Monday, August 03, 2009

கலக்கலா ஒரு கலாச்சாரம்

பெர்க்ளே யூனிவர்சிட்டியின் அந்த மையமண்டபத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த கூட்டத்தில் கபிலனைக் கண்டு பிடிப்பது அவ்வளவு சிரமாயிருக்கவில்லை வீழிநாதனுக்கு. கபிலனை உணவகத்திகு அழைத்து சென்றார்.

“என்ன கபிலன். கேள்விப்பட்டேன். அடுத்த வாரம் சென்னை போகப்போறதா...”
“ஆமா ஐயா. என்னுடைய ஆராய்ச்சியை முடிச்சுட்டேன். அடுத்து என்ன பண்ணப் போறதுன்னு யோசிச்சிட்டிருக்கேன்.”

“ஏன். உங்கள மாதிரி ஆட்களை எங்களோட கலிபோர்னியா யூனிவர்சிட்டிலே கொத்திக் கொண்டு போய்விட மாட்டோமா? இன்னமும் ரெண்டு நாள்லே உங்களோட பேசறேன் அது சம்பந்தமா. நீங்க இங்க இருந்த அஞ்சு வருஷதுல “தமிழர் பண்பாடு” பற்றி ஆராய்ச்சி பண்ணினது பெரிய விஷயம் இல்லை. ஆனா அத பத்தி சமயம் வரும்போதெல்லாம் இங்க இருக்கற மக்கள்ளுக்கெல்லாம் எடுத்துச் சொன்னீங்க பாருங்க. அது பெரிய விஷயம். அதுவும் சான்டாக்ளரால மட்டும் கிட்டத்தட்ட எழுவது நிகழ்ச்சிகள்ல பேசியிருக்கீங்க. எப்படி முடிஞ்சுது இதெல்லாம்?”

“ஐயா! உன்மையிலேயே நான் பண்ணின ஆராய்ச்சி பத்தி எல்லோரோடையும் பகிர்ந்துக்க்ணும்னு ஒரு ஆர்வம்தான். இந்த ஆராய்ச்சியிலே நான் படிச்சுத் தெரிஞ்சுகிட்டதைவிட, பட்டுத் தெரிஞ்சுகிட்டதுதான் அதிகம்.”

“அப்படியா! கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்க கபிலன்.”

“ஐயா, என்னோட இந்த ஆராய்ச்சிக்கு ரொம்ம்பவுமே உதவியாய் இருந்ததுன்னா, அது என் குடும்பம்தான். தமிழர் பண்பாடு அப்படின்னு சொன்னா, அதுக்கு உதாரணமா எங்க குடும்பத்தப்பத்தி சொல்லலாம். அதாவது, “விருந்தோம்பல்”, “அடுத்தவங்களுக்கு உதவி செய்யுறது”, “சுற்றுபுறத்தை சுத்தமா வச்சிக்கிறது” அப்படின்னு பல உதாரணாம் சொல்லலாம்.
எங்க வீட்ல எந்த நேரத்துலே எந்த உறவுக்காரங்க வந்தாலும், சாப்பிடாமப் போக முடியாது. எங்கப்பா விட்டாலும் எங்கம்மா விட மாட்டாங்க. அதே மாதிரி, எங்க பாட்டி, பள்ளிக் கூடத்துக்குப் போனதில்லையே ஒழிய, எல்லா இதிகாசமும், இலக்கியமும் படிச்சவங்க. இலக்கியத்திலே பாதி எனக்குச் சொல்லிக் கொடுத்ததே அவங்கதான். ஒவ்வொரு வாரமும், சிவ்வயும், வெள்ளியும், அவங்க பூஜை பண்ணிட்டு, எனக்கும் என் தங்கைக்கும், எங்க சித்தப்பா பசங்களுக்கும் இதெல்லாம் அழகாச் சொல்லிக் கொடுப்பாங்க. என்னோட தங்கை பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டின்னு எந்தப் போட்டியாயிருந்தாலும் கலந்துகிட்டு பரிசு வாங்கிட்டு வத்துடுவா. அவ்வளவு ஆர்வம். எங்கப்பா வியாபரத்திலே நல்லா சம்பாதிகிறார். ஆனா ஊதரித்தனமா செலவு செய்யறது பிடிக்கவே பிடிக்காது. அதே சமயம், சம்பாதிக்கிறதுல ஒரு பங்கை தனம், தர்மத்துக்கும் செலவு பண்றதுக்குத் தயங்கவே மாட்டார்.”

“கேட்கவே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு கபிலன். நானும் அடுத்த மாசம் சென்னக்கு வருவேன். வந்தால் உங்களைக் கண்டிப்பா வந்து சந்திப்பேன். வாழ்த்துக்கள்.”

காத்தே பசிபிக் விமானம் சென்னையத் தொட்டபோது அதிகாலை மணி 2. விமான நிலையத்திற்கு யாரையும் வரவேண்டாமென்று சொன்னத்தும் நல்லதாகப்பட்டது கபிலனுக்கு. கஸ்டம்ஸ் சோதனைகள் முடிந்து வீட்டிற்கும் நுழைய காலை மணி ஆறாகி விட்டது.

“என்ன அப்பா. ஒரே அமக்களமா இருக்கு. அமெரிக்காவிலேர்ந்து வர்றது பெரிய விஷயமா?”

“கபிலா. இது உனக்காக மட்டுமில்லை. நம்ம ரித்திஷுக்குகாகவும் தான். அவனுக்கு இன்னிக்குப் பர்த்டே.”

“ஆஹா ரித்திஷ். வா...வா... பிறந்தநாள வாழ்த்திக்கள். எப்படிடா படிக்கிறே?”

“மாமா. அசையாதே. சுட்டுறுவேன்.”

“டேய் . என்னடா இது நிஜத் துப்பாக்கி மாதிரியே இருக்கு?”

“மாமா. இது தாத்தா எனக்கு நேத்திக்கு வாங்கிக் கொடுத்தாங்க.ஐநூறு ரூபாய். எனக்கு இன்னிக்கி பர்த்டே. என்னோட ஃப்ரண்ட்ஸுக்கெல்லாம் சாயங்காலம் பார்ட்டி. அவங்களுக்க்கெல்லாம் ரிடர்ன் கிஃப்ட் கொடுக்கணும். எதுனாச்சும் வாங்கிட்டு வந்திருக்கியா?”

“கொஞ்ச நேரம் பொறு. குளிச்சிட்டு வந்து கிஃப்டெல்லாம் எடுத்துத் தர்ரேன்.”

“கபிலா வாடா. எப்டிடா கண்ணு இருக்கே. பாத்து எத்தினி நாளாச்சு. குளிச்சிட்டு வந்து சாப்பிடு. குட்டித் தூக்கப் போடு. அப்புறமா கடைக்குப் போய், மெழுகுவர்த்தி. கேக்கு, பர்கர், பீஸா, கோக்கு, சமோசா, எல்லாம் வாங்கிட்டு வந்திடு”

“யாருக்கும்மா”

“எல்லாம் ரித்தீஷோட ஃப்ரண்ட்ஸுக்குத்தான். இன்னிக்கி சாயந்தரம் பர்த்டே பார்ட்டி இல்லியா?”
“கேக்கு, பர்கர், பீஸா, கோக்கு, சமோசா இதெல்லாம் ஒரே நேரதிலே பசங்க சாப்பிட்டா என்னவாகும்”

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுடா. அவுங்களுக்கு இதெல்லாம் பழகிப் போயிருக்கும்”

“சரி. சரி. கோயிலுக்குப் போயிட்டு வந்தாச்சா?”

“இல்லைப்பா. இன்னம் இல்லை; இன்னிக்கி டீ.வியிலே நடிகை தயனநாரா பேசுனாங்க. அவங்களோட யார் வேணும்னாலும் பேசலாம். தாத்தா போன் போட்டுப் பேசிச்சு. கொஞ்ச நேரத்திலே ஒளிபரப்பாகப் போவுது.”

“அப்படியா! தாத்தா என்னம்மா பேசினார்?”

““என்ன பேசறது. அவருக்குக் கையே ஓடலை. லைன் கெடச்சதே பெரிய விஷயம். ஒங்களோட பேசணுன்னு ரொம்ப நாளா நெனைச்சேன். நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” அப்படீன்னு சொல்லிட்டுப் போனை டொக்குன்னு வெச்சிட்டார்.”

“அப்படீன்னா சாயந்திரம் கோயிலுக்குப் போறோமா?”

“சாமி எங்கப்பா போகப் போகுது? அடுத்த வருஷம் பாத்துக்கலாம். பர்த்டே பார்ட்டிக்கு எற்பாடு பண்ணனும்லே.”

“அண்ணா, எப்படிண்ணா இருக்கே. நல்ல வேளை நீ இன்னிக்கி வந்தே. நாளைக்கு என்னை கார்லே எக்மோர் கொண்டு போய் விடறியா? அழகி போட்டி, செமி ஃபைனல்லே ஜெயிச்சுட்டேன். அடுத்தது ஃபைனல்ஸ்தான்.”

“என்னப்பா இது? என்னமோ அழகிப் போட்டி அது இதுங்றா”

“ஆமாம்ப்பா. இப்பவே மிஸ்.அண்ணாநகர் ஆகிட்டா. அடுத்து ஜெயிச்சா, மிஸ்.சென்னைதான். அப்புறம் நமக்கு எல்லாம் பெருமைதானே.”

“சரி.சரி. பாட்டி எங்கே? பாட்டியைப் பாக்கவேயில்லையே.”

“பாட்டி பாரு டீ.வி. ரூமுக்குள்ளே இருக்கு”

என்னது டீ.வி ரூமா? என்ன பாட்டி, ரொம்ப வேலையோ?

“ஆமாண்டா. நேத்திகே, “மொட்டுக்கள்” பாக்கலை. கரெக்டா எழு மணிக்கு உங்க சித்தப்பா வந்து கழுத்தறுத்துட்டான். நல்ல வேளை. மறுநாள் காலைலே மறு ஒளிபரப்புறான். “மொட்டுக்கள்” ரொம்ப சூப்பராப் போவுது. ஒரே சஸ்பென்ஸ். ராஜாவைக் கொலை பண்ணினது யாருன்னே தெரியலை. அவன் பொண்டாட்டி சந்தியா? இல்லை. அவளோட கள்ளக் காதலன் சாரதியா. இல்லை ராஜாவோட அண்ணன் மூர்த்தியா? யாருன்னே கண்டு பிடிக்க முடியலை.”

“அது சரி, எப்படி உங்க ராமாயணம். மகாபாரதம் எல்லம் போகுது. பெரியபுராணம் மனப்பாடம் பண்ணனும்னு சொல்லிக்கிட்டே இருப்பீகளே. முடிச்சிட்டீங்களா?”

“இல்லைடா. ரெண்டு சீரியல் பாக்கறதுக்குள்ளேயே களைப்பா ஆயிடுது. அதுக்கே நேரம் பத்த மாட்டேங்குது”

“கபிலா போன அடிக்குது பாரு. அமெரிக்காலேர்ந்துன்னு நெனைக்கிறேன்”

“கபிலா. நாந்தான் வீழி பேசறேன். சென்னை போய்ச் சேர்ந்தாச்சா? முக்கியமான விஷயம். கலிபோர்னியா யூனிவசிட்டிலே ஒரு இடல் உனக்காகப் பிடிச்சிட்டேன். அடுத்த மாசம் சேரனும். ஆனா, இன்னிக்கே உன்னோட சம்மதம் வேனும். வெளீநாட்டு மக்களுக்கு நம்ம பண்பாடு, கலாசாரம்னு சொல்லிக் கொடுத்த உங்களை விட நாங்க தயாரா இல்லை. என்ன சொல்லறே?””

“ஐயா. நீங்க சொல்றது உண்மைதான். ஆனா, என்னை மன்னிக்கணும். நான் இப்ப உள் நாட்டிலே பண்ண வேண்டிய வேலையே நெறைய இருக்கு.”

-----0-----
- சிமுலேஷன்