Friday, February 24, 2006

அமெரிக்க அனுபவங்கள்-01



ஆபீசர்ஸ் ஆப் அமெரிக்கா
------------------------
அமெரிக்காவில் பொதுவாகப் போலீஸை, ஆபீசர்ஸ் என்று குறிக்கிறார்கள். இங்கு அவர்கள் அனவருக்கும் நல்ல மரியாதை உள்ளது. அவர்களும் அதற்குத் தக்கபடி, மக்களின் தோழனாகவும், குற்றம் செய்பவருக்குக் கிலியாகவும் இருக்கிறார்கள். இப்பேர்ப்பட்ட ஆபீசர்ஸ் ஆப் அமெரிக்காவுடன், எனக்கும் எனது நண்பர்களுக்கும் ஏற்பட்ட சில அனுபவங்கள்.

நரேஷ், ராஜன், ராமன் மற்றும் நான் நால்வரும் அப்போது நியூஜெர்சியிலுள்ள, டிரைடென்டிற்கு ஒரு ப்ரோஜெக்டிற்காகச் சென்றிருந்தோம். மதிய உணவிற்காக, மான்மோத் மாலுக்குச் செல்வது
வழக்கம். போய் வர கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகிவிடும். அப்போது எங்களிடம் காரெல்லாம் கிடையாது. எனவே நாங்கள் ஒரு குறுக்கு வழி கண்டு பிடித்து வைத்து எளிதில் போய் வந்து கொண்டிருந்தோம். ஆனால், ஜார்ஜ் எங்களைக் கூப்பிட்டு எச்சரித்தார். " னீங்கள் போகும் வழியிலே garage campaus** (residetial vehicle?) உள்ளது. அங்குள்ள மக்கள் மோசமானவர்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக் இருக்க வேண்டும்," என்றார் (**இதன் சரியான பெயர் ஞாபகம் வரவில்லை. பெரிய கன்டெயினர் போல போர்ட்டபிள் வீடுகள் முப்பது, நாப்பது இருக்கும் ஒர் இடம். இதில் குடியிருப்போர் பெரும்பாலானோர் வசதிக் குறைவானவர்கள். சண்டை மற்றும் அடி, தடிக்குப் போகத் தயங்காதோர்) நாங்கள் இரண்டு வாரமாக, அந்த வழியிலேயே போய் வருகிறோமே, ஒரு பிரச்னையும் வரவில்லையே1" என்று எண்ணி, ஜார்ஜ் கூறிய அறிவுரையை அலட்சியம் செய்து விட்டோம்.

ஒரு நாள் இந்த காரேஜ் குடியிருப்பின் வழியே வந்து கொண்டிருக்கும் போது, அங்குள்ள ஒரு குட்டிப் பையன் விளையாடிக் கொண்டிருந்தான். அவன் எங்களைப் பார்த்து. " நீங்கள் எங்கிருந்து வருகிறிர்கள்?, என்றான். அவனுடன் பேசும் ஆவலில், நாங்கள்,"இந்தியா" என்று உடனே பதில் சொன்னோம். அவன் எங்களை செவ்விந்தியர்கள் என்றெண்ணி, "அப்படியானால் உங்கள் வில், அம்பு முதலானவை எங்கே?அவற்றைக் காட்ட முடியுமா?", என்றான். உடனே எங்களிலொருவர், "மான்மோத் மால் அருகே, ஸ்னீக்கர்ஸ் ஸ்டேடியம் உள்ளது. அங்கே அவை கிடைக்கும்." என்றார். அந்தப் பையன் அப்போது போய் விட்டான். நாங்களும் எங்கள் வேலையப் பார்க்கச் சென்று விட்டோம்.

மறுனாள் மதியம், மான்மோத் மாலிலிருந்து வந்து கொண்டிருக்கும் போது, ஒரு பெண்மணி, எங்களைப் பின் தொடர்ந்து வந்தாள். இது ஏதோ விபரீதம் என்றெண்ணி, எட்டி நடை போட்டோம். உடனே, அந்த்தப் பெண்மணியுடன், இரண்டு, மூன்று பேர் சேர்ந்து எங்களைப் பின் தொடர ஆரம்பித்தனர். "எங்கள் பையனுக்கு வில், அம்பு போன்ற ஆயுதங்கள் வாங்கித் தருவதாகச் சொன்னீர்களா?," என்று ஏதோதோ உளறிக் கொண்டே வந்தனர்கள் அவர்கள். என்ன சொன்னார்கள் என்று அவ்வளவாகப் புரியவில்லை. ஆனால், அந்த அமெரிக்கச் சிறுவன், எங்களைப் பற்றி அவன் குடும்பத்தாரிடம் ஏதோ நன்றாகப் போட்டுக் கொடுத்திருக்கிறான்
என்று மட்டும் புரிந்தது.

ஆனால் நாங்கள் எங்களைத் தொடர்ந்த நாலு பேரையும் பொருட்படுத்தாமல், பேசாமல் அலுவலகத்தை நோக்கி நடந்தோம். இன்னமும் நாலைந்து நிமிடங்கள் நடந்தால் அலுவலகம் வந்து விடும் என்ற தெம்பில். அலுவலகத்திற்கு வந்து சேர்ந்து விட்டால் நிம்மதி என்றெண்ணியிருந்த்த எங்களுக்கு ஒர் அதிர்ச்சி. அலுவலக் வாசலில், பளீர் பளீர் என்று காரில், சிவப்பு மற்றும் நீல நிற எச்சரிக்கை விளக்குகள் எரிய அமெரிகாவின் ஆபீசர்கள். எங்களைத் தொடர்ந்து வந்த அந்தப் பெண்மணிதான், அதற்குள் போன் செய்து போலீஸை வரவழைத்திருக்கிறாள். ஒரு சிறுவனைக் கடத்த முயன்றதாகப் புகார் வந்திருப்பதாக போலீஸ் ஆபீசர்கள், டிரைடன்ட் தலைவரிடம் சொன்னார்கள். பின்னர், தலை வந்து, "இவர்கள்
இந்தியாவிலிருந்து வந்துள்ள என்ஜினியர்கள். எங்கள் அலுவலகத்தில் வேலை செய்கிறார்கள். கடத்தல் போன்ற வேலைகளிலெல்லாம் ஈடுபட, இந்த தயிர்சாத கோஷ்டிகளுக்குத் தெரியாது", என்று சமாதானம் சொன்னார். சமாதானமடைந்த போலீசாரும், பயந்தாக்கொள்ளிக் குடும்பத்தினரும், இடத்தை விட்டு அகன்றனர்.

அன்றிலிருந்து, யாரிடமும் அனாவசியமாக வாயைக் கொடுத்து, மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற முடிவு செய்தோம்.

...தொடரும்.

3 comments:

Costal Demon said...

நல்ல பதிவு...

Boston Bala said...

wow... so succinctly U hv put forth the american's thought process. A 'Hi' to everybody; Small talk with nobody.

Simulation said...

மார்ச் 7ஆம் தேதியிட்ட தினமலரில் எனது இந்தக் கட்டுரை குறித்த செய்தி வெளியானதாக அறிகின்றேன்.

http://www.dinamalar.com/2006mar07/flash.asp

- சிமுலேஷன்