Tuesday, September 22, 2009

எங்க வீட்டு கொலு


எங்க வீட்டு கொலு










Saturday, September 12, 2009

ஸ்டண்ட் மாஸ்டரிடம் கற்றுக்கொண்ட சங்கீதம்


1934 ஆம் வருடம். "ஸ்ரீநிவாச கல்யாணம்" என்ற திரைப்படம் தயாராகிக் கொண்டிருக்கின்றது. படப்பிடிப்பும் நடக்கும்போதே, மரத்தடியில் ஆர்கெஸ்ட்ராக கலைஞர்கள் உட்கார்ந்து இசைக் கருவிகளை வாசித்துக் கொண்டிருக்கின்றார்கள். படப்பிடிப்பு நல்ல முறையில் நடை பெற்றாலும், பாடலில் இடையிலோ, இறுதியிலோ ஏதேனும் ஒரு சிறிய தவறு ஏற்பட்டாலும், படப்பிடிப்பை மீண்டும் முதல் சீனிலிருந்து துவங்க வேண்டும். விஷ்ணுவாக முக்கியப் பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பி.எஸ்.ஸ்ரீநிவாச ராவ் என்பவரே இந்தப் படத்துக்கு இசை அமைப்பாளர். இசைக் குழுவை சேர்ந்த எவரோ ஒருவர் ஒரு சிறிய தப்புச் செய்துவிட, இசைப் புலமை கொண்ட ஸ்ரீநிவாச ராவின் காதில், அந்த அபஸ்வரம் ஒலித்து விடுகின்றது. உடனே அவர், " கட்" என்று சொல்கின்றார். ஆனால், திரைப்பட இயக்குநரோ இதனைக் கவனிக்காமல், படத்தை எடுத்து கொண்டிருக்கின்றார். எடிட்டர் இறுதியில் என்ன செய்தாரென்று புரியவில்லை. மிண்ட் சாலையில் அமைந்த "க்ரௌன்" தியேட்டரில் ஸ்ரீநிவாச கல்யாணத்தின் முதல் காட்சி. ஒரு கட்டத்தில் ரசிகர்கள் விழுந்து, விழுந்து சிரிக்கின்றார்கள். ஆமாம். தமிழில் பாடிக்கொண்டிருக்கும் விஷ்ணு திடீரென்று ஆங்கிலத்தில், "கட்" என்று சொன்னால் எப்படியிருக்கும்? வேப்பேரி, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீநிவாசா சினிடோன் ஸ்டுடியோவிற்கு தகவல் உடனே பறக்கின்றது. காற்றைவிட வேகமாகச் சென்ற டெக்னிசியன் ஒருவர் சம்பந்தப்பட்ட ஃபிலிம் ரீலை வெட்டி எறிகின்றார். மீண்டும் வெளியான இந்தப் படத்தில், இந்த இடத்தில் இப்படி ஒரு இடைவெளி ஏற்பட்டதை அந்தக் காலத்தில் யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவேயில்லை.

"மின்னல் கொடி" 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே.அமர்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ்.ஸ்ரீநிவாச ராவ், எஸ். பாட்சா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் ஸ்ரீநிவாசராவுடன் (போலீஸ் அதிகாரி), கே. டி. ருக்மணி (மின்னல் கொடி, மோகினி), பாட்சா (வில்லன்), கொக்கோ (காமெடி நண்பன்) ஆகியோர் நடித்தனர். மோகினி என்ற இளம்பெண் மின்னல் கொடி எனும் புரட்சிக்காரன் சாகும் தருவாயில் தன் கடமைகளை நிறைவேற்றுமாறு கேட்க, முகமூடி ஆணுடை தரித்து தொடர்ந்து மின்னல் கொடியாகி எதிரிகளை அழிக்கிறாள். தீயவர் அழிந்து காதலர் இணைவதோடு படம் சுபமே முடிகிறது.

பஸ்மாசூர மோகினி 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செல்வரத்தினம் பிள்ளை, பி. எஸ்.ஸ்ரீநிவாச ராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்."பாக்ய லீலா" 1938 ஆம் ஆண்டு மீண்டும் கே. அமர்நாத் இயக்கத்தில் வெளிவந்த வெளிவந்த இன்னொரு தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்திலும் பி. எஸ்.ஸ்ரீநிவாச ராவ், எஸ்.ஆர்.பத்மா மற்றும் கே.டி.ருக்மிணி ஆகியோருடன் கதாநாயகனாய் நடித்தார். "ஜெய பாரதி" 1940 ஆம் ஆண்டு ராஜா யாக்னிக் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ்.ஸ்ரீநிவாச ராவ், எம். ஏ. ராஜமணி மற்றும் பலரும் நடித்துள்ளனர். "நண்பன்" 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், டி. எஸ். பாலைய்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர். அவர் இயக்கிய மற்றொரு படம் ஷாந்தா (1942). "வீர வனிதா" 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நனுபாய் பட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ், சகாதேவன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். "ஜீவ ஜோதி" 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. கே. முல்தணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ஸ்ரீநிவாச ராவ் இயக்குநர், இசை வித்தகர் மட்டுமல்லாது ஒரு சிறந்த ஸ்டண்ட் கலைஞராகவும் இருந்து ஒரு பன்முககக் கலைஞராக விளங்கினார். துக்ளக் இதழில் தொடர் கட்டுரை எழுதிய முக்தா ஸ்ரீநிவாசன் அவர்கள், ஸ்ரீநிவாச ராவின் ஸ்டண்ட் படங்கள் குறித்து விபரமாக் எழுதி இருந்ததாக ஞாபகம். என்னென்ன படங்கள் என்று நினவில்லை.

மெல்லிசையில் புலமை பெற்ற ஸ்ரீநிவாச ராவ், எம்.எஸ் அவர்களுக்குப் பல் வேறு ஹிந்துஸ்தானி பஜன்ஸ் சொல்லிக் கொடுத்துள்ளார். மேலும் பல்வேறு சூர்தாஸ் பஜன்ஸ்க்கும் இசையமைத்துள்ளார். இவருடைய பஜனனகளில் யாரும் கேள்விப்படாத பல புதுமையான மற்றும் இனிமையான் ராகங்களைப் பயன்படுத்தினார். உதாரணமாக, பட்தீப், கௌன்ஸி கானடா, பஞ்சம ராகேஸ்ரீ, மிஸ்ர பத்மாவதி ஸாரங், ஜயந்த மல்ஹார், மிஸ்ர ஜோகியா, திலக் காமாஜ் போன்ற இந்த இனிமயான ராகங்களில் அமைந்த பாடல்களின் அழகினை வார்த்தைளில் விவரிக்க முடியாது.

தனது இறுதி நாட்களில், மயிலை பாரதீய வித்யா பவனில் ஹிந்துஸ்தானி பஜன்ஸ் சொல்லிக் கொடுத்து வந்தார். டாக்டர். மாதங்கி ராமக்ருஷணன், தங்கம் அய்யா துரை, ஒய்.ஜி.சுந்தர் (தபலா) ஆகியோர் இவரிடம் பயின்றும், இசைத்தும் வந்தனர். சமீபத்தில் 1988-90 களில் நானும் இங்கே ஒரு உறுப்பினன். அப்போது ஸ்ரீநிவாச ராவ் அவர்களின் அருமை, பெருமையெல்லாம் தெரியவில்லை. வெகு நாட்களுக்கும் முன்பு, 90கள் என்று நினைக்கின்றேன் ஹிந்து நாளிதழில் அவரை பற்றி விரிவான் கட்டுரை ஒன்று வந்திருந்தது.அதையும் பத்திரப்படுத்தாமல் விட்டேன். சில நாட்களுக்கும் முன்பு முக்தா ஸ்ரீநிவாசன் அவர்களின் புத்தகம் படிக்கும்போது, ஸ்ரீநிவாச ராவ் அவர்களைப் பற்றி ஒரு பதிவிட வேண்டும் என்று தோன்றியதால் எழுந்த பதிவு இது. அவரை பற்றி மேலதிக விபரங்கள் ராண்டார் கை அவர்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். அவரை எப்போதாவது பார்த்தால் கேட்க எண்ணியுள்ளேன். அது வரை, வலைப் பதிவர்கள் யாரேனும் மேலதிக விபரங்கள் மற்றும் புகைப்படங்கள் தெரிந்தால் / இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். மேலும் 88-90களில் என்னுடன் பாரதீய வித்யாபவனில் ஸ்ரீநிவாச ராவ் அவர்களிடம் பஜன் கற்றுக் கொண்ட அலம்னிகளும் தங்களிடம் ஏதேனும் ஒலிப் பேழை இருந்து தகவல் தெரிவித்தால் தன்யனாவேன்.

ஸ்ரீநிவாச ராவ் அவர்கள் இசையமைத்த 'பட்தீப்' ராகத்தில் அமைந்த பஸ்வேஸ்வரவசன் அவர்களின் பஜன் ஒன்றினை நான் பாடி தரவேற்றம் செய்ய எண்ணியும், ராண்டர்கையையும், ஒய்.ஜி.சுந்தர் அவர்களையும் தொடர்பு கொண்டு ஸ்ரீநிவாசராவ் அவர்களது புகைப் படத்தையும் பெற்று இந்த இடுகையை முடிக்க வேண்டுமென்று வெகுநாட்களாக இந்த இடுகை முற்றுப் பெறாமலே இருந்தது. இரண்டு நோக்கங்களும் தள்ளிப் போய்க் கொண்டேயிருந்ததாலும் இதற்கு மேலும் தள்ளிப் போடக்கூடாதென்றெண்ணியதாலும் இன்று இந்த இடுகையை முடிவு செய்து வெளியிடுகின்றேன்.

புகைப்படமும், ஒலிப்பதிவும் கிடைக்கும்போது அவற்றைப் பின்னொரு நாளில் வலையேற்றுகின்றேன்.


http://my-mylapore.blogspot.com/ என்ற வலைப்பதிவிலிருந்து இந்தப் புகைப்படத்தினை எடுத்து இங்கு இணைத்துள்ளேன். ஸ்ரீந்னிவாசராவ் ஹார்மொனியம் வாசிக்கின்றார்.

- சிமுலேஷன்