Wednesday, February 24, 2010

தலைகீழ் சங்கீதமும் "Constantinople" RTPயும்


கடலூர் சுப்ரமணியம் என்ற இசைக்கலைஞர் ஒரு வாக்கேயக்காரரும் கூட. அதாவது பாடல்களெல்லாம் இயற்றி, அதனைக் கச்சேரியில் பாடுவதிலும் புலமை பெற்றவர். 72 மேளகர்த்தா ராகங்களிலும் பாடல்களை இயற்றிய ஒரு சிலரில் அவரும் ஒருவர். மோஹரஞ்சனி, ஹம்ஸவாகினி, த்வைத சிந்தாமணி, மனேஹம், மேச காந்தாரி, வர்ணப்ரியா, கதரமு போன்ற அபூர்வ ராகங்களிலும், மேலும் மற்றைய ராகங்களிலும் 500 பாடல்களுக்கு மேல் இயற்றியுள்ளார். பாடலீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானின் பெயரைக் கொண்டு 'பாடலீச' என்ற முத்திரையை இவர்தம் கீர்த்தனைகளில் வைத்துள்ளார்.



கடலூர் சுப்ரமணியம் அவர்கள் எனது தந்தையாருடன் அண்ணமலைப் பல்கலைகழகத்தில் ஒன்றாகப் படித்தவர். இருவரும் சேர்ந்து ஒரு முறை "தலைகீழ் சங்கீதம்" என்ற புதுமையான நிகழ்ச்சி நடத்தினார்கள். பிறகு "Constantinople" என்ற பதத்தினை எடுத்துக் கொண்டு, அதனை RTP ஆகவும் பாடி கரகோஷம் வாங்கினார்களாம். இதனை அவரே தமது "இசைத் தென்றல்" என்ற புத்தகத்தில் எடுத்துக் குறியுள்ளார். கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கும் மேலான அந்தப் புத்தகத்தினை பார்க்கும்போது அப்பாவின் நினைவு வருகின்றது.

 
- சிமுலேஷன்

எங்கும் நிறை நாதப்ரம்மம்


இசையரசி எம்.எஸ் அவர்களைப்பற்றிப் பல கட்டுரைகள் வந்துள்ளன. படிதுள்ளேன். ஆனால் அவரது வாழ்க்கை வரலாறு, அதுவும் தமிழில் சமீபத்தில்தான் படித்தேன். எம்.எஸ் அவர்களது குடும்ப்ப நண்பர் சங்கர் வெங்கட்ராமன் எழுதியது. இவர் 'ஸரிகமபதநி' என்ற இசையிதழுக்கும் ஆசிரியராகவும் உள்ளார்.


எம்.எஸ் அவர்களைப்பற்றி மட்டுமல்லாது, அவரது தாயார் வீணை சண்முகவடிவு அவர்களின் ஆரம்பகால நாட்களிலிருந்தே துவங்குகின்றது புத்தகம். தனது மகளை ஒரு பெயர்பெற்ற இசைக் கலைஞராக்க வேண்டுமென்ற ஒரு வித வைராக்கியத்துடன் அவரைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னிறுத்துகின்றார். அவர் மிகவும் எளிய பின்புலத்திலிருந்து வாழ்க்கையைத் துவக்கியதாகத் தெரிகின்றது. காலை எழுந்தவுடன் நாட்டுச் சக்கரை கலந்த கொத்தமல்லிவிதை காப்பிதான். நிதி நிலைமையைப் பொருத்த மட்டில், பொங்கி வழியாவிட்டாலும், அந்த வீட்டில் இசை வெள்ளம் சதாசர்வ காலமும் பொங்கிப் பிரவகித்துக் கொண்டுதான் இருந்ததாம்.


குஞ்சம்மாள் என்று இளமையில் அழைக்கப்பட்டவர், கோணவகிடு எடுத்துத் தலை சீவியிருப்பதனையும், மற்றைய அலங்காரங்களையும் சுயவர்ணனையாக எம்.எஸ்ஸே சொல்வதாக இருப்பது ஒரு சுவையான பத்தியாகும்.


எளிமையாக இசை வாழ்வத் துவக்கிய எம்.எஸ் அவர்கள் இன்று உலகப் புகழ்பெற்ற கலைஞராக மாறியதில் பெரிதும் பங்கு வகித்தவர் அவரது கணவர் டி.சதாசிவம் அவர்கள். அவரைப்பற்றியும் இந்தத் தம்பதியினர் "கல்கி" இதழ் உருவாக எவ்வளவு பாடுபட்டனர் என்பதனையும் "கல்கி பிறந்த கதை" என்ற அத்தியாயம் விரிவாக எடுத்துரைக்கின்றது.



"சேவாசதனம்" "சகுந்தலை", "சாவித்ரி", "மீரா" ஆகிய படங்கள் இவரது பாடல்லுக்காக எப்படி வெற்றிகரமாக ஓடின என்ற விவரங்கள் தெரிய வருகின்றன. (1945ல் தீபாவளி ரிலீசாக வெளிவந்திருந்த "மீரா" படத்தில் எம்.ஜி.ஆரும் நடித்திருக்கும் தகவல் ஒரு புது விஷயம்.) சாவித்ரி படப்பாடல்களை கேட்பதற்காகவே தாம் பலமுறை அப்படத்தினைத் தியேட்டரில் பார்க்கப் போனதாகச் சொன்னவர் ஸர்.சி.வி.ராமன் அவர்கள்.



தனது வசீகரக் குரலால் மக்கள் மனதை மட்டும் மயக்கவில்லை. மக்கள் பயனுறும் வகையிலே பல்வேறு நிதிக் கச்சேரிகள் நடத்தி அதில் வரும் வருமானத்தின் பெரும்பகுதியினை சமூகத் தேவைகளுக்காக நன்கொடையாக அளித்துள்ளது பற்றி பல்வேறு உதாரணங்களுடன் எடுத்துக்காட்டியுள்ளார் ஆசிரியர். இந்த சேவைகளுக்காக இவர் பெற்ற விருதுக்களும் (மாக்சேசே போன்ற) மீண்டும் சமூகத்திற்கே திருப்பிவிடப்பட்டதாகத் தெரிகின்றது.

ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார், கல்கி, சதாசிவம், ரசிகமணி டி.கே.சி ஆதரவுடன் துவக்கப்பட்ட த்மிழிசை இயக்கத்துக்கு இவர் ஆற்றியுள்ள பங்கு மகத்தானது. கல்கியின் தமிழிசைக்கு ஆதரவான் கட்டுரைகளையெல்லாம் தொகுத்து, 'சங்கீத யோகம்' எனும் தலைப்பில் சின்ன அண்ணாமலை அவர்கள் தமது 'தமிழ் பண்ணை'ப் புத்த்கமாக வெளியிட்டார். அதிலிருந்து சில துளிகள் இந்தப் புத்தகத்தில் மேற்கோள் காட்டியுள்ளார்.

"தமிழிசை இயக்கத்துக்கு ஆதரவு தந்து உதவி புரிந்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கத்தான் இருக்கிறார்கள் எனினும், தமிழிசை இயக்கம் மிகத் தீவிரமான் எதிர்ப்புக்கு உள்ளாகியிருந்தபோது, அது அடியோடு விழுந்துவிடாமல் தாங்கி நின்று நிலை நாட்டியவர்கள் யார் என்பதை உண்மையாகச் சொல்ல வேண்டுமானால், என்னுடைய நண்பர் ஸ்ரீ.சதாசிவமும், அவருடைய மனைவி ஸ்ரீமதி.எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களும்தான் என்று சொல்ல வேண்டும்."




எம்.எஸ் அவர்களின் இசையுலகப் பணிகள், ஐ.நா உள்பட மற்றைய வெளிநாட்டுப் பயணங்கள், அவர் பெற்ற விருதுகள், அவரைப் பற்றிய மற்ற புகழ் வாய்ந்த வித்தகர்களின் பாராட்டுரைகள், அரிய புகைப்படங்கள்  அடங்கிய சங்கர் வெங்கட்ராமன் அவர்கள் எழுதியுள்ள எம்.எஸ் அவர்களின் இந்த வாழ்க்கை வரலாறு இசைப்பிரியர்களைப் பெரிதும் மகிழ்விக்கும்.


தலைப்பு:         எங்கும் நிறை நாதப்பிரம்மம்
ஆசிரியர்:        சங்கர் வெங்கட்ராமன்
பதிப்பாண்டு: 2006
வெளியீடு:      ஸரிகமபதநி ஃபவுண்டேஷன், சென்னை - 600015
பக்கங்கள்:      168
விலை:             Rs.150

- சிமுலேஷன்