Wednesday, September 02, 2015

அந்தரத்தில் ஒரு ஆராய்ச்சி



உங்களால் கிட்டத்தட்ட நானூறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஒரு பொருளை பைனாகுலர் அல்லது தொலைநோக்கி இல்லாமல் வெறும் கண்ணால் பார்க்க முடிந்திருக்கின்றதா? என்னால் முடிந்திருக்கின்றது. என்னால் பார்க்க முடிந்ததென்றால் அது உங்களாலும் முடியுமே! அது என்ன பொருள்? எங்கு எப்படிப் பார்ப்பது? அதுதான் விண்வெளியில் பறந்து கொண்டிருக்கும் இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையம்.

இந்த சர்வதேச விண்வெளி நிலையம் பூமியிலிருந்து சுமார் 410 கிலோமீட்டர் உயரத்தில் விண்வெளியில் பூமியினை ஒரு நாளைக்கு 15 தடவை சுற்றி வருகின்றது. இது பூமியை ஒரு முறை சுற்றி வர 91 நிமிடங்கள் ஆகிறது. 450 டன் எடையுடைய இந்த செயற்கைக் கோளை இரவுப்பொழுதில் நாம் இருந்த இடத்தில் இருந்து வெறுங் கண்ணால் பார்க்க முடியும் என்றால் ஆச்சரியமாக உள்ளது அல்லவா?

உலகின் வலிமை மிகுந்த நாடுகள் என்று வர்ணிக்கப்படும் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் தங்களுக்கென்று பிரம்மாண்டமான விண்வெளி நிலையங்களை வானில் அமைத்திருந்தன. ஆனால் விண்வெளி ஆராய்ச்சி செய்ய விரும்பும் ஒவ்வொரு நாடும் அமேரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளைப் போல செலவழிக்க முடியாதல்லவா? எனவே கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகள்,  அமெரிக்கவுடனும், ரஷ்யாவுடனும் இணைந்து ஆய்வு செய்யும் நோக்கில், கூட்டாக சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்க முடிவு செய்தன. கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட இந்த சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம்  பொருளாதார, அரசியல் மற்றும் கல்வி வளர்ச்சிக்கான ஆராய்ச்சிகள் செய்ய  பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஸ்பேஸ் ஷிப்ஸ்எனப்படும் விண்வெளிக் கப்பல்கள் மூலம், பத்து ஆண்டுகள் தொடர்ந்து இதற்கான பாகங்கள் விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. ஆரம்பத்தில் விண்வெளியின் பாகங்கள் தானியங்கி கருவிகள் மூலம் ஆட்களின் உதவி இல்லாமலே பொருத்தப்பட்டன. பிறகு இந்த நிலையத்தை கட்டுவதற்கான பொருட்களை விண்வெளி வீரர்கள் முப்பது முறை விண்வெளிக்குச் எடுத்துச் சென்று இந்தப் பாகங்களை ஒவ்வொன்றாக வெற்றிகரமாக ஒன்றிணைத்து  உருவாக்கினார்கள்.  

2000ஆம் ஆண்டு முதல் இந்த சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளை செய்து வருகின்றார்கள். இது வரை 15 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்கள் இந்த ஆராய்ச்சிகளில் பங்கு பெற்று வந்திருக்கிறார்கள். இந்த விண்வெளி வீரர்கள் அவர்களது விண்வெளிப் பயணத்தின் போது சராசரியாக ஐந்தரை மாதங்கள் தங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள். ஏற்கனவே இருந்த வீரர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பூமி திரும்பி விடுவார்கள்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மருத்துவர்கள், பொறியாளர்கள், உயிரியல் அறிஞர்கள், புவியியல் அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், பல்துறை வல்லுநர்கள் எனப் பலரும் விண்வெளி வீரர்களாகச் சென்றிருக்கின்றனர். இவர்கள் பல மாதங்கள் தங்கி விண்வெளியில் ஆய்வு செய்கின்றனர். மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் முடிவுகளும், புதிய கண்டு பிடிப்புகளும் தொகுக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படுகின்றது. இது சர்வதேச சமூகத்திற்கும், கல்வி வளர்ச்சிக்கும் உதவுகின்றது. கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு சர்வதேச நிலையத்தில் செய்யப்படும் ஆய்வுகள் பற்றி விளக்கப்படுகிறது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமைந்துள்ள மாபெரும் சோலார் பேனல்கள் மூலம் சர்வதச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு மின்சக்தி கிடைத்து வருகின்றது. இருளில் பிரகாசமாய்த் தெரியும் நிலவிற்கு அடுத்தபடியாக பிரகாசமான பொருளாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் விளங்குகின்றது. அதன் காரணமாகவே சர்வதேச விண்வெளி நிலையத்தினை பைனாகுலர் அல்லது தொலைநோக்கி இல்லாமல் நம்மால் வெறும் கண்ணால் கூடப் பார்க்க முடிகின்றது. குறிப்பிட்ட திசையில், குறிப்பிட்ட நேரத்தில் பூமியிலிருந்து இதனைக் காண முடிகின்றது. அது 2 முதல் 5 நிமிடங்கள் வரை மட்டுமே கண்ணுக்குத் தெரியும். வானம் மேக மூட்டம் இல்லாமல் இருக்கும் சமயத்தில் மட்டுமே இதனைக் காண முடியும். சர்வதேச விண்வெளி நிலையம் மிகப் பிரகாசமான பொருளாக வானில் தெரியும். இந்த நிலையம் அந்தி சாயும் மாலைப்பொழுதில் லேசான இருட்டில் மேற்கிலிருந்து கிழக்காக நோக்கிச் செல்வதை நம் கண்ணால் பார்க்க முடியும்


உங்களது இடத்திலிருந்து வானின் எந்தத் திசையில் சரியாக எத்தனை மணிக்கு இது வானில் செல்லும் என்பதை அறிவதற்கு அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் இணையத் தளத்தில் விபரங்களைப் பெறலாம். நாசா குறிப்பிட்ட நாளில், குறிபிட்ட நேரத்தில், வீட்டின் மொட்டை மாடிக்கோ அல்லது ஒரு பரந்த மைதானத்திற்கொ சென்று உங்களால் சர்வதேச விண்வெளி நிலையத்தினை வெறுங் கண்ணால் பார்க்க முடியும்

2015 ஜூன் மாதம் 19ஆம் தேதி ஆல் இண்டியா ரேடியோ சென்னை வானொலியில் ஒளிபரப்பான எனது அறிவியல் பேச்சு.

- சிமுலஷன்



0 comments: