான் இந்த நாவலைப் படிக்க எடுத்த பின், நம்மால் கையை  விட்டு எடுக்க முடிவதில்லை.
7.2.    நனவோடை உத்தி
அடுத்து மேலாண்மை பொன்னுசாமி அவர்களின் தெரிந்த பலம் என்னவென்றால் அவரது நனவோடை உத்தி. ஆங்கிலத்திலே stream of consciousness என்று இதனைச் சொல்லுவார்கள். அதாவது முன்பு நடந்த நிகழ்ச்சிகளை பாத்திரங்களே எண்ணிப் பார்க்குமாறு கதையினை எழுதுவது. நனவோடை முறையில் கதையைக் கூறும் போது சில சிக்கல்களும் வரலாம். கதை நிகழ்வுகள் ஒன்றொடொன்று தொடர்பின்றி இருப்பது போலத் தோன்றும். ஆனால் இம்மாதிரிச் சிக்கல்கள் ஏதுமில்லாமல் சுலபமாகக் கதையினை நகர்த்தி செல்கின்றார் பொன்னுசாமி அவர்கள்.
நின்றான். நிதானித்தான். அவனுக்குள் மண்டை எரிகிற மாதிரியிருக்கிறது. மூளையின் அத்தனை ஜவ்வுகளையும் யாரோ கவ்வி இழுத்துப் பிடிக்கிற மாதிரி, தலைக்குள் ஒரு காந்தலான வலி.  
"எங்கே போறோம் ?"
"தெரியலே ?"

"என்னத்துக்குப் போறோம் ?"
"தெரியலே ?"

"ஈச்வரியைக் காப்பாத்தப் போறோமா ?"
"தெரியலே ?"

"காப்பாத்திர  முடியுமா ?"
"தெரியலே ?"

"கந்து வட்டிக்காங்கிட்டே கட்டுன பொண்டாட்டிய பறி குடுத்துறப் போறோமா ?"
"தெரியலே ?"

"அடுத்த வாரம் ஒரு லட்சம் புரட்டிர முடியுமா ?"
"தெரியலே ?"

"மூணு லட்சம் கடனையும் கட்டி, "மீண்டு" வந்துர முடியுமா ?"
"தெரியலே ?"

"ராவணன் கிட்டேயிருந்து ஈஸ்வரியை மீட்டெடுக்கப் போராடப் போறியா ?"
"தெரியலே ?"

"போராடுறதுன்னா, எப்படி? ஒரு லட்சம் ரூபாய் தான் முதல் பாணம். மூணு லட்சம் தான் ராம பாணம். இங்கிகிட்டே இருக்கா ?"
"தெரியலே ?"

இவையெல்லாமே இரண்டு பேர் பேசிக் கொள்ளும் விஷயங்கள் அல்ல. முருகேசன் தனக்குத் தானே பேசிக் கொள்வது. இது ஆசிரியரின் நனவோடை உத்திக்கு ஒரு எடுத்துக் காட்டு.             
8.       கதை சொல்லும் சேதி
கதை சொல்லும் சேதி என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், கடைசி அத்தியாத்தில் முருகேசன் அப்பாவைப் பற்றிக் குறிப்பிடுவதைச் சொன்னால் போதும்.
       அப்பா பழையவரல்ல...மரபானவர். பழைமை என்பது வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும். உடைத்துத் தகர்த்தால்தான், முன்னேற்றம் சாத்தியப்படும். மரபு என்பது வளர்ச்சிக்கு உரமாக இருக்கும். மாறத்துக்கும், ஒளியாகத் திகழ்ந்து வழி காட்டும். மரபு என்று நினைத்துப் பழைமையத் துதித்து விடக் கூடாது. பழைமையோ என்று நினைத்து மரபைப் புறக்கணித்து விடவும் கூடாது. பழைமையையும், மரபையும் இனம் பிரித்து,,,,தள்ளுவது தள்ளி, கொள்ளுவதைக் கொள்வதற்கு பகுத்தறிவு  வேண்டும். தன்னம்பிகையும், தன்னகங்காரமும் ஒன்று போலத் தொன்றும். ஆனால் நேர் எதிர்மறைக்குணம் கொண்டது. பழைமையும், மரபும் ஒன்று போலத் தொன்றும். ஆனால் நேர் எதிர்மறைக்குணம் கொண்டது. அய்யாவைப் பழைமை என்று நினைத்துப் புறந்தள்ளி விட்டேனோ? மரபுக்க் எதிராக விரம் கட்டி விட்டேனோ? தொட்டுத் தொடர வெண்டிய மரபை வெட்டித் தகர்த்து என்னையே வீழ்த்திக் கொண்டேனோ? என் மீதே காறித் துப்பிக் கொண்டேனோ?
       "மண்ணை நம்புனவன் பொழப்பெல்லாம் மண்ணுதான்"
"பரமசிவமும் மண்ணை நம்புனாரு. ஜெயிச்சாருல்லே?"
"அப்ப முருகேசன்...?"
"மண்ணை மதிக்காம...பணம் போட்டுப் பணம் எடுக்கிற தொழிலாக மாத்துனான். ஒழைக்கறதை கேவலம்னு நெனைச்சான்."

----- என்ன செய்கின்றோம்  என்பது முக்கியமல்ல; எப்படிச் செய்கின்றோம்  என்பது முக்கியம் -----

9.       தாக்கம்
பரமசிவம் நல்லவர்.  உழைப்பாளி. பாசமானவரும் கூட. இளைய மகன் முருகேசனோ சோம்பேறி. வெட்டி ஜம்பமும் கூட.  ஆனால் கதை படித்த  மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை; கதையின் இறுதிக் கட்டத்தில் எனக்கு முருகேசன் மேல் பரிவும் பச்சாதாபமும் ஏற்படுகின்றது. பரமசிவத்தின் மேல் கோபம் ஏற்படுகின்றது. அப்படி என்ன, மகனது துன்பியல் நிலையை விட கொள்கைதான் பெரிதா என்று தோன்றி விடுகின்றது? இப்படிப்பட்ட ஒரு தாக்கம் வாசகர்களுக்கு ஏற்படுவதை ஆசிரியர் விரும்புவாரா என்று தெரியவில்லை!
10.   நிறைவு
மேலாண்மை பொன்னுசாமி அவர்கள்  உயிர் நிலம் நாவலில் அகல உழுதுள்ளார். ஆழ உழுதுள்ளார். நேர்த்தியான கருவை விதையாக விதைத்துள்ளார்.  பாத்திரங்கள் வாடமலிருக்க நனவோடை என்னும் தண்ணிர் பாய்ச்ச மறக்கவில்லை. மேலும் உவமை, உருவகம், சொலவடைகள், வட்டார வழக்கு ஆகிய இயற்கை உரங்கள் தந்து நாவலைப் வளப்படுத்தியுள்ளார். நிறைவாக படிக்கின்ற வாசகருக்கோ, ஒரு மிகப் பெரிய மகசூல் அறுவடை செய்த விவசாயி போலத் திருப்தி ஏற்படுகின்றது என்றே சொல்லலாம்.

- சிமுலேஷன்