Wednesday, May 11, 2016

ஆரஞ்சு மிட்டாய் ஆராவமுதன்

எம்.எல்.ஏவாக இருந்த ஆராவமுதன் ஆடி அமாவாசையன்று அதிர்ஷ்டம் அடித்து, அமைச்சரானார். கவர்னர் மாளிகையில் பதவியேற்ற மறு நாளே குல தெய்வ வழிபாட்டுக்காக குடும்பத்தோடு சொந்த ஊருக்குப் பயணித்தார். ஆராவமுதன் அமைச்சராகி விட்டார் என்றதுமே பாரியூர் பரபரப்பாகி விட்டது. அவர் படித்த பள்ளியில் பாராட்டு விழாவுக்கு எற்பாடு செய்து விட்டார்கள். 

பள்ளியின் ப்யூன் முதல் தலைமை ஆசிரியர் வரை பாராட்டு விழாவில் பரவசமாய் இருந்தார்கள். அதிலும் தமிழ் ஆசிரியர் தங்கதுரைக்கு ஒரே மகிழ்ச்சி.  ஆம். அவர்தான் மூன்றண்டுகள் ஆராவமுதனுக்கு வகுப்பு ஆசிரியராக இருந்தவர். அவர் பத்தாம் வகுப்பில் ஆசிரியராக இருந்த போது நடந்த நிகழ்ச்சி, நினைவுக்கு வந்தது. அதனைப் பற்றி மேடையில் கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டுமென்று எண்ணினார்.

"ஆசிரியர்களே! மாணவர்களே! இங்கே நம்மிடையே அமர்ந்துள்ள அமைச்சர் ஆராவமுதன் நம் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே தலைமைப் பண்புகள் நிரம்பியவராக இருந்தவர். ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் பற்றி இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். ஒரு நாள், நான் ஒரு கண்ணாடி பாட்டில் முழுவதும் மிட்டாய் நிரப்பி வகுப்புக்குக் கொண்டு வந்து அலமாரியில் வைத்தேன். மாணவர்களிடம் "இந்த சீல் செய்த பாட்டிலில் எத்தனை மிட்டாய் இருக்கின்றது என்று நாளைக்குள் சரியாக கணித்துச் சொல்பவர்தான் மாணவர் தலைவர். மற்றபடி மாணவர் தலைவர் பதவிக்கு தேர்தல் எதுவும் கிடையாதுஎன்றேன். மாணவர்களும் அதற்கு ஒத்துக் கொண்டு ஆளாளுக்கு வாய்க்கு வந்த எண்ணைச் சொன்னர்கள். ஆனால் ஆராவமுதன் மட்டுமே மிகச் சரியாக 135 என்று சொன்னார். அவனுடைய ஊகத்தையும், மிகச் சரியாக கணிக்கும் திறனையும் கண்டு வியந்து போனேன். அன்று வகுப்புக்கு மாணவர் தலைவரான ஆராவமுதன், பள்ளிக்கும் மாணவர் தலைவரானார்."

பாராட்டு விழாவில் தமிழ் ஆசிரியர், தலைமை ஆசிரியர் என ஒவ்வொருவராகப் புகழ்ந்து கொண்டே போனார்கள்.

சென்னை வரும் வழியில் ஆராவமுதன் மனைவி கேட்டார்.

"அது எப்படிங்க, ஸ்கூல்ல இருக்கும் போதுபாட்டில்ல இருக்கிற மிட்டாய கரெக்டா கண்டு பிடிச்சீங்க? தமிழ் வாத்யார் கேட்ட கேள்விங்கரதுனால  திருக்குறள் அதிகாரம் 135ன்னு கெஸ்பண்ணீங்களா?"


"அடியே! திருக்குறள்ல 133 அதிக்கரம் தானடி! 135 அதிகாரம் கிடையாது! நான் கண்டு பிடிச்சது ரொம்ப சிம்பிள். தமிழ் வாத்யார் வாங்கிட்டு வந்த பாட்டில் மாதிரியே ஒண்ணு புதுசா வாங்கி, அவர் வாங்கின அதே ஆரஞ்சு மிட்டாயப் போட்டு ரொப்பி, சீல் பண்ணி, கிளாசுக்கு எடுத்துகிட்டு போனேன். யாரும் பாக்காதப்ப  பாட்டிலை மாத்திட்டேன். நான் ரொப்பின பாட்டில்ல எவ்வளவு மிட்டாய் இருக்கும்னு எனக்குத் தெரியாதா?"


- சிமுலேஷன்