Thursday, February 23, 2006

ஜப்பான் அனுபவங்கள்



"இகேபுகரோ"விலுள்ள "விங்ஸ்" ஹோட்டலில் அறை பதிவு செய்யப்பட்டுள்ளது. நரிடா விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து, ஷட்டில் பஸ் பிடித்து வந்து விடுங்கள்" என்ற செய்தியும், இகேபுகரோ வரை படமும் இமெயிலில் அனுப்பியிருந்தார், நககோமி ஸான். சரிதான், இதொ வந்து விடும் என்று எண்ணி பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தால், சுமார் இரண்டு மணி நேரப் பயணம். வரும் வழியெங்கும் சிக்கலான மேம்பாலங்கள். ஒவ்வொன்றும் ராட்சத சங்கிலிகள் கொண்டு பிணைக்கப்ப்ட்டிருந்தன. அடிக்கடி வரும் நில நடுக்கத்தால் சேதம் ஏற்படாமலிருக்க இந்த ஏற்பாடாம்.

விங்ஸ் ஹொட்ட்டலில் அனியாயத்திற்குச் சின்ன அறை. ஆனால், அந்தச் சின்ன அறையிலேயே, டி.வி, ப்ரிட்ஜ் முதலானவைகள் இருந்தன. சந்துரு போன்ற நண்பர்கள் வந்தால், உடம்புக்கு ஒரு அறையும், கால்களுக்கு ஒரு அறையும் தேவைப்படும். இதற்கு ஒர் இரவுக்கு சுமார் 70 டாலர்கள். நண்பர் ராய் சொனனார்; கேப்ஸ்யூல் ரூம்களும் இங்கே 30 டாலருக்குக் கிடைக்கும். இவை பெரும்பாலும், குடித்துவிட்டு, இரயிலைத் தவறவிட்ட கோஷ்டிகள் தங்குவதற்கான இடமாகும். இந்த கேப்ஸ்யூல் ரூம்கள், சாதாரண அறைகளே அல்ல. சவப் பெட்டிகளை ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி வைத்தாற்ப் போல் இருக்குமாம். தங்க வேண்டிய நபர் தனது உடைமைகளை, லாக்கரில் வைத்து விட்டு, இந்த சவப் பெட்டி போன்ற கேப்ஸ்யூலில் ஏறிப் படுத்துக் கொள்ள வேண்டுமாம். மறுனாள் காலை எழுந்து, வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ செல்வார்களாம்.

இகேபுகரோ, நல்ல பெரிய ஸ்டேஷன்.எஜமானுக்காகக் காத்திருந்து, காத்திருந்து இறந்த நாய் ஒன்றிற்கு, இரயில் நிலையத்திலேயே பொதுமக்கள் சிலை ஒன்று செய்து வைத்த கதை ஒன்று, சின்ன வயதிலே படித்திருபீர்களே!. அது இங்குதான். தானியங்கி இயந்திரத்தில் காசை அள்ளிப் போட்டு, டிக்கெட் வாங்கி, கதவிலே செருக, தானாகவே வழிவிடும் அமைப்பு எல்லா நாடுகளிலும் இருப்பது போலத்தான். ஆனால், டிக்கெட் மட்டும் கருப்பு நிறத்தில், பளபளப்பாக இருக்கிறதே, என்றெண்ணி, நண்பரிடம் விசாரித்தேன். இந்த டிக்கெட்டுகள் அனைத்தும், முட்டையின் ஒடுகளிலிருந்து தயாரிக்கக்ப்படுகின்றது என்று சொன்னார். எதற்கு என்று புரியவில்லை.

ஒரு முறை வாங்கிய டிக்கெட் என்றால், இயந்திரம் அதனை வாங்கி முழுங்கி விட்டு, வழி விடும். சீஸன் டிக்கெட் என்றால் வழிவிட்டு, டிக்கெட்டை மறு கேட்டில் திரும்பக் கொடுக்கும். சரவணன், ஒரு முறை பயன்படுத்த்ப்படும் டிக்கெட்டை வாங்கிவிட்டு, வெளி கேட்டில் மீண்டும் டிக்கெட் பெற்றுக் கொண்டார். எங்களுக்கோ ஆச்சரியம். இது எப்படி முடியுமென்று. அப்போது ஒரு ஜப்பானியர் ஒடி வந்து, "அது என்னோட சீஸன் டிக்கெட்" என்று கத்தியபடியே வந்து தனது டிக்கெட்டைக் கேட்டார். அப்போதுதான் புரிந்தது. சரவணன், மின்னல் வேகத்தில், தனக்குப் பின்னால் வந்த்த் ஜப்பானியரின் சீஸன் டிக்கெட்டைத் தவறுதாலக எடுத்து வந்து விட்டாரென்று.

டிரெயினில் கூட்டமென்றால் அப்படி ஒரு மாம்பாலக் கூட்டம். ஒர் ஒழுங்கோடு, டிரெயினில் இறங்குபவர்களுக்கு வழி விட்டு, வாயிலில் இரு புறமும், இரு வரிசைகள் அமைத்து நிற்கிறார்கள். அதே போல் டிரெயினில், ஒருவரோடு ஒருவர் பேச வேண்டுமே. மூச். எல்லாருடய கையிலும், புத்தம் புதிய மாடல்களில் மொபைல் போன்கள். ஆனால், யாருமே பயணத்தின் போது பேசுவதில்லை. பெரும்பாலோர், மொபைல் போனில் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். எல்லா வெளி நாடுகளையும் போலவே, அடுத்து வரும் ஸ்டேஷன் என்னவென்று, அழகாக அறிவுப்பு செய்கிறார்கள். நாங்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷனது பெயர், தக்கனோடபாபா. முதல் நாள், தக்கனோடபாபா, தக்கனோடபாபா என்று சொல்லிச் சொல்லிப் பார்த்ததில், முதன் முறையாக நாக்கு சுளுக்கிக் கொண்டது.

நாங்கள் வேலை செய்து அலுவலகம் மிக ஒழுங்குடன் இருந்தது. சீனியாரிட்டிப்படி சீட்ட்ங் அரேஞ்மென்ட் இருந்தது. வாரம் ஒரு முறை தலைவர், பொதுவான விஷயங்களை எல்லோருக்கும் சொல்லுவார். இதற்காக யாரும் மீட்டிங் ரூமுக்குச் செல்வதில்லை. அவரவர், அவரவர் இடத்திலேயே நிற்க, தலைவர் 5 முதல் 10 நிமிடங்கள் பேச, வாரந்திர மீட்டிங் சுருக்கமாய் முடிந்துவிடும்.

இந்தியாவில் புதிது புதிதாய்க் கிடைக்கும் ரெடிமேட் சப்பாத்தி, பரொத்தா, குருமா வகையறாக்கள் கொண்டு போயிருந்தோம். அவற்றை எப்படிச் சுட வைத்துச் சாப்பிடுவது என்று முழித்துக் கொண்டிருக்கும் போது, மார்க்கெட்டிங் மானேஜர், எங்களைத் தரதரவென அருகிலுள்ள மினி சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்குக் கூட்டிச் சென்று, எலெக்ரிகல் தவா ஒன்று வாங்கிக் கொடுத்தார். அதனைக் கொண்டு வந்து மதியம் ஆபீசிலேயே ஆன் செய்து சுரேஷ் மலபார் பரோட்ட்டாவும், எம்.டி.ஆர் மசாலாவும் சுட வைக்க ஆரம்பித்தான். அலுவலகத்திலுள்ள அனவரும் எட்டிப் பார்த்தனர். இண்டியன் கறியின் வாசனை, அவர்களின் கவனத்தைக் கவர்ந்த்தில் ஆச்சரியமில்லை. முதல் ஒரிரு வாரங்களிலேயே, கொண்டு வந்த்திருந்த சரக்கு அனைத்தும் தீர்ந்துவிட, இப்போது இண்டியன் ரெஸ்டாரென்டுகளைத் தேடிப் படையெடுத்தோம். நியூ டெல்லி, ஜ்யோதி பொன்ற பல இண்டியன் ரெஸ்டாரென்டுகள் இருந்த்தன. எல்லா இடங்களிலும், ஒரே மெனுதான். அரிசிச் சாப்பாடு மற்றும் கறி அல்லது டால். சாப்பாடுக்குப் பதில் "நான்" வேண்டுமானால் கேட்கலாம்.

ஒரே ஒரு வாரக் கடைசியில், ஷிஞ்சுகுக்கு என்ற இடத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு வந்தோம். நான் பார்த்தவரை, மற்ற நாட்டினரை விட, ஜப்பானியர், மரியாதையுடனும், அன்பாகவும் இருக்கிறார்கள். குமார் ஸான், ராமன் ஸான், என்று எல்லோரையும் ஸான் சேர்த்துக் கூப்பிடுகிறார்கள். இவர்களுக்கு ஏனோ, "ல" கரமே வருவதில்லை. கோகுல் என்பவரை, கோகுற் என்பார்கள். லைலாவை, றைறா என்பார்களோ?

அலுவலகத்திலிருந்து, பெரும்பாலும் 8 அல்லது 9 மணிக்கே கிளம்புகிறார்கள். எங்கே? வீட்டிற்கு மற்றும் பாருக்குதான். மறுநாள் காலை சரியான நேரத்திற்கு அலுவலகத்தில் ஆஜராகி விடுகிறார்கள். இரவில் எவ்வளவுதான் தண்ணி போட்டாலும், மறுநாள், ஹேங்கோவர் ஏதுமின்றி, அமைதியாக அலுவலகம் வந்து விடுகிறார்கள். பெரும்பாலோனோர் சிகரெட் புகைக்கின்றார்கள். பேஸிவ் ஸ்மோக்கிங்கினால் பொது இடங்களில் நிற்கவே முடியாத அளவிற்கு சிகரெட் புகை.

டெக்னாலஜியில் முன்னணியிலிருக்கும் ஜப்பானியர், புதிது புதிதாக ஏதேனும் கண்டு பிடித்துக் கொண்டேயிருக்கிறார்கள். சில பொருட்கள் உள் நாட்டு உபயோகத்திற்கு மட்டுமே. ஒரு புத்தக் கோயிலுக்கு, ஜப்பானிய நண்பரொருவருடன் சென்றிருந்தேன். மணியடித்து விட்டு, பிரார்த்தனை செய்கிறார்கள். ஓட்டைக் காலணா போண்ற, நாணயமொன்றை விசேஷமானது என்று சொல்லி கோவிலில் வீசி எறிகிறார்கள். அதன் மதிப்பு 5 யென் மட்டுமே. (என்ன போங்கு?)

சில மார்க்கெட்டுகளில், கம்ப்யூட்ட்டர் மற்றும் அதன் உதிரிப் பாகங்கள் விற்பதற்கான கடைகள் உண்டு. ஒவ்வொன்றும் 9 அல்லது 10 மாடிக் கட்டடங்களாக இருக்கும். பேக்ஸ் மெஷினுக்கென்று ஒர் தளம். வீடியோ கேம்ஸ்க்கன ஒர் தளம் என்று. பெரும்பாலான கடைகளின் வாசலில், மெகபோன் வைத்து, கம்ப்யூட்டரைக் கூவிக் கூவி விற்கிறார்கள்.

இகேபுகரோ மற்றும் ஷிஞ்சுகுக்கு போன்ற இரயில் நிலையங்கள், சிக்கலானதும், நெருக்கடியானதுமாகும். இந்த இரயில் நிலையங்களுக்கு, குறைந்தபட்சம், பத்து தெருக்களிலாவது நுழைவாயில்கள் உள்ளன. ஆனால் டோக்கியோ வரை சென்ற எங்களுக்கு புல்லட் ட்ரெயினில் செல்ல வாய்ப்புக் கிடைக்கவில்லை.

ஒரு நாள் தெருவில் நடந்து போகும் போது, இந்தியர் ஒருவரைப் பார்த்து விசாரிக்க, அவர், இந்திய தூதகரகத்தில் பணி புரியும் தெலுங்குக்காரர் என்று தெரிந்தது. ஸ்ரீகாந்த் அவருடன் தெலுங்கில் மாடலாடி மகிழ்ச்சி கொண்டான்.

இறுதியாக, இந்தியா திரும்புமுன் ஒர் சம்பவம். ஹோட்டலிலிரிந்து, விமான் நிலையம் செல்ல ஷட்டில் பஸ்ஸில் அமர்ந்தேன். போகும் வழியில்லுள்ள இயற்கைக் காட்சிகளைப் படம் பிடித்து, பிலிம் காட்ட வேண்டுமென்று, டிஜிட்டல் கேமிராவை பையிலிருந்து எடுத்து வைத்துக் கொண்டேன். இரண்டு மணினேரப் பயணத்தில் அசந்து தூங்கிவிட்டேன். காமிராவை மறந்து இறங்கி விட்டேன். நாரிட்டா விமான நிலையத்தின், இன்டீரியர் டெகொரேஷனால் கவரப்பட்டு, காமிராவின் மூலம் படம் எடுக்க எண்ணிய எனக்கு அதிர்ச்சி. ஷட்டில் பஸ்ஸிலேயே, காமிராவைத் தவற விட்டிருப்பதை உணர்ந்தேன்.

காமிரா கிடைக்குமா, கிடைக்காதாவெறு எண்ணியபடியே, இன்பர்மேஷன் கவுண்டரை அணுகினேன். புகார் ஒன்று கொடுக்க்கப்பட்டது. எங்கிருந்து வந்தேன், எந்தப் பஸ்ஸில், எந்த சீட்டில் உட்கார்ந்தேன் போன்ற விபரங்கள் பெறப்பட்ட்டன. கவுண்டரிலிருந்த பெண்மணி, " தகவல் அனுப்பியுள்ளேன்; காத்திருங்கள்" என்ராள். ஐந்து நிமிடல் கழித்து,

"உங்கள் காமிரா கிடைத்து விட்டது; அது மேல் தளத்திற்கு ஐந்து நிமிடங்களில் வந்து சேரும்; சென்று வாங்கிக் கொள்ளுங்கள்" என்றாள்.

வியப்புடன் மேல் தளத்திற்குச் சென்றேன். ஐந்து நிமிடம் காத்திருந்தேன். ஒன்றும் நடக்கவில்லை. பின்னர், பத்து நிமிடங்கள் கழித்து, ஒர் ஊழியர், எனது காமிராவைக் கொண்டு வந்து கொடுத்தார். "கால தாமதத்திற்கு வருந்துகிறோம், மன்னிய்ங்கள்." என்று அவர் வந்து சொன்ன போது, வியப்பு மீண்டும் அதிகமானது.

மேற்கண்ட காமிரா சம்பவத்தை, இங்கு வந்து எல்லோரிடமும் சொன்ன போது, "ஜப்பான்னா, ஜப்பான் தான்; இங்கே நடக்குமா இப்படி" என்று சொல்லி வைத்தார் போல ஒரே மாதிரி கூறினார்கள்.

நடு ராத்திரி சென்னை வந்திறங்கிய, எனது லக்கேஜ்களைப் பார்த்த எனது மனவிக்கு அதிர்ச்சி. "லேப்டாப் எங்கே?" என்றாள். பகீரென்றது. லேப்லாப் பையில், லேப்டாப், அலுவலகம் குறித்த முக்கிய காகிதங்கள். பாஸ்போர்ட், அலவன்ஸாகக் கொடுக்கப்பட்ட அமெரிக்க டாலர்கள் அனைத்தும் அல்லவா வைத்திருந்தேன். டாக்ஸியில் விட்டு விட்டேன் போலிருக்கிறதே என்று எண்ணி, நானும், பையனும், புறப்பட்டுக் கொண்டிருந்த் டாக்ஸியத் துரத்தத் தொடங்கினோம். பெட்ரோலின் வேகத்துடன், மனித சக்தியால் போட்டி போட முடியவில்லை.

வந்த டாக்ஸீ, ப்ரீ பெய்ட் டாக்ஸியாக இருந்ததால், சிறிது நம்பிக்கை இருந்தது. பில்லை வைத்து, நம்பரைக் கண்டு பிடித்து, விமான நிலையத்திலிருக்கும் அந்த அலுவலகத்திற்குப் போன் செய்து விஷயத்தைச் சொல்லி, " இப்போதே வருகிறோம்" என்றோம்.

நடு இரவில், காரை எடுத்திக் கொண்டு, விமான நிலையம் சென்று, ப்ரீ பெய்ட் டாக்ஸியின் அலுவலகத்து நபரை விசாரிக்க, அவர், "இதோ டிரைவர் வந்து விட்டார்," என்றார். பத்து நிமிடத்தில் டிரைவர், லேப்டாப்பை அதிலுள்ள பொருட்களுடன் கொண்டு வந்து கொடுத்தார். போன உயிரே வந்தது போலிருந்தது. அவருக்கு நன்றிகளைத் தெரிவித்து, சன்மானமும் கொடுத்து விட்டு வந்தோம்.

ஜப்பானில் காமிரா தொலைந்து கிடைத்த சம்பவத்தை, நண்பர்களிடம் பகிர்ந்த்து கொள்ளும் போதெல்லாம், அவர்களிடமிருந்து,

"என்ன இருந்தாலும் ஜப்பான்காரன்னா, ஜப்பான்காரன் தான். அவன மாதிரி இங்கு வருமா?"

என்ற கமெண்ட்ஸ் கேட்கும் போதெல்லாம்,

"இல்லை, இல்லை, இங்கேயும் நேர்மை உண்டு; இதெல்லாம் இங்கேயும் நடக்கும்; தொலந்து போன லேப்டாப் கூடக் கிடைத்திருக்கிறது"

என்று சொல்ல நினைத்தாலும்,

"பொருட்களைத் தொலைப்பதே உம் வழக்கமோ; லேப்டாப் கூடத் தொலப்பீரோ"

என்று யாரேனும், கேலி பேசுவார்களோ என்ற அச்சத்தினாலும்,

"எல்லாச் சாமான்களையும் நான் எடுத்துக் கொண்டு இற்ங்கினேனா என்று அந்த டாக்ஸி டிரைவர் பார்த்திருக்க வேண்டாமோ?: மற்ந்து விட்ட லேப்டாப்பை அப்படியே அமுக்கி விடலாமா; வேண்டாமா என்ற குழப்பத்திலிருந்து, விற்கப் போய் மாட்டிக் கொண்டு விடப்போகின்றோம்; ஆகவே கொடுத்து விடலாம்" என்ற எண்ணத்தில்தான் திருப்பிக் கொடுத்திருப்பானோ என்ற எணணமும் ஏற்பட்டாதாலும்,

"ஆமாம்; ஆமாம்; ஜப்பான்காரன்னா, ஜப்பான்காரன் தான். அவன மாதிரி இங்கு வருமா" என்றே சொல்லி வருகிறேன்.

அனைவரையும் கவரும் ஐயப்பன் ஆலயம்



சமீபத்தில் திருச்சி சென்ற போது, அங்குள்ள கன்டோன்மென்ட் ஐயப்பன் ஆலயத்திற்குச் சென்றிருந்தோம். இந்த ஆலயத்தில் என்னையும் மற்றும் பெரும்பாலோனரையும் கவர்ந்த அம்சங்கள் வருமாறு:-

1. எந்த மதத்தினரும் ஆலயத்தில் நுழையலாம்.

2. ஆண்டவன் பெயரிலே மட்டுமே அர்ச்சனை செய்யப்படுகிறது.

3. அமைதிக்கு முக்கியத்துவம் தந்து, "அமைதியாய் இருக்கலாமே!", "மெளனமாய் தரிசிக்கலாமே!" என்று ஆங்காங்கே பலகைகள். இப்படிப் பல்வேறு அறிவுரைப் பலகைகள். ஆனால் எதுவுமே வலிந்து பேசாதவை. உ-ம்;"அருகம்புல் கூட அனுமதி பெற்றே பறிக்கலாமே".

4. காமிரா, மொபைல் போன் அனுமதியில்லை.

5. குறிப்பிட்ட இடம் தவிர,எந்த இடத்திலும் சூடம், விளக்கு எற்றக் கூடாது.

6. உண்டியல் கிடையாது.

7. தட்டில் காசு போடுதல் கிடையாது.

8. கேசட், ஸ்பீக்கர் கொண்டு பாடல்களை அலற வைக்கும் வழக்கம் இல்லை. மென்மையான சங்கீதம் காற்றில் தவழ்ந்து வருகின்றது.

9. புல்வெளிகளும், பூங்காக்களும் பச்சைப் பசேலென்று பராமரிக்கப்படுகின்றன.

10. மலஜலம் கழித்துவிடக் கூடிய கைக்குழந்தைகளைத் தவிர்க்குமாறு தாய்மார்கள் வேண்டப்படுகின்றார்கள்,

11. பக்தர்கள் தாங்கள் விரும்பும் நேரம் வரை அமைதியாய் அமர்ந்து தியானம் செய்ய, தியான மண்டபம் உள்ளது.

12. பக்தர்கள் அனைவரும் கண்ணியமான உடை அணிந்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆண்கள் பெர்முடாஸ், லுங்கி, ஜீன்ஸ் முதலியனவற்றைத் தவிர்க்க வேண்டும். பெண்களும் அவ்வாறே. துப்பட்டாவுடன் கூடிய சூடிதார் மட்டுமே அணிய வேண்டும். துப்பட்டா இல்லாதவற்கு, ஆலயத்தின் வாயிலில் துப்பட்டா வழங்கப்படுகின்றது. இதனையும் கண்ணியமாக அணிவது எப்படி எனவும் ஓர் பலகை விளக்குகின்றது.