Wednesday, March 03, 2010

சொர்க்கமே என்றாலும் நம்மூரு போலாகுமா?. மேட்டுப்பாளையம், கல்லார்

"சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா?" என்ற பாட்டிற்கேற்ப எல்லோரும் சொந்த ஊர் என்றால் உணர்ச்சி வசப்படுவது இயற்கை. அந்த ஊர் எவ்வளவு குப்பையாக இருந்தாலும், ஊர் அபிமானம் வருவதற்குக் காரணம், நினைவலைகள், ஆட்டோகிராப்ஃப், கொசுவத்தி etc...etc.

மேற்கண்ட வகையில் நான் பிறந்து வளர்ந்த மேட்டுப்பாளையத்தின் மேல் எனக்கு ஒரு பாசம் உண்டு. கல்லூரிப் படிப்புகென்று சென்னைக்கு வந்துவிட்டாலும், பள்ளிக் காலம் முழுவதும் இங்கேதான். பள்ளிக் காலங்களில் வார விடுமுறைகளில் பெரும்பால சமயங்களில் நண்பர்களுடன் சேர்ந்து செல்லுமிடம் 'கல்லார்' ஆகும். ஆத்துப்பாலம், ஓடந்துறை மற்றும் பல பாக்குத் தோப்புக்களைத் தாண்டிச் செல்ல வேண்டும். போகும் வழியில் கடலைச் செடி பயிரிடப்பட்டிருந்தால் எடுத்துத் தின்பது. கரும்பு ஆலை ஒடிக் கொண்டிருந்தால் கரும்புச் சாறு வாங்கிக் குடிப்பது. மாந்தோப்பில் மாங்காய் அடித்துத் தின்பது. காலை ஆறு அல்லது ஏழு மணியளவில் துவங்கும் இந்த நடை பயணம், மேற்கண்ட சோலிகளையெல்லாம் முடித்துக் கொண்டு கல்லாரை அடைய ஒன்பது அல்லது பத்து மணிக்கு மேலே ஆகி விடும். அதாவது கல்லாரில் இருக்கும் அரசினர் பழப்பண்ணையை அடைய. அங்கே அனுமதி இலவசம். அங்கே மா, பலா, வாழை எனப்பட்ட உள்நாட்டுச் சரக்குகள் தவிர, மங்குஸ்தான், ரம்பூட்டான், லிச்சிஸ், பிச்சிஸ், பப்ளிமாஸ், துரியன் போன்ற மத்தியதரைக் கடல் மற்றும் கீழை நாட்டு பிரதேசப் பழங்களும் கிடைக்கும். பெரும்பாலான நேரங்களில் இவை விற்பனைக்கு வராது. 'அங்கேயே எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாமாம். ஆனால் காசு கொடுக்காமல் எடுத்து வரக்கூடாதாம்', என்று ஒரு விதி இருப்பதாக எண்ணி அபூர்வமான பழவகைகளை வெளுத்துக் கட்டுவோம்.

சில மணி நேரம் இப்படி செலவழித்த பின்னர், காட்டாற்றில் குளிப்போம். நீஞ்சவெல்லாம் முடியாது. நல்ல பசியெடுக்கும்போது பாக்கு மட்டையில் கட்டி எடுத்து வந்திருந்த கலவை சாதத்தைச் சாப்பிட்டு முடிப்போம். பிறகு தோட்டத்தை விட்டு வெளியே வந்தால் ஊட்டி மலையடிவாரத்தில் உள்ள ஒரு சின்னப் பொட்டிக்கடையில் நின்று சுக்குக் காப்பி சாப்பிடுவோம். சில சமயம் மலைப்பாதையில் கொஞ்ச நேரம் நடந்து 'பர்லியார்' வருவோம். இங்கு கிராம்பு, ஏலக்காய் முதலான பொருட்களை வாங்குவோம். பலாப்பழம் வாங்கினால் அதனை ஒரு கம்பில் கட்டித் தொங்கவிட்டு இருவராகத் தோளில் தூக்கி வருவோம். ஊருக்குள் நுழையும்போது ஏதோ காட்டுப் புலியினை வேட்டையாடித் தூக்கி வருவது போலப் பெருமையாயிருக்கும். முதலில் நடைப் பயணமாக துவங்கிய இத்தகைய பிக்னிக்குகள், சற்றே வயது வந்த பின்பு "நாள் வாடகை" சைக்கிளில். பின்னர் 'பைக்' வாங்கியபின் ஓரிரு முறை பைக்கில்.

உறவினர்கள் பெரும்பாலும் ஊட்டி சென்று சுற்றிப் பார்த்துவிட்டுப் பிறகுதான் எங்கல் வீட்டிற்கு வருவது வழக்கம். எங்களுக்கும் ஊட்டி செல்வது அவ்வளவு பிடிக்காது. (ஒரு மூணு மணி நேரத்திலேயெ மலையிறங்க மாட்டோமா என்றுதான் தோணும்.) அதனால் வருகின்ற உறவினரிகளையெல்லாம் தவறாமல் கூட்டிச் செல்லும் இடம் கல்லார்தான். அவர்களும் இந்த இடத்தை பெரிது ரசித்துப் பல நாட்கள் பேசுவதுண்டு.

கல்லார் ஆற்றிலே யானைகள் குளிப்பது சர்வ சாதாரணம். குளிப்பது இல்லை. குளிப்பாட்டபடுவது. பாகன்கள் யானையப் பக்கவாட்டில்  படுக்கச் செய்து தேய்த்துக் குளிப்பாட்டுவார்கள். ஒரு முறை அதனைப் பார்த்து ஆசைப்பட்டு நாங்களும் யானனயைக் குளிப்பாட்டலாமாவென்று கேட்க, பாகனும் சம்மதம் கொடுத்து விட்டார். தேங்காய் நாரை எடுத்துக் கொண்டு யானனயின் இடுப்பைத் தேய்க்க அது படக்கென்று எழுந்து நின்றுவிட்டது. பயந்தே போய்விட்டோம். கிச்சுக்கிச்சு மூட்டிவிட்டேன் போலிருக்கு.
(புகைப்படங்கள் 1982 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் எடுக்கப்பட்டவை. படத்தின் மீது கிளிக் செய்து பெரிதுபடுத்திப் பார்க்கவும்)


மேட்டுப்பாளையத்தைபற்றிப் புதிதாக ஏதாவது விஷயம் இருக்குமா என்று கூகிளிட்டுப் பார்த்ததில் மேட்டுப்பாளையத்திற்கென்றே இணையத்தில் தனியான ஒரு தளம் இயங்குவது ஆச்சரியமான விஷயமாக இருந்தது. அன்பர் வினோத்பாபு இதனை நடத்தி வருகின்றார். வெறும் விவரண தளமாக மட்டுமல்லாமல், பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படும் குழுமங்களும் இருக்கும் தளமாக இருக்கின்றது இது. (உருளைக் கிழங்கு, பாக்கு, பூண்டு ஆகியவற்றின் மார்க்கெட் நிலவரங்கள், நாய்க்கடி வைத்தியம், காரமடை தேர் போன்ற பலதரப்பட்ட விஷயங்கள்).

ஏப்ரல் மாதத்தில், அக்ரஹாரத் தெருவில் நடைபெற்று வந்த ஸ்ரீராமநவமி கச்சேரிக்கு குடும்பத்தோடு செல்வது வழக்கம் ஸ்ரீராம நவமிக் கச்சேரியினப்ப்பற்றி முன்னமே இந்தப் பதிவில் எழுதியுள்ளேன். அப்புறம் பவானி ஆற்றங்கரை அமைந்திருக்கும் சுப்ரமணியசாமி கோயிலுக்கும் அடிக்கடி செல்வது வழக்கம். அங்கு பல்வேறு விழாக்கள நடைபெறும். திருமுருக கிருபானந்த்த வாரியார், புலவர் கீரன் ஆகியோர்களது தொடர் சொற்பொழிவு நடைபெறுவது உண்டு. வாரியார் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் சிறார்களுக்கு 'ஆன் த ஸ்பாட்' பரிசளிப்பார். 

இந்தக் கோயிலின் பின்னால் மலையிலிருந்து வந்த புது வெள்ளம் பவானி ஆற்றில் சிலு, சிலுவென்று அற்புதமாக ஓடும். பம்பாய் மாமா இங்கு வந்தால் தவறாமல் ஆற்றுக்குக் குளிக்க அழைத்துச் செல்வார். வித விதமான சைஸில் கூழாங்கற்கள் கிடைக்கும். மாரியம்மன் திருவிழா வாணவேடிக்க வெகு விமரிசையாக நடைபெறும். இதெல்லாம் இப்போது நடைபெறுகின்றதா என்று தெரியவில்லை. ஆனால் 20-25 வருடங்கள் கழித்தும் மாறாமலிருப்பது மலஜல நாற்றம். சுற்றுப்புறச் சுகாதாரத்திற்கும், சுத்தத்திற்கும் மேட்டுப்பாளைய மக்களுக்கும்  வெகு தூரம்.

20-25 வருடங்கலள் கழித்து குடும்பத்துடன் சொந்த ஊருக்குச் சென்றால், மேட்டுப்பாளையம் வெகுவாக மாறியிருப்பது தெரிந்தது. மாற்றம் என்னவென்றால் நிறையக் கடைகள், கட்டிடங்கள்தான். நாங்கள் குடியிருந்த அண்ணாஜிராவ் ரோடு அடையாளம் தெரியவில்லை.

 
(ஒரு காலத்தைய KMS தியேட்டர், பின்னர் சிவரஞ்சனியாக)
  
(சமீபத்திய அண்ணாஜிராவ் ரோடு)
 
(நாங்கள் குடியிருந்த சுப்பையர் வீடு)

"எந்த ஊரும் டெவெலப் ஆகிவிட்டது", என்று சொன்னால், எனது கஸின் உடனே, "என்னடா டெவெலப் ஆகிவிட்டது, டெவலப் ஆகிவிட்டது என்று சொல்கிறீர்கள். கேட்டால் நிறையக் கடை, கண்ணி வந்துட்டுதும்பீங்க. அதைத்தவிர அதே கொசு, அதே சாக்கடை, டிராபிக் ஜாம், ஹாரன் சப்தம் எல்லாமே அப்படியேதானே உள்ளது?'" என்பான். அவன் சொல்வது  மேட்டுப்பாளையத்தைப் பொறுத்தவரையில் நூற்றுக்கு நூறு இன்றும் உண்மையாகவே உள்ளது.

- சிமுலேஷன்