Sunday, September 10, 2006

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 04 - மோகனம்

இந்தியாவிற்கு மட்டும் உரித்தானதல்லாமல், ஜப்பான், சீனா போன்ற கீழை நாடுகளிலும், ஸ்வீடன் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் 'மோகனம்' எனப்புடும் இராகம் பிரபலமானது. வளைகுடா நாடுகளிலும், இந்த இராகத்தைக் கேட்டிருக்கலாம். பாரம்பரிய முறையில், தாளமின்றி விருந்தாமாகப் பாடப்படும் திருவாசகத்திலும் மோகனம் பெரும்பங்கு வகிக்கின்றது. வட இந்தியாவில், மோகனம் 'பூப்' என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. எனவேதான், மோகனம் பாடுவதில் வல்லவரான, மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், 'சங்கீத பூபதி' என்றழைக்கப்பட்டார்.

மோகன இராகம், ஹரிகாம்போதி என்ற மேளகர்த்தா (தாய்) இராகத்தின் ஜன்ய (சேய்) இராகமாகும். இருந்தபோதும் இதனை கல்யாணியின் ஜன்யம் என்றும் சிலர் கூறுவதுண்டு. மோகனம் என்ற பொருளுக்கெற்றபடியே இது ஒரு அழகான இராகமாகும். (என்னது? எல்லா இராகத்துக்கும் இதையே சொல்லி ஜல்லி அடிக்கின்றேனா?)

இசைக் கச்சேரிகளில், சிறிது நேர இராக ஆலாபனைக்குப் பிறகு 'நன்னுப் பாலிம்ப' என்று மோகன இராகத்தில் பாடகர் ஆரம்பிக்கும்போது, இரசிகர்கள் பலர் உற்சாகத்துடன் எழுந்து, தாளம் போட்டுக் கொண்டு பாடலை இரசிப்பதைப் பல முறை பார்த்திருக்கலாம். அவ்வளவு தூரம், கேட்பவர் மனதை மயக்கும் இராகம் மோகனமாகும். அதேபோல பாபநாசம் சிவனது 'காபாலி,...கருணை நிலவு" என்ற பொருட் செறிவு மிகுந்த அழகான பாடலும் மோகனத்தில் அமைந்த பிரபலமான தமிழ்க் கீர்த்தனையாகும்.

கிருஷ்ணரைப் பற்றிய பல பாடல்கள் மோகனத்தில் அமைந்துள்ளன, விருத்தம், கீர்த்தனை, வர்ணம் என்ற பல விதமான படைப்புகளும் இந்த இராகத்தில் பாடலாம். தமிழ்த் திரையிசைக்கு மோகனம் நல்ல பங்களிப்பினைக் கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை. பல நல்ல
பழைய பாடல்கள் மோகனத்தில் அமைக்கப் பெற்றுள்ளன.

ஆரோகணம்: ஸ ரி2 க3 ப த2 ஸ்
அவரோகணம்: ஸ த2 ப க3 ரி2 ஸ

இப்போது பட்டியலைப் பார்ப்போம்.

பாடல் - திரைப்படம்

01. ஏபிசி நீ வாசி - ஒரு கைதியின் டைரி
02. ஆதரவார் ஆதரவார் - ஞான சௌந்தரி
03. அடி எளச்சி எளச்சி கொழைச்சி கொழைச்சி - மகாராசன்
04. அடுத்தாத்து அம்புஜத்தப் பாத்தேளா - எதிர் நீச்சல்
05. ஆடுவரென்பதினால் ஆடவர் என்பார் - பாட்டும் பரதமும்
06. ஆஹா இன்ப நிலாவினிலே - மாயா பஜார் **
07. அமுதைப் பொழியும் நிலவினிலே - தங்கமலை ரகசியம் **
08. அத்தான் வருவாக முத்தம் கொடுப்பாக - டும் டும் டும்
09. ஆத்தோரம் காத்தாட - எங்கேயோ கேட்ட குரல்
10. பன்சாயீ... காதல் பறவைகள் - உலகம் சுற்றும் வாலிபன்
11. எனக்கொரு மகன் பிறப்பான் - அண்ணனுக்கு ஜே
12. எங்க மகராணிக்கு - தலைமுறை
13. என்ன பார்வை - காதலிக்க நேரமில்லை *
14. என்ன சமையலோ - உன்னால் முடியும் தம்பி * (இராக மாலிகை)
15. என்னை முதன்முதலாக பார்த்த - பூம்புகார்
16. எண்ணத்தில் - கல்லுக்குள் ஈரம்
17. கீதம் சங்கீதம் நீதானே - கொக்கரக்கோ *
18. கிரிதரா கோபாலா - மீரா **
19. குண்டுமல்லி குண்டுமல்லி - சொல்ல மறந்த கதை
20. ஹோலி ஹோலி ஹோலி - ராசுக்குட்டி
21. இதயம் ஒரு கோயில் - இதயக் கோயில் *
22. இந்த அம்மனுக்கு - தெய்வ வாக்கு
23. இந்தக் காற்று வெளியிடைக் கண்ணம்மா - கப்பலோட்டிய தமிழன் **
24. இந்தப் பூவுக்கொரு அரசன் - பூவரசன்
25. இறைவன் வருவான் - சாந்தி நிலையம் *
26. இரு பறவைகள் மலை முழுவதும் - நிறம் மாறாத பூக்கள் *
27. காலை - மேல் நாட்டு மருமகள்
28. கலையாத கனவொன்று கண்டேன் - நாயக்கரின் மகள்
29. கம்பன் ஏமாந்தான் - நிழல் நிஜமாகிறது
30. கண்மணியே காதல் என்பது கற்பனையோ - ஆறிலிருந்து அறுபது வரை *
31. கண்மணியே உன் இதய - மனிதன் மாறவில்லை
32. கஸ்தூரி மானே - புதுமைப் பெண்
33. காத்திருந்தேன் தனியே - ராசா மகன்
34. கேளடா - பாரதி
35. கேட்குதடி கூ கூ - கட்டுமரக்காரன்
36. கிருஷ்ணா ஹரி கோவிந்த முராரி - கிருஷ்ண பக்தி
37. குக்கூ கூ கூ கூவும் குயிலக்கா - வள்ளி
38. குறிஞ்சி மலரின் - அழகே உன்னை ஆராதிக்கிறேன் *
39. குழந்தையும் தெய்வமும் - குழந்தையும் தெய்வமும் *
40. மதியா விதியா - பாரிஜாதம்
41. மலரே பேசு - கீதாஞ்சலி
42. மலர்கள் நனைந்தன - இதயக் கமலம் **
43. மல்லிகை மாலை கட்டி - புதிய ராகம்
44. மீன்கொடி தேரில் - கரும்பு வில் *
45. முப்பது பைசா மூணு முழம் - போக்கிரி
46. நாடுதே என் மனம் நாதமே - மாயாவதி
47. நாள்தோறும் எந்தன் கண்ணில் - தேவதை
48. நான் ஒரு பொன்னோவியம் - கண்ணில் தெரியும் கதைகள் *
49. நான் தங்க ரோஜா - டைம்
50. நான் உந்தன் தாயாக வேண்டும் - உல்லாசப் பறவைகள்
51. நாராயணாய நமோ - திருமழிசை ஆழ்வார்
52. நிலவு தூங்கும் நேரம் - குங்குமச் சிமிழ்
53. நிலவும் மலரும் - தேன் நிலவு *
54. நின்னுக்கோரி வர்ணம் - அக்னி நட்சத்திரம்
55. ஒரு கணம் ஒரு யுகமாக - நாடோடித் தென்றல்
56. ஒரு ராகம் பாடலோடு - ஆனந்த ராகம்
57. ஒரு தங்க ரதத்தில் - தர்ம யுத்தம் *
58. பாடும்போது நான் தென்றல் காற்று - சுமதி என் சுந்தரி *
59. பாக்காதே பாக்காதே - ஜென்டில்மேன்
60. பால் போலே - பாய்ஸ்
61. பருவம் பார்த்தருகில் வந்து வெட்கமா - மருத நாட்டு வீரன்
62. பழகத் தெரிய வேணும் - மிஸ்ஸியம்மா *
63. பெற்ற தாயினும் பிறந்த - விஜயகுமாரி
64. பொன்னழகுப் பெருமை - ரிக்ஷாக்காரன்
65. பொன்னுல பொன்னுல - சிட்டுக்குருவி *
66. பூவா தலையா - பூவா தலையா
67. பூவில் வண்டு கூடும் கண்டு - காதல் ஓவியம் *
68. ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா - கட்டபொம்மன்
69. ராதே என் ராதே - ஜப்பானில் கல்யாணராமன்
70. சங்கே முழங்கு - கலங்கரை விளக்கம் *
71. செந்தமிழ் நாடென்னும்போதினிலே - வேதாள உலகம்
72. தாமதம் செய்யலாமோ - முத்துக்குள் முத்து
73. தாம்த தீம்த - பகலில் ஒரு நிலவு
74. தேன்மல்லிப் பூவே - தியாகம் *
75. திருத்தேரில் வரும் சிலையோ - நான் வாழ வைப்பேன் *
76. உன் அழகைக் காண இரு கண்கள் போதாது - திரு நீலகண்டர்
77. உன் பேரைச் சொன்னாலே - டும் டும் டும்
78. வான் மேகங்களே - புதிய வார்ப்புகள் *
79. வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் - சலங்கை ஒலி *
80. வந்ததே ஓ ஓ - கிழக்கு வாசல் *
81. வந்த நாள் முதல் இந்த நாள் வரை - பாவ மன்னிப்பு
82. வாராயோ தோழி - ஜீன்ஸ்
83. வரும் பகைவரைக் கண்டு - அம்பிகாபதி
84. வாழிய வாழியவே பல்லாண்டு - ஆடிப் பெருக்கு
85. வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன் - சாவித்ரி
86. வாழ்வோம் வாழ்வோம் மாதர்காள் - ராஜகுமாரி
87. வேல் முருகனுக்கு மொட்டை ஒண்ணு - புயல் பாடும் பாட்டு
88. வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா - காதல் கோட்டை **
89. வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு முரசே - நாம் இருவர் *
90. வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் - தேடி வந்த மாப்பிள்ளை *
91. விதியின் விளையாடல் மதியினால் மாற்றும் - நவஜீவனம்

மோகனத்தின் மொத்த உருவம் என்று பார்த்தால் இந்த நட்சத்திரக் (*) குறியிட்ட பாடல்களைச் சொல்லலாம். இதில் ஒரு சில பாடல்களுக்கு இரட்டை நட்சத்திரங்கள்கூட வழங்கியுள்ளேன். முன்னமே கூறியபடி நட்சத்திரப் பாடல்களை ஒருங்கே பதிவு செய்துக் கேட்டு வர, மோகன இராகம் மனதில் நன்கு பதிந்துவிடும். அடுத்தபடியாக, இசையார்வலர்கள் நான்கைந்து பேர் ஒன்று சேர்ந்தால் (அது உங்கள் குடும்ப உறுப்பினர்களாகக் கூட இருக்கலாம்) இந்த நட்சத்திரப் பட்டியலிலுள்ள பாடல்களை ஒரு அரை மணி நேரமோ அல்லது ஒரு மணி நேரமோ அசை போட்டுச் சும்மா பாடிப் பார்த்தால், மோகனமென்ன, 'மோகனக் கல்யாணி'யைக்கூடக் கண்டு பிடித்துவிடுவீர்கள். ஆமாம், நீங்கள்தான் ஏற்கெனவே முந்தைய பதிவின் மூலம் கல்யாணியைக் கண்டுணரத் தொடங்கிவிட்டீர்களே!

மூன்று பதிவுகள் முடிந்ததன் விளைவாக, இனிமேலிருந்து உங்களுக்கு ஒர் 'குவிஸ்' வைக்கலாமென்றிருக்கின்றேன். அதற்கு சரியான விடையை யாரேனும் முதலில் தர, விடை தருவதற்கான நேரக்கெடு முடிவடைந்துவிடும் பதிவுத தொடரின் இறுதியில் அதிக மதிப்பெண் பெறுபவருக்கு, ஒரு பரிசு வழங்கவிருக்கின்றேன். வெளிநாடுகளில் இருப்பவருக்கு அவருடைய இந்திய முகவரிக்கு பரிசு அனுப்பி வைக்கப்படும்.

இந்த வாரக் கேள்வி:

மோகனம் 'அவுடவ' இராகங்களில் ஒரு சிறந்த இராகமாகும். 'அவுடவ' இராகம் என்றால் என்ன?

- சிமுலேஷன்