Saturday, May 17, 2008

கொய்யா மரத்துடன் ஒரு டேட்டிங்

பண்பலை வானொலி நிலையங்களுக்கும், தொலைக்காட்சி நிலையங்களுக்கும், திரைப்படப் பாடல்களைத் தொடர்ந்து ஒலி/ஒளிபரப்ப ஏதெனும் ஒரு காரணம் வேண்டும். ஏதாவது ஒரு பெயரில் நிகழ்ச்சி ஒன்றினை வைத்து, இடையிடயே திரைப்படப் பாடல்களைப் போட ஆரம்பித்துவிடுவார்கள். இதில் ஒவ்வொரு நாளும் ஒரு "கருத்து" (theme) எடுத்துக் கொள்வார்கள். உதாரணமாக, "ரோட்டில் எச்சில் துப்புவர்களுக்கு எப்படிப்பட்ட தண்டனை கொடுக்கலாம்" என்று ஒவ்வொரு நேயரிடமும் கேட்டுவிட்டு, அவர்களுக்குப் பிடித்த பாடலை ஒலி/ஒளிபரப்புவது ஒரு வகை. இந்த மாதிரி நிகழ்ச்சிகளில், ஏதேனும் பயனுள்ள கருத்து ஒன்றினைப் பகிர்ந்து கொள்கின்றார்களே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.

ஆனால், இன்னும் பயங்கர மொக்கையாக சில கருத்து (theme) நிகழ்ச்சிகள் இருக்கும். நீங்கள் ஒரு சாதாரணமான மனிதராக இருந்து, இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளளப் பார்த்தாலோ, கேட்டடலோ இரத்தக் கொதிப்பு எகிறும் வாய்ப்புகள் அதிகம். அப்படித்தான் சில நாட்கள் முன்பு, காரில் சென்று கொண்டிருக்கும்போது, பொழுது போவதற்காக, ஒரு பண்பலை நிகழ்ச்சியினை கேட்டுக் கொண்டே சென்றேன்.

"ஹலோ... வணக்கம்"

"ஹலோ... வணக்கம்"

"யார் பேசறீங்க"

"நான் தாம்பரத்திலேர்ந்த்து சாந்தி பேசறேன்"

"சாந்தி எப்படி இருக்கீங்க?"

"நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?"

"நானும் சூப்பரா இருக்கேன். சரி நீங்க எந்த மரத்தை லவ் (love) பண்ணறீங்க"

(சரி...சரி இன்னிக்கி மரவளர்ப்பு தினம் அல்லது வனபாதுகாப்பு வாரம் போலிருக்கிறது)

"சார்... நான் கொய்யா மரத்தை லவ் பண்ணறேன் சார்"

"ஆஹா, கொய்யா மரமா? ஏன் கொய்யா மரத்தை லவ் பண்ணறீங்க?"

"அதெல்லாம் தெரியாது சார். ஆனா கொய்யா மரத்தை லவ் பண்ணறேன்"

"சரி. கொய்யா மரத்தை எங்க டேட்டிங் கூட்டிகிட்டுப் போவீங்க?"

(அடப்பாவிங்களா... ஆம்பிளையும் ஆம்பிளையும் கல்யாணம் பண்ணினீங்க. பொம்பளையும், பொம்பளையும் கல்யாணம் பண்ணினீங்க. நாயையும், கழுதையயும் கல்யாணம் கட்டிகிட்டீங்க. இப்ப மரத்தைக்கூட விட்டு வைக்கமாட்டீங்களா? அவ்வ்வ்...)

"டேட்டிங்கா சார்? நான் கொய்யா மரத்தை மெரினா பீச்சுக்கு டேட்டிங் கூட்டிகிட்டுப் போவேன் சார்"

"வெரி குட். அது ஏன் மெரினா பீச்?"

"அங்கதான் சார், தண்ணி, காத்து எல்லாம் நெறையக் கெடைக்கும்"

"ஓகே. உங்களுக்குப் பிடிச்ச பாட்டு ஒண்ணு பாடுங்க"

"இப்பிடி திடீர்னு கேட்டா எப்படி சார்"

"பரவாயில்ல. எதாவது ஒரு பாட்டு பாடுங்க"

"கல்யாணம்தான் கட்டிகிட்டு ஒர்டிப் போலாமா...
ஓடிப் போய்த்தான் கல்யாணத்தைக் கட்டிக்கிடலாமா..."

"சூப்பர் சாந்தி... சூப்பர். இப்ப உங்களுக்குப் பிடிச்ச பாடல் வந்துகிட்டே இருக்கு"

இதேபோல், மற்றொரு நாள் மற்றொரு நிகழ்ச்சி.

"உங்களுக்கு எதிலே பறந்து போறது பிடிக்கும்? உங்களுக்கன் ஆப்ஷன்ஸ் (options) a.பாய், b. ஸ்பூன் c.கரண்டி"

"எனக்குக் கரண்டிதான் மேடம் பிடிக்கும்?"

"சொல்லுங்க, ஒங்களுக்கு ஏன் கரண்டிலே பறக்கறது பிடிக்கும்?"

"கரண்டிலேதான் நல்லா உக்கார்ந்துகிட்டு சூப்பராப் பறக்கலாம்"

"ரொம்ப நன்றி. இப்ப ஒங்களுக்குப் பிடிச்ச பாடல் ஒண்ணு வந்துகிட்டே இருக்குது"

(இவையெல்லாம் வெறும் மொக்கை ஒலி/ஒளிபரப்புகளா அல்லது பின் நவீனத்துவ வகையிலும் வருவதற்கான் வாய்ப்புகள் இருக்கா? யாராவது சொல்ல முடியுமா?)