Thursday, February 16, 2006

கச்சா எண்ணெய்க்கு ஒரு வாழ்த்து




(வலைப்பதிவு இல்லாத காலமாயிருந்தாத்தான் என்ன. வாய்ப்பு கிடைச்சா விடுவமா (கிறுக்க).)

கச்சா எண்ணெய் நாயகியே,
கறுப்புத் தங்கக் காதலியே,
மண்மகளின் பொன் மகளே,
மணலி ஆலையின் மருமகளே!
காலமெல்லாம் பொன்னாக
களிப்புடன் வாழி எந்நாளும்.

வளைகுடா நாடுகளில்
வனப்புடனே வளைய வந்தாய்
அரவிக்கடல் முதல் அஸ்ஸாம் வரை
அழகுடனே பவனி வந்தாய்- இன்றோ
எம்தமிழர் மகிழும் வண்ணம்
எழில் நதியாம்
காவேரிப் படுகைதன்னில்
களிப்புடனே விளைகின்றாய்!

சுத்திகரிப்பு ஆலைதன்னில்
பக்குவமாய் பல உருவம் பெறுகின்றாய்.
எந்தனை வடிவம் எடுத்தாலும்
அத்தனையும் அகிலமெங்கும்
அடைந்து நன்மை செய்வதற்கே!

சடுதியில் சமையல் செய்ய
அடுப்படியில் எரிகின்றாய்,
எல்பிஜி எனும் பெயரில்!

உரத் தொழிற்சாலை, உந்து வாகனம்
உனதருளின்றி
உண்மையிலே இயங்கிடுமோ,
விளக்கெரிக்கும் மண்ணெண்ணையாக
விமானம் ஓட்டும் ஜெட் எண்ணெயாக
சிந்தை மகிழும் வண்ணம்
விந்தைகள் செய்கின்றாய்.
வந்தனங்கள் செய்திடுவேன்
வாழ்த்துப்பா பாடிடுவேன்.
கச்சா எண்ணெய் நாயகியே,
களிப்புடன் வாழி எந்நாளும்.

(எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பணி புரிந்த காலத்தில், house magazineக்கு எழுதியது.)