Friday, May 29, 2015

தேவதை வந்தாள்


"சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு..."
கேப்டன், ராதிகாவைத் தள்ளி விட்டு மாவாட்டிக் கொண்டிருந்த காட்சியைக் டி.வி.யில் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் ராமசர்மா.

"என்னடி இது? அப்பா போய் சினிமாப் பாட்டெல்லாம் டி.விலே பாத்திண்டிருக்கார்?"

"சித்தப்பா, நான் அப்புறமா சொல்றேன். நீங்க மொதல்லே, உங்க கையாலே அவருக்கு இந்தத் தயிர் சாதத்தை ஊட்டி விடுங்கோ"

கஞ்சனூர்   ராமசர்மான்னா எப்படிக் கூட்டம் அலை மோதும். கும்மோணத்லேந்தும், தஞ்சார்லேந்தும் வண்டி வெச்சுக் கூட்டிண்டு போவாளே! ஆனா, இப்ப மனுஷன் இப்படிப் படுத்த படுக்கையாக் கெடக்கறாரே!

"சரஸா, டாக்டர் என்ன சொல்றாரு?"

"சித்தப்பா, அப்பாக்கு அல்ஷைமெர்ஸ் டிஸீஸ் வந்துடுத்து. என்ன பண்றார்னு அவருக்கே தெரியல. பட்டப் பகல்லே கோயிலுக்குப் கெளம்பிப் போயிடறாரு, நடை சாத்தியிருக்கும்னு கூடத் தெரியாம. கிட்னி எல்லாம் கூட வீக்காயிடுத்தாம். அவருக்குத் தேவையானதைப் பண்ணிக் கொடுத்திடுங்கோன்னு டாக்டர் சொல்லிட்டார். சரின்னு அவருக்குப் பிடிச்ச காசி ஹல்வா, கடுகுப் பச்சடின்னு ஒவ்வொண்ணாப் பண்ணிக் கொடுத்துட்டேன். ஆகஸ்ட் வந்தா தொண்ணூத்தி நாலாகப் போறது. நெறவா வாழ்ந்துட்டார். பிரச்னை இல்லாம எல்லாம் நல்லபடியா முடிஞ்சாச் சரி."

"அப்புறம் அன்னிக்குப் போன்லே என்னமோ சொன்னியே, ஹரிஹரன் வரணும்னுட்டு. நாளைக்கிக் கார்த்தால வந்துடுவன். இந்நேரம் மெட்ராஸ்லே வந்து எறங்கியிருப்பன்"

"ஆமாம் சித்தப்பா, “தேவதை எப்ப வருவா", தேவதை எப்ப வருவா?”ன்னு கேக்காத நாளே இல்ல"

ஒரே ஒரு தெருவையே கிராமம்னு சொல்லிக் கொள்ளும் அந்தக் கோட்டூர் கிராமத்தில் ஸ்கார்ப்பியோ வந்து நின்ற போது, அந்த தெருவிலுள்ள இருபது குடும்பங்களும் வந்து எட்டிப் பார்த்தன.

"பாத்து பாத்து அண்ணா! மேலே உத்தரம் இடிக்கப் போறது"

சாஷ்டாங்கமாய் நமஸ்காரம் செய்து நிமிர்ந்த ஹரிஹரன் முன்னால் பாய் போடப்பட்டிருந்தது.

"அண்ணா ஸ்ருதி பாக்ஸ்?"

"அதெல்லாம் வேணாம்மா. மொபைல்லேயே ஆப் இருக்கு. அது போதும்."

" ஸ..ரி...க.. . பா.... நீ..ஸா"

ஆரோகணத்தில் கோடி காட்டிவிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக நிஷாதத்தில் சஞ்சாரம் செய்ய ஆரம்பித்தான் ஹரிஹரன்.

ராமசர்மா கண்ணைத் திறந்து வாஞ்சையுடன் பார்த்தார்.

"ம்..ம்..மேலே பாடுன்னுசொல்வது போல இருந்தது.

"ஸரஸ்வதி...ஸ்ரொதஸ்வனி..."

ஹரிஹரன் பல்லவி எடுக்க ராம சர்மா கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

"சரஸா, உனக்குக் கூட ஸ்ரொதஸ்வனின்னுதானேப் பேரு. அப்றம்  எப்படி நீ சரஸாவானே?"

"சித்தப்பா அப்பாக்கு இந்த ராகம்னா உசிரு. கீரவாணியோட ஜன்யம். எனக்கும் அப்பா இந்தப் பேரத்தான் வெச்சார். ஆனா அம்மாதான் கூப்பிட முடியலேன்னு ஸரஸ்வதின்னு மாத்திட்டா. கடேசிலே இப்ப சரஸாவாயிட்டேன். அப்புறம் இந்த "சிந்திய வெண்மணி" ஏன் பாக்கறார்னு கேட்டேளே! அதுவும் இதே ராகம்தான். அப்பா போட்ட பாட்டைப் பாட யாரும்  இல்லைன்னுதான் இந்தப் பாட்டு டி.விலே வந்தா ரொம்ப ஆசையாக் கேப்பார். "           

ஹரிஹரன் அனுபல்லவியிலிருந்து சரணத்துக்கு வருவதற்குள் சித்தப்பவாவிடம் இவ்வளவும் சொல்ல முடிந்தது.  ஆனால் ஹரிஹரனும், ராமசர்மாவுமோ வேறு ஓர் உலகத்திலிருந்தார்கள்.


ஹரிஹரன் சரணம் முடித்து, மறுபடியும், ‘ஸரஸ்வதிஸ்ரொதஸ்வனின்னு பல்லவி எடுக்கும்போது ராமசர்மா அந்த ராக தேவதையுடன் சங்கமமாகியிருந்தார்.

(சிமுலேஷன்)